Published : 10 Feb 2016 12:20 PM
Last Updated : 10 Feb 2016 12:20 PM
சின்னஞ்சிறு வயதில் வயதுக்கு மீறிய செயல்களைச் செய்தால் பெரியவர்கள் திட்டுவார்கள், ஆனால் தங்கள் சின்ன வயதைப் பொருட்படுத்தாமல் செயல்பட்ட 25 சிறுவர், சிறுமிகளுக்குத் தேசிய விருது வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் வீரதீரச் செயல்களைச் செய்ததற்காகக் குடியரசு தினத்தை ஒட்டி கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரின் செயல்பாடுமே போற்றத்தக்கதுதான் என்றாலும், மூன்று பேர் செய்த உதவிகள் வேறு எதனுடனும் ஒப்பிட முடியாதவை. அவர்களைப் பற்றிப் பார்ப்போமா?
சிவம்பேட்டை ருசிதா
புதிதாக உதயமாகியுள்ள தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி சிவம்பேட்டை ருசிதா. இந்த முறை வீரதீரச் செயலுக்கான விருதைப் பெற்றவர்களிலேயே ருசிதாதான் சின்னஞ் சிறுமி. இப்போது 10 வயதானாலும், விபத்து நிகழ்ந்தபோது அவளுடைய வயது 8 தான். அது மட்டுமல்லாமல் விருது பெற்ற மூன்று சிறுமிகளில் ருசிதாவும் ஒருத்தி.
2014-ம் ஆண்டு ருசிதா, அவளுடைய தங்கை, சகோதரன் ஆகிய மூன்று பேரும் பள்ளிப் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். ஆளில்லாத ரயில்வே லெவல் கிராஸிங்கில் எதிர்பாராதவிதமாக பஸ் நின்றுவிட்டது. அப்போது ரயில் வந்துகொண்டிருப்பதை ருசிதா பார்த்துவிட்டாள். உடனடியாகச் சமயோசிதமாகச் செயல்பட்ட ருசிதா, இரண்டு குழந்தைகளை இழுத்துக் கொண்டு ஜன்னல் வழியாக வெளியே குதித்துவிட்டாள்.
ஆனால், முன்வரிசையில் உட்கார்ந்திருந்த அவளுடைய ஐந்து வயதுத் தங்கை ஸ்ருதியைக் காப்பாற்ற முடியவில்லை. அவளுடைய தம்பி காயமடைந்தாலும், இப்போது குணமாகிவிட்டான். இந்த விபத்தில் 16 பள்ளிக் குழந்தைகள், டிரைவர், கண்டக்டர் ஆகியோர் இறந்துவிட்டனர்.
இரண்டு குழந்தைகளைக் காப்பாற்றிய ருசிதாவுக்கு ‘கீதா சோப்ரா வீரதீர விருது' வழங்கப்பட்டது. “பிரதமரிடம் தேசிய விருது வாங்கியது மகிழ்ச்சி தருகிறது. அதேநேரம் இந்த விபத்தில் என் தங்கையும் காப்பாற்றப்பட்டிருந்தால், சந்தோஷமாக இருந்திருக்கும். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் அவள் நினைவாகவே இருக்கிறோம்” என்கிறாள் ருசிதா. எதிர்காலத்தில் வழக்கறிஞராக வேண்டும் என்று அவள் விரும்புகிறாளாம்.
சிவான்ஷ் சிங்
உத்தரப் பிரதேசத்திலுள்ள ஃபைசாபாதைச் சேர்ந்த சிவான்ஷ் சிங் (14), நீச்சல் போட்டிகளில் பதக்கம் வென்ற நீச்சல் வீரன். சிவான்ஷின் நண்பன் விவேக், சரயு நதியில் குளித்துக்கொண்டிருந்தபோது தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டான். ஆழமான பகுதியில் விவேக் மூழ்கிக்கொண்டிருந்தபோது, அவனைக் கரைசேர்க்கச் சிவான்ஷ் முயற்சித்தான். விவேக்கைக் கரை வரை இழுத்து வந்துவிட்டாலும், அவன் இறந்துவிட்டிருந்தான். இந்தக் களேபரத்தில் பெரிதும் களைப்படைந்த சிவான்ஷும் தண்ணீரிலிருந்து வெளியே வந்த கொஞ்ச நேரத்திலேயே இறந்துவிட்டான்.
இப்போது சிவான்ஷுக்கு ‘பாரத் வீரதீர விருது’ வழங்கப்பட்டுள்ளது. “இந்த விருது வழங்கும் விழாவில் மற்றக் குழந்தைகளுடன் அவனும் சந்தோஷமாகப் பங்கேற்றிருக்க வேண்டுமென விரும்புகிறேன்” என்று அவன் சார்பாக விருதைப் பெற்றுக்கொண்ட அவனுடைய அம்மா நீலம் சிங்கும் அப்பா அருணும் கண்ணீருடன் தெரிவித்தனர். அதேநேரம் சிவான்ஷின் தம்பி பிரியன்ஷுக்கு, சிவான்ஷ்தான் உத்வேகம் அளிப்பவனாக இருக்கிறான்.
கௌரவ் சஹஸ்ரபுத்தே
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கௌரவ் கடுஜி சஹஸ்ரபுத்தே (15), அம்பாஸரி ஏரியில் மூழ்கிய தன்னுடைய நண்பர்கள் நான்கு பேரைக் காப்பாற்ற முயற்சித்தபோது இறந்துபோனான். சிறந்த நீச்சல்காரனான கௌரவ், 2014 ஜூன் மாதம் 3-ம் தேதி மதிய வேளையில் ஏரிக்குப் போனான். ஏரியில் குளித்துக்கொண்டிருந்தபோது, கௌரவின் நண்பன் ஒருவன் ஏரியில் தவறி விழுந்தான். அவனைக் காப்பாற்றப் போன மற்ற மூன்று நண்பர்களும் மூழ்க ஆரம்பித்தனர்.
20 நிமிடங்களுக்கு நீந்திய கௌரவ், எல்லோரையும் காப்பாற்றிவிட்டான். கடைசி நண்பனைக் காப்பாற்ற முயற்சித்தபோது, நீருக்கடியில் இருந்த கல்லில் கௌரவின் தலை மோதி மயக்கமடைந்ததால் இறந்து போனான். கௌரவுக்கு ‘பாரத் வீரதீர விருது' வழங்கப்பட்டது. தேசிய வீரதீர விருதுகளிலேயே உயரியது பாரத் விருது.
இப்படி வீரதீர விருது பெற்ற ஒவ்வொருவரும் சம்பந்தப்பட்ட சம்பவத்தைப் பற்றி கேள்விப்படும்போது, அவர்களுடைய சமயோசிதம், துணிச்சல் ஆச்சரியத்தைத் தருகிறது. அதிலும் அடுத்தவர் உயிரைக் காப்பாற்றத் தங்கள் உயிரையும் கொடுத்திருக்கிறார்கள் கௌரவும் சிவான்ஷும். தன் உயிரையும் பொருட் படுத்தாமல் பிறரைக் காப்பாற்றிய இவர்கள் உண்மையிலேயே மகத்தானவர்கள் அல்லவா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT