Published : 01 Sep 2021 03:30 AM
Last Updated : 01 Sep 2021 03:30 AM
ரா. குஷ்னிரோவிச்
தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ
சிற்பி ஒருவர் கல்லில் சிலை வடித்துக் கொண்டிருந்தார். திடீரென்று சத்தம் கேட்டுத் திரும்பினார். பதற்றத்தோடு ஓடிவந்த ஒருவர், “மண்டியிட்டு உட்காருங்கள். தலை தாழ்த்தி வணக்கம் சொல்லுங்கள்” என்று கத்தினார்.
அவரைப் பின்தொடர்ந்து, ஒரு யானை மிகவும் கம்பீரமாக நடந்து வந்தது. மன்னர் யானையில் ஏறி நகர்வலம் வருகிறார் என்று புரிந்துகொண்ட சிற்பி, மண்டியிட்டு வணங்கினார்.
உயரமான இடத்தில் யானை முதுகில் உட்கார்ந்திருந்த மன்னர், சிற்பியைக் கவனிக்கவில்லை. அதனால், சிற்பிக்கு வருத்தமாகிவிட்டது.
‘நான் சாதாரணச் சிற்பி. பட்டத்து யானைக்கு இந்த நாட்டு மன்னரைச் சுமக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது’ என்று நினைத்த சிற்பி, ‘நான் ஒரு யானையாக இருந்தால் எனக்கும் அப்படி ஒரு வாய்ப்பும் மரியாதையும் கிடைக்குமே’ என்று முணுமுணுத்தார்.
அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. சிற்பி பட்டத்து யானையாக மாறியிருந்தார்! மன்னரைச் சுமந்துகொண்டு ஊர்வலம் சென்றார்.
திடீரென்று மன்னர் கையிலிருந்த தேநீர்க் கோப்பை நழுவி விழுந்தது. தேநீர் யானையின் முதுகில் கொட்டியது. யானையாக இருந்த சிற்பிக்கு ஒரு யோசனை. ‘நான் மன்னனாக இருந்திருக்கலாம்! வசதியான வாழ்க்கை வாழ்ந்திருப்பேன். மக்கள் மனத்தில் இடம்பிடித்திருப்பேன். எல்லாரும் தலைகுனிந்து வணங்குவார்கள். அதிகாரம் மிக்கவனாக வலம் வந்திருப்பேன்’ என்று நினைத்தார்.
உடனே சிற்பி அந்த நாட்டின் மன்னரானார். தன் அதிகாரத்தை எண்ணியும் மக்கள் மத்தியிலுள்ள மரியாதையையும் கண்டு வியந்தார். மிகவும் மகிழ்ச்சிஅடைந்தார்.
நாட்டின் முதல் குடிமகன் என்கிற பெருமிதத்துடன் நகர்வலம் சென்றார். வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்தது. பிரகாசமான வெளிச்சம் நேரடியாக மன்னரது கண்களில் பட்டது. கண்கள் கூசின. மன்னர் சங்கடமாக உணர்ந்தார். ‘நாட்டு மன்னனையே சுட்டெரிக்கும் பலத்தைச் சூரியன் பெற்றிருக்கிறது. அப்படியெனில் சூரியன் மன்னரைக் காட்டிலும் வலிமை வாய்ந்தது’ என்று நினைத்தார்.
வானில் ஒரு புதிய சூரியன் உதித்தது. உலகம் முழுவதையும் ஒளியால் மூழ்கடித்தது. பூமியை வந்தடைந்த அதன் கதிர்கள், பூமியைச் சூடாக்கின. கடல் நீர், ஆவியாகி மேலெழுந்தது. மேகமாகக் குளிர்ந்து வானில் மிதந்தது. மேகக்கூட்டம் சூரியனாக மாறியிருந்த சிற்பியின் முகத்தை மறைத்தது.
உடனே சூரியன், “நான், மேகமாக மாற வேண்டும்” என்று கடுமையான குரலில் சொன்னது. மேகமாக உருவெடுத்த சிற்பி, வானம் முழுவதுமாகப் பரவியது. வானத்தில் திடீரென்று காற்று பலமாக வீசியது. மேகங்களைக் கலைத்துவிட்டது. மேகத்தைவிடக் காற்றுதான் வலிமையானது. “இப்போதே நான் காற்றாக மாற வேண்டும்” என்று கோபத்தில் சொன்னது மேகம்.
அப்போது உருவான சூறாவளிக் காற்றுப் பயங்கர சத்தத்துடன் வீசியது. நடைபயணிகளின் தலையிலிருந்த தொப்பிகளைத் தூக்கிச் சென்று வேறு இடத்தில் வீசியது. கட்டிட மேற்கூரைகளைக் கிழித்தது.
வழியில் இருந்த ஓர் உயரமான பாறை, காற்றின் வேகத்தைத் தடுத்தது. பாறையில் மோதி, திக்கெட்டும் சிதறியது காற்று. இப்போது யார் வலிமையானவர்?
அடுத்த சில நிமிடங்களில், சிற்பியான காற்று, பாறையாக மாறியது. உயரமான பாறையில் ஒரு முனை வானத்து மழை மேகங்களைத் தொட்டுக்கொண்டிருந்தது. பாறையின் அடிப்பகுதிக்கு அருகில் நின்றிருந்த மனிதர்கள், சிறிய பொருட்களாகத் தெரிந்தனர்.
அப்போது அங்கே வந்த மற்றொரு சிற்பி, உளியும் சுத்தியலும் கொண்டு கல்லைச் செதுக்கினார். பாறையாக இருந்த முதலாவது சிற்பி, பயந்தார். வலி தாங்க முடியவில்லை. உடனே, “மனிதன்தான் எல்லாவற்றையும்விட வலிமையானவன்” என்று முணுமுணுத்த சிற்பி, “சீக்கிரம் நான், மனிதனாக வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். உடனடியாகப் பாறையாக இருந்த சிற்பி மறுபடியும் பழைய உருவம் பெற்றார்.
ஓர் உயரமான பாறையைப் பெயர்த்துச் சிலை வடித்தார். திடீரென்று சத்தம் கேட்டுத் திரும்பினார். பதற்றத்தோடு ஓடிவந்த ஒருவர், “மண்டியிட்டு உட்காருங்கள். தலைகுனிந்து வணக்கம் சொல்லுங்கள்” என்று கத்தினார்.
அதைக் கேட்டவுடன் சிற்பி ஒரு முடிவுக்கு வந்தார். ‘பட்டத்து யானையாகவும் மன்னனாகவும் சூரியனாகவும் மேகமாகவும் காற்றாகவும் பாறையாகவும் மாறியதெல்லாம் போதும். இனி எந்தக் காரணம் கொண்டும் யாரையும் மண்டியிட்டு வணங்கப் போவதில்லை’ என்று முடிவுசெய்தார்.
அதன் பிறகு அவரை மண்டியிடச் சொல்லியோ தலைதாழ்த்தி வணங்கச் சொல்லியோ யாரும் கட்டாயப்படுத்தவில்லை. ‘தனி மனிதனின் பலவீனம்தானே தவிர, எதிராளியின் பலமும் வலிமையும் நிச்சயமாக யாரையும் மண்டியிட வைத்துவிட முடியாது’ என்பதை உணர்ந்தார் சிற்பி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT