Published : 17 Feb 2016 11:41 AM
Last Updated : 17 Feb 2016 11:41 AM
மழை பெய்து கொண்டேயிருந்தது. மழைன்னா மழை அப்படியொரு மழை. பத்து நாளாக மழை. பகலும் மழை. இரவும் மழை. மேகங்களிலிருந்து தண்ணீர் அருவி போல ஊற்றிக் கொண்டேயிருந்தது. ஏரி, குளங்கள், கிணறுகள் நிறைந்துவிட்டன. ஆறுகள் கரை புரண்டு ஓடின. ஏரி, குளம், ஆறுகளில் இருந்த மீன்கள் எல்லாம் தண்ணீருக்கடியில் போய் ஒளிந்துகொண்டன. மேலே வர முடியாதே. வந்தால் வெள்ளம் அடித்துக்கொண்டு போய்விடுமே. வற்றா ஏரியில் இருந்த விரால் மீன் கூட்டமும் ஏரியின் அடியில் போய் ஒளிந்துகொண்டது.
அந்த விரால் மீன் கூட்டத்தில் இருந்த ஒரு சுட்டி விராலுக்கு மட்டும் மேலே போய் மழை எப்படிப் பெய்யுதுன்னு பார்க்க ஆசை. அதனுடைய அம்மாவும் அப்பாவும் அதை எச்சரித்தார்கள்.
“மேலே போகாதே… போனா வெள்ளம் உன்னை அடிச்சிகிட்டுப் போயிரும்”
“சரிம்மா… நான் போகல…” என்று திருட்டு முழி முழித்தபடியே சொன்னது சுட்டி விரால்.
ஆனால், கொஞ்சம் நேரம் கழித்து அம்மா, அப்பாவுக்கு டேக்கா கொடுத்து விட்டு ஏரியின் மேல் பரப்புக்கு வந்தது விரால். அட மழை எப்படிப் பெய்யுது? அவ்வளவு தண்ணீர் வானத்திலே இருக்கா என்று வாயைத் திறந்து ஆச்சரியத்துடன் பார்த்தது. அப்போது வேகமாய் ஒரு அலை சுட்டி விராலை அடித்துக்கொண்டு போய்விட்டது.
ரொம்ப நேரத்துக்கு அப்புறம் தண்ணீரின் வேகம் குறைந்தது. இப்போது சுட்டி விரால் நிதானமாக நீந்த ஆரம்பித்தது. தன்னுடைய அப்பா அம்மாவைத் தேடியது. யாரும் இல்லை. ஒரே குப்பை, கூளம்தான் தண்ணீரில் மிதந்தது. சோகத்துடன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த சுட்டி விராலின் முன்னால் ஒரு நிழல் தெரிந்தது. ஒரு பையன் தண்ணீரைப் பார்த்துக் கொண்டிருந்தான். சுட்டி விரால் அவனைப் பார்த்து,
“ஏய்… யார் நீ…?” என்று கேட்டது.
அந்தப் பையன் ஆச்சரியத்துடன் குனிந்து சுட்டி விராலைப் பார்த்தான்.
“என் பேர் சதீஷ்.. என் வீட்டுக்கு வந்து எங்கிட்ட பேர் கேக்கிறீயே… நீ…யாரு...?”
“என் பேரு சுட்டி விரால்.. என்னோட வீட்டைத் தேடிக்கிட்டிருக்கேன்…”
“உங்க வீடு எங்க இருக்கு?“ என்று சதீஷ் கேட்டான்.
“எங்க வீடு இங்கதான், பெரிசா தண்ணியா இருக்கும்…”
“அட்ரஸ் கிடையாதா?”
“வற்றா ஏரி… நாங்க எப்பவும் தண்ணியிலதான் இருப்போம்… நீங்க ஏன் இந்தத் தண்ணியில வீடு கட்டியிருக்கீங்க...?” என்று கேட்டது.
சதீஷ் உடனே, “ஐயோ ஐயோ உனக்கு ஒண்ணுமே தெரியல… முன்னாடி இங்க ஒரு குளம் இருந்திச்சாம்…ஆனால் நாங்க கட்டும்போது இங்க தண்ணி இல்ல… இப்பத்தான் மழை பெய்ஞ்சதில்ல, அதிலதான் இவ்வளவு தண்ணி எங்க வீட்டுக்குள்ளாற வந்திருச்சி…”
“ஓ… அப்படியா… சதீஷ் அண்ணே… எனக்குப் பசிக்கிது… எதாச்சும் சாப்பிடக் கொடேன்...” என்று சுட்டி விரால் கேட்டது. உடனே சதீஷ் உள்ளே ஓடினான். சில நிமிடங்களில் வெளியே வந்து பிஸ்கட் துண்டுகளைப் போட்டான். சுட்டி விரால் பிஸ்கட் துண்டுகளைக் கொஞ்சமாய் சாப்பிட்டு வயிறை ரொப்பிக் கொண்டது.
“ரொம்ப நன்றி சதீஷ் அண்ணே. நான் என் வீட்டைத் தேடிப் போறேன்.”
என்று சொல்லி விட்டு வேகவேகமாக நீந்தியது. கொஞ்ச தூரம் போனதும் ஒரு நாய் தண்ணீரில் நீந்தி வந்தது. அந்த நாயைப் பார்த்த சுட்டி விரால், “நாயண்ணே…என்னோட வீடு எங்க இருக்குன்னு தெரியுமா?…”
“டேய் பொடியா… நானே என் வீட்டைத் தேடித்தான் அலைஞ்சிகிட்டிருக்கேன்… தண்ணியில எதுவுமே அடையாளமே தெரியல…” என்று குலைத்தது. சுட்டி விரால் பயந்து அங்கிருந்து வேகமாக நீந்தியது. கொஞ்ச தூரத்தில் ஒரு சன்னலில் உட்கார்ந்திருந்த வெள்ளைப் பூனையைப் பார்த்தது சுட்டி விரால்.
“பூனையக்கா…” என்று சொல்லி முடிப்பதற்குள் சுட்டி விரால் மீனின் மீது பாய்ந்தது அந்த வெள்ளைப் பூனை. அவ்வளவுதான். சுட்டி விரால் தண்ணீருக்கு அடியில் வேகவேகமாகச் சென்று திக்குத் தெரியாமல் நீந்திக் கொண்டிருந்தது. உயிர் பயம் வந்துவிட்டது. அம்மா, அப்பா பேச்சைக் கேட்காமல் சேட்டை பண்ணிட்டோமோ என்று நினைத்தது. அப்போது யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது. சுட்டி விரால் உடனே திரும்பிப் பார்த்தது. அங்கு தவளையக்கா தலையை உதறிக்கொண்டே, “இது நம்ம ஏரித் தண்ணி மாதிரி இல்ல... ஒரே சாக்கடை…ஆமா நீ எங்க இங்க வந்தே, சுட்டி விரால்…”
சுட்டி விராலுக்கு ஆச்சரியம். நம்முடைய பேரு இதுக்கு எப்படித் தெரியும்? அதைத் தெரிந்துகொண்டதைப் போல, தவளையக்கா, “நானும் உங்கம்மாவும் ஃபிரண்ட்ஸ்டா செல்லம்…” என்று சொன்னதைக் கேட்டதும் சுட்டி விராலுக்கு அழுகை வந்தது.
“நான் வீட்டுக்குப் போகணும்…” என அழுதது.
“அழாதே… வீட்டுக்குத் தானே போகணும் எங்கூடவே… வா...” என்று சொல்லிவிட்டு முன்னால் கால்களை விரித்து நீந்திக்கொண்டு போனது. அதன் பின்னாலேயே போனது சுட்டி விரால். ஒரு வழியாக நீர் வற்றா ஏரிக்கு இரண்டும் வந்து சேர்ந்தன. சுட்டி விரால் தவளையக்காவுக்கு நன்றி சொல்லிவிட்டு அம்மா, அப்பாவைத் தேடி நீருக்கடியில் போனது. கவலையோடு இருந்த சுட்டி விராலின் அம்மாவும் அப்பாவும் அதைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிப் பிடித்துக்கொண்டனர்.
“கண்ணாமுச்சி விளையாட்டுக்கு ஒரு அளவு வேணாம்…?” என்று அப்பா செல்லமாய் முதுகில் தட்டினார். சுட்டி விரால், “ இல்லப்பா… அங்க ஒரே தண்ணி…அதில…” என்று சொல்லி முடிப்பதற்குள் சுட்டி விராலின் அம்மா, “தண்ணியில்லாம… வேற என்ன … எப்பப் பாரு விளையாட்டுதான்…” என்று சுட்டி விராலைக் கட்டிப்பிடித்தது.
சுட்டி விரால் திருட்டு முழி முழித்துக்கொண்டே சிரித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT