Last Updated : 17 Feb, 2016 11:57 AM

 

Published : 17 Feb 2016 11:57 AM
Last Updated : 17 Feb 2016 11:57 AM

குழந்தைகளின் ஆஹா கண்டுபிடிப்புகள்!

புதிய கண்டுபிடிப்புகளை யார் வேண்டுமானாலும் செய்ய முடியும். அதற்கு அபாரமான கற்பனை வளம், ஆர்வம், முயற்சி, பொறுமை போன்றவை தேவை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைக்கூட இன்னும் சிறப்பாக மாற்றினால், அதுவும் ஒரு கண்டுபிடிப்புதான்!

இங்கிலாந்தில் வசிக்கிறார் கண்டுபிடிப்பாளரும் டிசைனருமான டொமினிக் வில்காக்ஸ். விதவிதமான கண்டுபிடிப்புகளைச் செய்வதில் அதிக ஆர்வமுள்ளவர். இங்கிலாந்தில் உள்ள குழந்தைகளிடம் கண்டுபிடிக்கும் ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காகப் பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் குழந்தைகளுக்காக ஒரு போட்டியை அவர் அறிவித்தார். இந்தப் போட்டியில் 4 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகள் பங்கேற்றனர்.

கண்டுபிடியுங்கள்!

“நீங்கள் புதிதாக எதை வேண்டுமானாலும் கண்டுபிடிக்கலாம். இல்லை என்றால் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் என்ன மாற்றத்தைக் கொண்டுவருவதன் மூலம், இன்னும் சிறப்பானதாக மாற்றலாம் என்று யோசியுங்கள். உங்கள் யோசனை நடைமுறையில் செய்யமுடியாததாகக்கூட இருக்கலாம். அதைப் பற்றியெல்லாம் கவலை வேண்டாம். உங்கள் சிந்தனைதான் முக்கியம்” என்றார் டொமினிக் வில்காக்ஸ்.

450 குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் வந்து, தங்கள் கண்டுபிடிப்பை வரைய ஆரம்பித்தனர். அவற்றுக்கான விளக்கங்களையும் எழுதினர். மொத்தம் 600 படங்கள் கிடைத்தன. அவற்றை எல்லாம் டொமினிக்கும் அவரது குழுவினரும் ஆராய்ந்தார்கள். அவற்றிலிருந்து மிகச் சிறந்த 60 கண்டுபிடிப்புகளைத் தேர்வு செய்தார்கள். டிசைனர்களை அழைத்து, படத்தில் இருக்கும் பொருட்களை நிஜத்தில் உருவாக்கச் சொன்னார் டொமினிக். அவர்களும் உருவாக்கித் தந்தனர். 60 கண்டுபிடிப்புகளையும் ஓரிடத்தில் காட்சிக்கு வைத்தார். கண்டுபிடித்த குழந்தைகளையும் அழைத்தார்கள். தங்கள் கற்பனை நிஜமானதில் அவர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனார்கள்.

அடங்காத ஆச்சரியம்

“உலகில் நடைபெற்றுவரும் போர்களைக் கண்டு நான் வருந்துகிறேன். போரில் இருந்து நம்மைக் காத்துக்கொள்வதற்காக நிலத்திலிருந்து மிக உயரத்தில் ஒரு வீட்டை அமைத்தேன். அந்த வீட்டுக்குச் செல்ல ஒரு லிஃப்டையும் அமைத்தேன். மேலே சென்றவுடன் கண்ணுக்குத் தெரியாத ஒரு போர்வை வீட்டை மூடிக்கொள்ளும். குண்டு போட்டாலும் இந்த வீட்டை ஒன்றும் செய்ய முடியாது. என் யோசனை தேர்ந்தெடுக்கப்படும் என்று நான் நினைக்கவே இல்லை. இதைவிட மகிழ்ச்சியான ஒரு விஷயம் வேறு என்ன இருக்க முடியும்?’’ என்கிறார் 11 வயது சார்லோட் ஸ்காட்.

12 வயது ஹென்றி ஹக்ஸின் கண்டுபிடிப்பு சுவாரசியமானது. பல் தேய்க்கும் பிரஷ்ஷின் பின்னால் இருக்கும் கைப்பிடிக்குள் பற்பசை வைக்கப்பட்டிருக்கிறது. பட்டனை அழுத்தினால் பிரஷ் இருக்கும் இடத்துக்குப் பற்பசை வந்துவிடும். பல் தேய்க்க வேண்டியதுதான் பாக்கி.

இரவு விளக்கின் வெளிச்சத்தைக் அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியாது. அதற்காக ஒரு கண்டுபிடிப்பை உருவாக்கியிருக்கிறார் 11 வயது லேலா அமிர். விளக்கைச் சுற்றி பிளாஸ்டிக் பட்டைகள். வெளிச்சம் அதிகம் வேண்டுமென்றால் பட்டைகளைத் திறந்துகொள்ளலாம். வெளிச்சம் குறைவாக வேண்டும் என்றால் பட்டைகளை மூடிக்கொள்ளலாம்.

முள்கரண்டி மூலம் உணவை எடுத்துச் சாப்பிடும்போது, எவ்வளவு சூடாக இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியாது. நாக்கு சுட்டுவிடும் வாய்ப்பு இருக்கிறது. இதற்காக முள்கரண்டியின் பின்பக்கம் ஒரு சிறிய விசிறியை இணைத்திருக்கிறார் 6 வயது அமெலியா லிட்டில். உணவு வாய்க்குப் போவதற்குள் விசிறி மூலம் சூடு குறைந்துவிடும்.

யோசித்துப் பாருங்கள்

மரத்தில் இருந்து உதிரும் இலைகள் கீழே விழாமல் இருப்பதற்காக மரத்தைச் சுற்றி ஒரு குடை, உலோக டின்னில் வரும் சிப்ஸ்களைக் கீழிருந்து மேலே கொண்டு வருவதற்கான ஸ்பூன், சக்கர நாற்காலியில் வருபவர் களுக்காகச் சுவரிலிருந்து ஓரடி வெளியே வரும் டெலிபோன், பின்னால் நடப்பதைக் கண் முன்னே காட்டும் கண்ணாடி என்று ஏராளமான கண்டுபிடிப்புகள் குழந்தைகளையும் பெரியவர்களையும் வெகுவாகக் கவர்ந்தன.

“குழந்தைகளின் கற்பனை வளமும் சிந்தனையும் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்திவிட்டன. ஒவ்வொரு குழந்தையின் கண்டுபிடிப்பும் அற்புதமானது. எங்களால் சிலவற்றை மட்டுமே நிஜத்தில் உருவாக்க முடிந்தது. இந்த 450 குழந்தைகளும் இனி சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் மூலம் பயன்படக்கூடிய இன்னும் பல விஷயங்கள் உலகத்துக்குக் கிடைக்கலாம். இந்தப் பொருட்களை எல்லாம் கண்டுபிடித்த குழந்தைகளிடமே கொடுத்துவிடப் போகிறேன். நீங்களும் இப்படி வித்தியாசமாக யோசித்துப் பாருங்கள். அட்டகாசமான யோசனைகள் உதிக்கும். அவை சிறந்த கண்டுபிடிப்புகளாக உருவாகலாம்” என்கிறார் டொமினிக் வில்காக்ஸ்.

என்ன குழந்தைகளே! யோசிக்கத் தயாராகிவிட்டீர்களா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x