Last Updated : 22 Sep, 2021 03:04 AM

 

Published : 22 Sep 2021 03:04 AM
Last Updated : 22 Sep 2021 03:04 AM

மாய உலகம்: ரஷ்யாவைப் படைத்தது யார்?

இந்த உலகை யார் படைத்தது? இந்தக் கேள்விக்கு டாண் என்று பதிலளிக்க ஏன் நீங்கள் இவ்வளவு தயங்குகிறீர்கள் என்று ஆச்சரியப்படுகிறார் அலெக்சாண்டர் புஷ்கின். நிஜமாகவே தெரியவில்லையா அல்லது குழப்பமா?

ஆம் என்றால் கதவைத் திறந்து வெளியே வாருங்கள். உங்கள் பார்வையில் விரிந்திருக்கும் உலகை நிதானமாக ஒருமுறை பாருங்கள். மரங்களையும் செடிகளையும் கொடிகளையும் மலர்களையும் நட்சத்திரங்களையும் நிலவையும் பாருங்கள்.

இந்த உலகை யார் படைத்தது? யாரால் இதைப் படைத்திருக்க முடியும்? இவ்வளவு கச்சிதமாக. இவ்வளவு அழகாக. இவ்வளவு உயிரோட்டத்தோடு. இவ்வளவு இயல்பாக. இவ்வளவு நுணுக்கமாக. இவ்வளவு வண்ணங்களை, இவ்வளவு வாசனைகளை, இவ்வளவு வடிவங்களை யார் படைத்திருக்க முடியும்?

ஒரு கடலைப் படைக்க வேண்டும் என்றால் அதற்கு எவ்வளவு கற்பனை தேவைப்பட்டிருக்கும்? ஒரு குருவியின் முதுகில் சிறகுகளை இணைக்கும் அளவுக்கு மென்மையான விரல்கள் யாரிடம் இருக்கும்? மீனுக்கு அதன் பளபளப்பை யார் கொடுத்திருக்க முடியும்? ஒவ்வோர் இலையையும் எடுத்து வைத்துக்கொண்டு யார் நூறு கோடுகள் வரைந்திருக்க முடியும்?

இப்படி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து படைத்து முடித்ததும், இந்தா உனக்குத்தான் இதை எல்லாம் படைத்தேன் என்று சொல்லி நம் ஒவ்வொருவருக்கும் இந்த உலகை அளித்தது யார்? இந்த அளவுக்கு அகலமான இதயம் யாருக்கு இருக்கும்? யார் படைத்த உலகில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்? யார் அளித்த மூச்சுக் காற்றை சுவாசித்துக்கொண்டு இருக்கிறோம்? யாருடைய விளைச்சலை நாம் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறோம்? யாருடைய சூரியன் நம்மை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது?

சொல்லிவிடுகிறேன். நம் உலகைப் படைத்தது கவிஞன். உயிர்களைப் படைத்தது கவிஞன். நிலத்தையும் ஆகாயத்தையும் படைத்தது கவிஞன். நாம் காணும் அனைத்தையும், நாம் உணரும் அனைத்தையும், நம்மால் காணவோ உணரவோ முடியாத அனைத்தையும் படைத்தது கவிஞன்.

‘ஹாஹா, இது நல்ல கதையாக இருக்கிறதே! நீ ஒரு கவிஞன் என்பதால் இப்படி எல்லாம் சொல்கிறாயா, புஷ்கின்?’ என்று நீங்கள் கேட்கலாம். ‘இந்த உலகை ஏற்கெனவே கவிஞன் படைத்துவிட்டான் என்றால் நீ ஏன் இன்னமும் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறாய்? ஏற்கெனவே இல்லாத எதை நீ புதிதாகப் படைத்துவிடப் போகிறாய்?’

நியாயமான கேள்வி. இதற்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஆம், நீங்கள் சொல்வது உண்மை. ஒவ்வொரு நாடும் அந்நாட்டுக் கவிஞன் படைத்ததுதான். ரஷ்யாவின் பிரமாண்டமான அரண்மனைகளை, பளபளப்பான தேவாலயங்களை, அகலமான வீதிகளை ரஷ்யக் கவிஞன் ஏற்கெனவே படைத்துவிட்டான்.

அப்படியானால் ஒரு கவிஞனாக என் வேலை என்ன? அதே அரண்மனைகளை நான் மீண்டும் இன்னொரு முறை படைக்க வேண்டுமா? அதே அழகிய வீதிகளை, அதே தேவாலயங்களை, அதே கடலை, அதே மலர்களை, அதே மரங்களை, அதே பனியை மீண்டும் பாட வேண்டுமா? இப்படி ஒவ்வொரு கவிஞனும் அதே ரஷ்யாவை மீண்டும், மீண்டும் படைத்துக்கொண்டிருந்தால் சலிப்பாக இருக்கும் அல்லவா?

அதனால் நான் புதிய ரஷ்யாவைப் படைக்கத் தொடங்கினேன். அந்த ரஷ்யாவின் வானில் அழகிய நிலா மிதந்து கொண்டிருக்கும். ஆனால், அதன் கீழே மனிதர்கள் போர்த்திக்கொள்ள போர்வை இல்லாமல் குளிரில் நடுங்கிக்கொண்டிருப்பார்கள். அழகிய தேவாலயம் இருக்கும். அதன் வாசலில் யாராவது ஏதாவது தருவார்களா என்று ஏக்கத்தோடு குழந்தைகள் காத்துக்கொண்டிருப்பார்கள்.

அந்தக் குழந்தைகளின் ஏக்கத்தை நான் எழுதுவேன். அவர்கள் யாருடைய குழந்தைகள் என்று தேடுவேன். குளிரில் ஓர் உடல் நடுங்கினால் அது எப்படி இருக்கும் என்பதை எழுதுவேன். ரஷ்ய ரொட்டியின் சுவை எப்படி இருக்கும் என்பதை எனக்கு முன்பே கவிஞர்கள் எழுதிவிட்டார்கள். அதை நான் மீண்டும் எழுத மாட்டேன். ரொட்டியை ஆசையோடு விலகி நின்று மட்டுமே பார்க்கும் மனிதர்களை இதுவரை யாரும் பாடவில்லை. நான் அவர்களைப் பாடுவேன்.

ஓ, நீ பாவப்பட்ட மனிதர்களைப் படைக்கும் கவிஞனோ என்று நீங்கள் நினைக்கலாம். இல்லை. என் குழந்தைகள் வெறுமனே ஏங்கிக்கொண்டிருக்க மாட்டார்கள். என் மனிதர்கள் வெறுமனே நடுங்கிக்கொண்டிருக்க மாட்டார்கள். நான் ஏன் இவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறேன்? என் வறுமைக்கு என்ன காரணம்? என் குழந்தைகள் ஏன் மற்ற குழந்தைகள் போல் வளமாக இல்லை? அவர்கள் பையில் ஏன் புத்தகங்கள் இல்லை? என் வீட்டில் ஏன் வெளிச்சம் இல்லை? என் அடுப்பு ஏன் சூடாக இல்லை? என் நிலை மாற நான் என்ன செய்ய வேண்டும்?

ஒரு கவிஞனாக நான் இந்தக் கேள்விகளைப் படைப்பேன். ஒரு கவிஞனாக விடையையும் அளிப்பேன். என் நேசத்துக்குரிய ரஷ்யர்களே, நீங்கள் போராடினால்தான் உங்கள் நிலை மாறும். உங்கள் ரொட்டிக்காக, உங்கள் ஆடைக்காக, உங்கள் அடுப்புக்காக, உங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் போராட வேண்டும் என்று பாடுவேன்.

என் கவிதைகளிலிருந்து போராட்டம் பிறக்கும். பேராட்டத்திலிருந்து புதிய ரஷ்யா பிறக்கும். என் குழந்தைகள் விரும்பும் ரஷ்யாவாக அது இருக்கும்.

நிலவையும் நட்சத்திரங்களையும் கடலையும் மலரையும் மலையையும் படைப்பதற்கு எவ்வளவு கற்பனை வேண்டுமோ, எவ்வளவு ஆற்றல் வேண்டுமோ, எவ்வளவு துணிச்சல் வேண்டுமோ அவ்வளவு கற்பனையை, அவ்வளவு ஆற்றலை, அவ்வளவு துணிச்சலை என் கவிதைகள் பெற்றிருக்கும்.

இதற்கு முன்பு பாடிய கவிஞர்கள் அனைவரும் அவர்கள் கண்ட ரஷ்யாவை, அவர்களுக்குப் பிடித்த ரஷ்யாவைப் படைத்தார்கள். நான் எதிர்காலத்துக்கான புதிய ரஷ்யாவைப் படைப்பேன். என் குழந்தைகளுக்குப் பிடித்த ரஷ்யாவாக அது இருக்கும்.

(அலெக்சாண்டர் புஷ்கின்

உலகப் புகழ்பெற்ற ரஷ்யக் கவிஞர், எழுத்தாளர்.)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x