Published : 02 Dec 2015 02:42 PM
Last Updated : 02 Dec 2015 02:42 PM
வாண்டு: ஹாய் பாண்டு குட் மார்னிங்.
பாண்டு: குட் மார்னிங் வாண்டு. பார்த்து ஒரு வாரம் ஆயிடுச்சு. ஊருக்கு எதுவும் போய்ட்டியா?
வாண்டு: அமெரிக்காவுல இருந்து எங்க மாமா வந்திருந்தாரு. மழை பெய்ஞ்சதால நமக்கு ஸ்கூல் லீவு விட்டுருந்தாங்க, இல்லையா? அதான், மாமா தினமும் என்னை வெளியே ரவுண்டு அடிக்க கூட்டிட்டுப் போய்ட்டாரு.
பாண்டு: ஓ... அப்படியா? ரொம்ப ஜாலியோ? சாக்லெட்லாம் வாங்கிட்டு வரலையா உங்க மாமா?
வாண்டு: வாங்கிட்டு வராமயா இருப்பாரு. நிறைய வாங்கிட்டு வந்திருந்தாரு. உனக்கும் எடுத்துட்டு வந்திருக்கேன் பாண்டு.
பாண்டு: ம்... அதானே! அப்புறம், அமெரிக்கா பத்தி உங்க மாமா என்னவெல்லாம் சொன்னாரு?
வாண்டு: நிறைய சொன்னாரு. அதுல ஒரு விஷயத்தை உன்கிட்ட சொல்லியே தீரணும்.
பாண்டு: அப்படி என்ன விஷயம் வாண்டு?
வாண்டு: ஒரு குட்டிப் பையன் செஞ்ச சாதனையைப் பத்திதான்.
பாண்டு: குட்டிப் பையனா? யாருபா அது?
வாண்டு: அந்தக் குட்டிப் பையன் பேரு ஐசயா பேர்ட். ஆறு வயசுதான் ஆகுது அவனுக்கு. நியூயார்க்குல இருக்கான். இவனுக்கு ரெண்டு காலும் இல்லையாம். இவுங்க அப்பா, அம்மாவோட தங்குறதுக்கு வீடுகூட இல்லையாம்.
பாண்டு: அச்சச்சோ... ரொம்ப பாவமா இருக்கே. இந்தக் கஷ்டத்துல அப்படி என்ன சாதனை செஞ்சான், அந்தக் குட்டிப் பையன்?
வாண்டு: அப்படி கஷ்டப்படுற அவன், இன்னைக்கு ஒரு மல்யுத்த வீரனா மாறிட்டான் பாண்டு.
பாண்டு: காலு இல்லைன்னு சொன்னியே வாண்டு. அப்புறம் எப்படி மல்யுத்த வீரனா மாற முடியும்?
வாண்டு: பயிற்சியும் முயற்சியும் இருந்தா எதையும் சாதிக்க முடியும்னு நம்ம டீச்சர் அடிக்கடி சொல்லுவாங்கல்ல. அது மாதிரிதான், இந்தக் குட்டிப் பையனுக்கு ரோட்ரிகஸ்னு ஒரு மல்யுத்தப் பயிற்சியாளர் பயிற்சி கொடுத்து, மல்யுத்த வீரனா மாத்திட்டாரு.
பாண்டு: என்னதான் பயிற்சி கொடுத்தாலும் காலு இல்லாம எப்படி மல்யுத்தத்துல விளையாட முடியும்?
வாண்டு: பாண்டு, மல்யுத்தத்துக்கு முக்கியமா கைகள்தானே தேவை. அதுக்கு தகுந்த மாதிரி பயிற்சி கொடுத்திருக்காங்க. அதனால ஐசயா, சுலபமா மல்யுத்தத்தைக் கத்துக்கிட்டான்.
பாண்டு: ரொம்ப ஆச்சரியமாத்தான் இருக்கு வாண்டு. அப்புறம் சாதனை செஞ்சதா சொன்னியே... அது என்ன சாதனை?
வாண்டு: கால்கள் இல்லாமலேயே மல்யுத்தம் விளையாடுறான். இதுவே பெரிய சாதனை இல்லையா பாண்டு? ஐசயாவுக்குக் கால்கள் இல்லாததால, மற்ற சிறுவர்களோட மோதுறப்ப வேகமா சண்டை போடணும். அதையும்கூட ஈஸியா செஞ்சுடுறானாம். இந்த வருஷத்துல அதிகப் போட்டிகள்ல ஜெயிச்சு, நியூயார்க் அளவிலான போட்டிகளுக்குத் தேர்வாகிட்டானாம்.
பாண்டு: கேட்கவே ரொம்ப ஆச்சரியமா இருக்கு வாண்டு.
வாண்டு: ஆமா, எங்க மாமா இந்த விஷயத்த சொல்றப்ப, எனக்கும் ஆச்சரியமா இருந்துச்சு. தன்னம்பிக்கை இருந்துச்சுன்னா எதையும் சாதிக்கலாம்னு சொல்லாம, செஞ்சு காட்டிட்டு இருக்கான் ஐசயா.
பாண்டு: ரொம்ப கரெக்டா சொன்ன வாண்டு.
வாண்டு: அப்புறம், அன்னைக்குப் பேசிட்டு இருக்குறப்ப, மழை பெய்யுறத எப்படி அளக்குறாங்கன்னு சொல்றேன்னு சொன்னியே. அதை நீ சொல்லவே இல்லை பாண்டு.
பாண்டு: ஆமா அதை சொல்றதுக்கு மறந்துட்டேன். மழையை மழைமானி மூலமா அளக்குறாங்க. மழைமானி 10 மி.மீட்டர்ல பிளாஸ்டிக், 200 மி.மீட்டர்ல்ல உலோகத்துல இருக்கும். இந்த மழைமானியை மரம், செடி, கொடி இல்லாத வெட்ட வெளியில வைச்சிருவாங்க. மழை பெய்யுறப்ப மழைமானியோட உட்புற உருளைக்கு மேலே இருக்குற புனல் மூலமா உருளைக்குள்ள மழை நீர் போகும். உட்புற உருளை நிறைஞ்சுடுச்சினா, மேற்புற உருளையில் மழை நீர் சேரும்.
வாண்டு: மழை நீரை இப்படி பிடிச்சு என்ன பண்ணுவாங்க பாண்டு?
பாண்டு: இப்படி சேர்ற மழை நீரை ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் அளப்பாங்க. ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கு ஒரு முறையும் மழைமானியில் சேர்ற மழைநீரை மில்லிமீட்டர் அளவுல கணக்கு எடுப்பாங்க. அந்த அளவுதான், அந்த இடத்துல எவ்வளவு மழை பெஞ்சுருக்குன்னு அர்த்தம்.
வாண்டு: ஓ... அப்படியா பாண்டு.
பாண்டு: ஆமா, நாமோகூட நம்ம வீட்டு மொட்டை மாடியில மழைமானிய வைச்சு நம்ம இடத்துல எவ்வளவு மழை பெய்ஞ்சதுன்னு கண்டுபிடிக்கலாம் வாண்டு.
வாண்டு: அப்போ இன்னைக்கே அதை செஞ்சிடுவோம்.
பாண்டு: சரிசரி... எந்த விஷயத்தையும் தள்ளிப்போடக் கூடாதுன்னு எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாரு. உடனே செஞ்சிடுவோம். அப்போ, போலாமா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT