Published : 21 Jul 2021 03:30 AM
Last Updated : 21 Jul 2021 03:30 AM
உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் விளையாட்டுப் போட்டிகள் என்றால் ஒலிம்பிக்தான். கரோனா பெருந்தொற்றின் காரணமாகக் கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டி, நாளை மறுதினம் (ஜூலை 23) டோக்கியோவில் ஆரம்பமாகிறது. இந்தப் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர்கள் கலந்துகொள்கிறார்கள். 33 விளையாட்டுகளுக்கு 339 பதக்கங்கள் வழங்கப்பட இருக்கின்றன.
இன்று மிகப் பிரம்மாண்டமாகவும் அதிக நாடுகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டியாவும் இருக்கும் ஒலிம்பிக் போட்டியின் வயது சுமார் 2,800 ஆண்டுகள்!
பழங்கால கிரேக்கத்தில் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்த ஒலிம்பிக் போட்டி, கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை விளையாடப்பட்டு வந்தது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பியா என்கிற இடத்தில் ஜீயஸ் கடவுளுக்கு மரியாதை செய்யும் விதத்தில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. இசை, சொற்பொழிவு, நாடகம் போன்றவற்றிலும் போட்டிகள் நடைபெற்றன. ஆண்கள் மட்டுமே போட்டிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
ஒலிம்பிக் போட்டிகளில் போர்க்குணமிக்க வீரர்கள் பங்கேற்க ஆரம்பித்த பிறகு, விளையாட்டுகளில் சுவாரசியம் கூடியது. 18ஆம் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம், ஓட்டம், ஈட்டி எறிதல், குதித்தல் போன்ற விளையாட்டுகள் சேர்க்கப்பட்டன. 20ஆம் ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை சேர்க்கப்பட்டது. காலம் செல்லச் செல்ல விளையாட்டுப் போட்டிகளின் எண்ணிக்கையும் விரிவடைந்து கொண்டே இருந்தன. 37ஆம் ஒலிம்பிக் போட்டி ஐந்து நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இப்படித் தொடர்ந்து நடந்துகொண்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள், கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்கத்தை ரோமானியர்கள் கைப்பற்றிய பிறகு, வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.
நவீன ஒலிம்பிக்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கல்வியாளரும் வரலாற்றாளருமான பியர் டி கூபெர்டின், உடற்கல்வியை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கினார். அப்போதுதான் ஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்தும் எண்ணம் உருவானது. ‘போட்டியில் வெற்றி பெறுவது முக்கியமல்ல; எப்படிப் போராடுகிறோம் என்பதே முக்கியம்’ என்கிற நோக்கத்தை முன்வைத்து, கூபெர்டின் முயற்சியில் 1896ஆம் ஆண்டு நவீன ஒலிம்பிக் போட்டி, கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் ஆரம்பமானது. 13 நாடுகளைச் சேர்ந்த 280 போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டனர். 60 ஆயிரம் பேர் பார்த்தனர்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்த ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டன. பங்கேற்பாளர்களும் பார்வையாளர்களும் அதிகமானார்கள். நாடுகளிடையே பதக்கம் பெறுவதில் போட்டிகளும் அதிகரித்தன.
1900ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பெண்களும் அனுமதிக்கப்பட்டனர். 997 விளையாட்டு வீரர்களில் 22 பேர் பெண்கள். அதாவது 2.2 சதவீதத்தினர் பெண்கள். 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 51 சதவீதம் ஆண்களும் 49 சதவீதம் பெண்களும் பங்கேற்கிறார்கள் என்பது ஆரோக்கியமான விஷயம்.
1924ஆம் ஆண்டு முதல் பனிப்பகுதியில் விளையாடக்கூடிய விளையாட்டுகளுக்காக ‘குளிர்கால ஒலிம்பிக்’ போட்டிகள் நடத்தப் படுகின்றன. கோடைகால ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறது.
ஒலிம்பிக்கில் அரசியல்
1936ஆம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அப்போது ஹிட்லர் ஆட்சியில் இருந்தார். ஆரிய இனமே உயர்வானது என்கிற நாஸிகளின் கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் நோக்கில், நாஸிகள் அதிக பதக்கங்களைப் பெற வேண்டும் என்று நினைத்தார். விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும் பாரபட்சம் காட்டினார்.
ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜெஸி ஓவன்ஸ், ஹிட்லரின் இனவாதக் கொள்கையை மாற்ற வேண்டும் என்பதற்காகக் கடினமாகப் பயிற்சிகளை மேற்கொண்டார். நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்றில் ஜெர்மனியின் லஸ் லாங் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று, போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டார். பதற்றத்தில் இருந்த ஜெஸி ஓவன்ஸ் இரண்டு முறை தோல்வியடைந்தார்.
அப்போது லஸ் லாங், ஜெஸி ஓவன்ஸிடம் வந்து பதற்றப்படாமல் விளையாடினால் வெற்றி பெற முடியும் என்றார். நம்பிக்கை பெற்ற ஜெஸி ஓவன்ஸும் தகுதிச் சுற்றில் வென்று, போட்டிக்குள் நுழைந்தார். இறுதிப் போட்டியில் ஜெஸி ஓவன்ஸ் தங்கம் வென்றார். வெள்ளி வென்ற லஸ் லாங், ஹிட்லரின் எதிரிலேயே ஜெஸி ஓவன்ஸைக் கட்டிப்பிடித்துப் பாராட்டினார். இந்த ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று, ஹிட்லரின் இனவாத எண்ணத்தைத் தவிடுபொடியாக்கினார் ஜெஸி ஓவன்ஸ்.
1968ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த டோம்மி ஸ்மித் தங்கமும் ஜான் கேர்லோஸ் வெண்கலமும் வென்றனர். பதக்கம் பெறும்போது தங்கள் தலையைத் தாழ்த்தி, கையை உயர்த்தி, அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் நடத்தப்படும் விதத்துக்கு எதிர்ப்பு காட்டினார்கள்.
1980ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா தலைமையில் 65 நாடுகள் புறக்கணித்தன. 1979ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தான் மீது எடுத்த படையெடுப்புக்காக இந்தப் புறக்கணிப்பு. 1984ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை சோவியத் தலைமையில் கம்யூனிச நாடுகள் புறக்கணித்தன.
வியாபார ஒலிம்பிக்
ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும் வீரர்களின் புகழை வணிக நிறுவனங்கள் பயன்படுத்த ஆரம்பித்தன. வெற்றி பெறும் வீரர்களுக்கு இதன்மூலம் அதிக வருமானமும் புகழும் கிடைக்கின்றன. வணிகமயமான ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறுவதற்காகச் சில வீரர்கள் ஊக்க மருத்துகளைப் பயன்படுத்தி, அது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பதக்கங்களை இழந்த சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
நாடுகள், வீரர்களின் ஒற்றுமைக்காகவும் திறமைகளைப் பறைசாற்றுவதற்காகவும் ஆரம்பிக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி, 125 ஆண்டுகளில் தன் நோக்கத்தைவிட்டு விலகிச் சென்றுவிட்டது. இருந்தாலும் உலக அளவில் நடைபெறும் மிகப் பெரிய விளையாட்டுப் போட்டி ஒலிம்பிக் என்பதால், அதன் முக்கியத்துவம் இன்னும் குறையவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT