Published : 21 Jul 2021 03:14 AM
Last Updated : 21 Jul 2021 03:14 AM
# சுதந்திரத்துக்கு முன்பே இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருந்தாலும், 1948 லண்டன் ஒலிம்பிக் போட்டியில்தான் முதன் முதலில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
# ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் துப்பாக்கிச் சுடும் இந்திய வீரர் ராஜஸ்தானைச் சேர்ந்த மகாராஜா கர்னி சிங். 1960 முதல் 1980 வரை ஐந்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றார்.
# 1936ஆம் ஆண்டில் பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மிகச் சிறந்த ஹாக்கி வீரர் த்யான் சந்தின் ஆட்டத்தில் பிரமித்துப்போன சர்வாதிகாரி ஹிட்லர், த்யான் சந்துக்கு ஜெர்மனி குடியுரிமை தர முன்வந்தார். அதை த்யான் சந்த் மறுத்துவிட்டார்.
# ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் தனிநபர் பதக்கத்தைப் பெற்றவர் கே.டி. ஜாதவ். மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இவர், 1952 ஹெல்சின்கி ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்றார்.
# ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் கர்ணம் மல்லேஸ்வரி. 2000 சிட்னி ஒலிம்பிக்கில் பளு தூக்கும் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
# இந்தியா சார்பில் அதிக முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ். 1992 முதல் 2016 வரை ஏழு முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார்.
# 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் டென்னிஸில் வெண்கலப் பதக்கம் வென்றார். இவரின் தந்தை வெஸ் பயஸ் 1972 மியூனிக் ஒலிம்பிக்கில் ஹாக்கி அணியில் விளையாடி வெண்கலப் பதக்கம் வென்றார்.
# இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் பி.வி.சிந்து. 2016 ரியோ ஒலிம்பிக்கில் 21 வயதில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
# ஒலிம்பிக்கில் வெற்றிகரமான ஹாக்கி அணி என்றால், அது இந்திய அணிதான். 1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964, 1980-ஆம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக்கில் 8 முறை தங்கம் வென்று சாதித்திருக்கிறது நம் ஹாக்கி அணி.
# தனி நபர் பிரிவில் தங்கம் வென்ற ஒரே நபர் அபினவ் பிந்த்ரா. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தங்கம் வென்றார்.
# இந்தியா அதிகப் பதக்கங்களை வென்றது 2012 லண்டன் ஒலிம்பிக்கில்தான். சுஷில்குமார் (மல்யுத்தம்), விஜயகுமார் (துப்பாக்கிச் சுடுதல்) வெள்ளிப் பதக்கங்களையும், சாய்னா நேவால் (பாட்மிண்டன்), மேரிகோம் (குத்துச்சண்டை), யோகஸ்வர் தத் (மல்யுத்தம்), ககன் நாரங் (துப்பாக்கிச் சுடுதல்) ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.
# 2000 சிட்னி ஒலிம்பிக் (கர்ணம் மல்லேஸ்வரி), 2016 ரியோ ஒலிம்பிக்கில் (பி.வி. சிந்து, சாக்ஷி மாலிக்) பெண்களால் இந்தியா பதக்கப் பட்டியலில் இடம்பிடித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT