Published : 30 Dec 2015 12:35 PM
Last Updated : 30 Dec 2015 12:35 PM
உலகம் முழுவதும் புத்தாண்டு ஒரே நேரத்தில் கொண்டாடப்படுவதில்லை. ஒரே மாதிரிக் கொண்டாடப்படுவதும் இல்லை. உலகின் பல்வேறு பகுதி மக்கள் புத்தாண்டுகளை உற்சாகம் பொங்க எப்படி வித்தியாசமாக வரவேற்கிறார்கள் என்று பார்ப்போமா?
உயிரினப் புத்தாண்டு
சீனப் புத்தாண்டு ஒவ்வொரு முறையும் ஜனவரி 21-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 21-ம் தேதி வரையிலான ஒரு மாத இடைவெளியில் எப்போது வேண்டுமானாலும் வரும். சீனர்களுடைய நாட்காட்டி நிலவை அடிப்படையாகக் கொண்டது. முதல் மாதத்தின் முழு நிலவு வரும் நாளே அவர்களுக்குப் புத்தாண்டு. ஒவ்வோர் ஆண்டும் ஓர் உயிரினத்தின் பெயரால் அறியப்படுகிறது.
சீனப் பாரம்பரியத்தில் மிக முக்கியமாகக் கருதப்படும் புத்தாண்டு, வசந்த விழாவும்கூட. அப்போது 15 நாட்களுக்குக் கொண்டாட்டம்தான். வலிமையின் சின்னமாகச் சீனர்கள் கருதும் டிராகன் பொம்மைகளைத் தொடர்ந்து அலங்கார விளக்குகளுடன் மக்கள் பேரணியாகச் செல்வது வழக்கம். இந்த ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி தொடங்கும் புதிய சீன ஆண்டு, குரங்குகளின் ஆண்டு.
கொம்பூதும் புத்தாண்டு
யூதர்களின் புத்தாண்டு ‘ராஷ் ஹஷானா’ எனப்படுகிறது. ஹீப்ரு நாட்காட்டியின் ஏழாவது மாதத்தின் முதல் இரண்டு நாட்களே புத்தாண்டு. பொதுவாகச் செப்டம்பர் அல்லது அக்டோபரில் இலையுதிர் காலத்திலேயே இது வரும். இந்த நேரத்தில் முந்தைய ஆண்டில் செய்த தவறுகளைத் திரும்ப நினைத்துப் பார்த்து, புதிய ஆண்டில் அதைத் திருத்திக்கொள்ள யூதர்கள் திட்டமிடுவார்கள். புத்தாண்டை இனிப்பாகத் தொடங்குவதன் அடையாளமாக ஆப்பிளைத் தேனில் முக்கிச் சாப்பிடுவது வழக்கம். ‘ஷோபர்’ எனப்படும் கொம்புகளால் செய்யப்பட்ட இசைக்கருவி, புத்தாண்டின் தொடக்கமாக ஊதப்படும்.
நகைகளின் புத்தாண்டு
ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள எத்தியோப்பியா நாட்டின் புத்தாண்டு என்குடாடாஷ் எனப்படுகிறது. அதற்கு ‘நகைகளின் பரிசு’ என்று அர்த்தம். பெருமழையின் முடிவில் செப்டம்பர் 11-ம் தேதி இந்தப் புத்தாண்டு வரும். இதை ஆடல், பாடல் என வசந்த விழாவாக மக்கள் உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள். 2000 ஆண்டுகளாக ரோமப் பேரரசர் அகஸ்டஸ் காலத்தில் இருந்து கொண்டாடப்பட்டுவரும் தொன்மையான புத்தாண்டு இது.
நீருற்றும் புத்தாண்டு
‘சாங்க்ரன்’ எனப்படும் தாய்லாந்து புத்தாண்டு, ஏப்ரல் 13 முதல் 15 வரை மூன்று நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாகத் தாய்லாந்து மக்கள் வேடிக்கையாக ஒருவர் மீது மற்றொருவர் தண்ணீரை பீய்ச்சி அடித்துக்கொள்வது வழக்கம். கோப்பைகள், குவளைகள், தண்ணீர்த் துப்பாக்கிகள், குழாய்களில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துக்கொள்வார்கள். புதிய ஆண்டு நல்ல மழையைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடே இது. ஆறுகளில் மீன்களை விடுவதும் உண்டு. சக மனிதர்களின் மீதான பிடிப்பின் வெளிப்பாடாக நல்லெண்ணக் கயிறு களைக் கைகளில் கட்டி விடுவதும் வழக்கமாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT