Published : 24 Feb 2016 02:57 PM
Last Updated : 24 Feb 2016 02:57 PM
2016-ம் ஆண்டுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அது 366 நாட்களைக் கொண்ட லீப் ஆண்டு என்பதுதான். இதோ அடுத்த வாரம் லீப் நாளும் (பிப். 29) வரப்போகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் இந்த விநோத நாள் குறித்து, மேலும் சில சுவையான தகவல்கள்:
* ஜூலியஸ் சீசர் காலம்வரை ஓர் ஆண்டுக்கு 355 நாட்கள்தான் இருந்தன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 22 நாட்களைக் கொண்ட கூடுதல் மாதம் ஒன்று சேர்க்கப்பட்டு வந்தது. தன்னுடைய அரசவை வானியலாளர் சோசிஜீன்ஸிடம் நாட்காட்டிகளை எளிமைப்படுத்தும்படி கி.மு. 45-ல் ஜூலியஸ் சீசர் ஆணையிட்டார். அப்போதுதான் 365 நாள் கொண்ட நாட்காட்டியையும், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுதலாக ஒரு நாளை சேர்க்கும் நடைமுறையையும் சோசிஜீன்ஸ் அறிமுகப்படுத்தினார். அந்த கூடுதல் நாள் பிப்ரவரி மாதம் சேர்க்கப்பட்டதற்குக் காரணம், ரோமானிய நாட்காட்டியில் பிப்ரவரி கடைசி மாதமாக இருந்ததுதான்.
* ‘லீப் ஆண்டு' என்ற பெயரை அறிமுகப்படுத்தியவர் நாட்காட்டி முறையை மேம்படுத்திய போப் கிரிகோரி. அவர் மேம்படுத்திய நாட்காட்டியே இன்றைக்கு உலகில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
* பிப் 29-ம் தேதியின் சின்னம் தவளை. தவளை தாவுவதைப் போல, லீப் நாளும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை விட்டுவிட்டு வருவதால் இப்படி.
* லீப் நாளான பிப்ரவரி 29-ம் தேதி பிறந்தவர்கள் ஆங்கி லத்தில் லீப்லிங் (leapling) அல் லது லீப்பர் (leaper) என்று அழைக்கப்படுகிறார்கள்.
* ஒவ்வொரு நாளையும் போலவே, லீப் நாளின்போது சராசரியாக 3.5 லட்சம் பேர் புதிதாகப் பிறக்கிறார்கள்.
* டாஸ்மேனியாவின் எட்டாவது அதிபர் மில்ன் வில்சன் 1812-ம் லீப் நாளில் பிறந்து, 1880-ம் லீப் நாளில் இறந்தார்.
* ஹாங்காங்கில் லீப் நாளில் பிறந்தவர்களின் அதிகாரபூர்வ பிறந்த நாள் மார்ச் 1, அதேநேரம் நியூஸிலாந்தில் பிப்ரவரி 28.
* லீப் நாளில் (பிப். 29) பிறந்த பிரபலங்கள்: இந்திய முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் (1896), இந்திய நடனக்கலை முன்னோடியான ருக்மணி தேவி அருண்டேல் (1904) உள்ளிட்டோர்.
* அமெரிக்காவில் ஒவ்வொரு லீப் ஆண்டிலும் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கும். ஒலிம்பிக் போட்டிகளும் லீப் ஆண்டுகளை ஒட்டியே வரும்.
* பிப். 29 அரிய நோய்கள் நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT