Last Updated : 02 Mar, 2016 11:45 AM

 

Published : 02 Mar 2016 11:45 AM
Last Updated : 02 Mar 2016 11:45 AM

பட்ஜெட் தகவல்கள்

நாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் தயாரிக்கப்படும் ஆண்டு பட்ஜெட், ஐரோப்பாவிலிருந்து பரவிய ஒரு நடைமுறை. புஷத் (Bougette) என்ற ஃபிரெஞ்சு வார்த்தையிலிருந்து உருவானது பட்ஜெட் (Budget). புஷத் என்றால் தோல் பை என்று அர்த்தம். ஒரு நாட்டின், மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும் எதிர்கால வரவு - செலவுத் திட்டமே பட்ஜெட். அந்தப் பட்ஜெட் அறிக்கையைத் தோல் பையில் வைத்து எடுத்து வந்ததால், பட்ஜெட் என்று பெயர் வந்திருக்கலாம்.

# சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் ஆர்.கே. சண்முகம், 1947 நவம்பர் 26-ம் தேதி முதல் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

# இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் முன்னாள் நிதி அமைச்சர் மொரார்ஜி தேசாய். 10 முறை அவர் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

# இந்தியாவில் முதன்முறையாகப் பட்ஜெட்டை அறிமுகப்படுத்தியது கிழக்கிந்திய கம்பெனிதான். பிரிட்டன் அரசுக்கு 1860-ல் ஏப்ரல் 7-ம் தேதி முதல் பட்ஜெட்டைக் கிழக்கிந்திய கம்பெனி கொடுத்தது. விடுதலைக்கு முந்தைய நிதி அமைச்சராக இருந்த ஜேம்ஸ் வில்சன் இந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

# மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்த முதல் இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு. 1958-59-ம் ஆண்டில் நிதியமைச்சர் பொறுப்பையும் அவர் வகித்ததால், பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார்.

# இந்த ஆண்டு பட்ஜெட் பிப்ரவரி 29-ம் தேதி லீப் நாளில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 1964, 1968 ஆண்டுகளின் லீப் நாளில் மத்திய பட்ஜெட்டை முன்னதாகத் தாக்கல் செய்தவர் முன்னாள் நிதி அமைச்சர் மொரார்ஜி தேசாய். பிப்ரவரி 29-ம் தேதி அவருடைய பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

# வழக்கமாக பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் தொடக்கத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஒரு மாத விவாதத்துக்குப் பிறகு ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய பட்ஜெட் நடைமுறைக்கு வரும். அடுத்த 12 மாதங்களைக் கொண்ட நிதி ஆண்டில் அது அமலில் இருக்கும்.

# 2001-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரத்தை மாலை 5 மணியிலிருந்து காலை 11 மணிக்கு மாற்றினார். அதற்கு முன்புவரை மாலை நேரத்தில்தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுவந்தது. இப்போது புதிய முறை பின்பற்றப்படுவதால், மாலையிலேயே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக அறிந்துகொள்ள முடிகிறது.

# மத்திய பட்ஜெட் அறிக்கையை அச்சிட ஆரம்பிப்பதற்கு முன்பு ‘அல்வா தயாரிக்கும் சடங்கு' நடைபெறும். பட்ஜெட் தயாரிப்புப் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் மத்திய அமைச்சர் அல்வா வழங்குவார். அதன் பிறகு பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் அனைவரும் தொலைத்தொடர்பு வசதிகள் எதுவும் இல்லாத, வெளியில் அறிவிக்கப்படாத ஓர் இடத்துக்குச் சென்றுவிடுவார்கள். மத்திய நிதி அமைச்சர் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய நாடாளுமன்றத்துக்குப் புறப்பட்ட பிறகே, அந்த அதிகாரிகள் வெளியே வருவார்கள்.

# இந்திய வரலாற்றிலேயே ஒரே பெண் நிதி அமைச்சர் இந்திரா காந்தி மட்டும்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x