Published : 23 Jun 2021 03:11 AM
Last Updated : 23 Jun 2021 03:11 AM

புதிய கண்டுபிடிப்புகள்: வைர மழை பொழிகிறது!

மழைத்துளி எந்த வடிவில் இருக்கும்? முதலில் கோள வடிவில் உருவாகும் துளிகள், பின்னர் கோழிமுட்டை வடிவம் எடுக்கும். கீழே விழும்போது அடிப்பக்கம் காற்று அழுத்தத்தால் அமுங்கி, குழிப்பணியார வடிவம் எடுக்கும்.

கோள்களின் ஈர்ப்பு கூடுதலாக இருந்தால், சிறிய அளவு கொண்ட மழைத்துளிகளைத்தான் உற்பத்தி செய்யும். ஈர்ப்பு வலுவற்று இருந்தால் பெரிய துளிகள் உருவாகும். மழைத்துளிகளின் அளவு என்னவாக இருந்தாலும் கீழே விழும்போது அவை எல்லாம் கிட்டத்தட்ட ஒரே அளவுடைய துளிகளாக மாறிவிடுகின்றன.

மழைத்துளியின் ஆவியாகும் விகிதம் அதன் பரப்பளவு சார்ந்தது. பரப்பளவு கூடுதல் என்றால் வேகமாக ஆவியாகும். பரப்பளவு சிறிது என்றால் மெதுவாக ஆவியாகும். பெரிய மழைத்துளிகள் வழியில் உடைந்து, சிறுதுளிகளாக மாறிவிடும். மிகச் சிறிய துளிகள் தரைக்கு வரும் முன்பே ஆவியாகிவிடும். நடுத்தரமான துளிகள் மட்டுமே நிலத்தை அடையும்.

மழையின் ஒரு பகுதி இப்படி ஆவியாகிவிடுவதால்தான் வளிமண்டலத்தில் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கிறது. இறுதியில் மில்லி மீட்டர் அளவிலிருந்து மில்லி மீட்டரில் பத்தில் ஒரு பங்கு அளவுவரை மழைத்துளிகளின் அளவு அமையும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பூமியில் நீர் மழையாகப் பொழிவது போலவே K2 18b எனும் புறக்கோளிலும் நீராவி கொண்ட மேகங்கள் மழையைப் பொழிகின்றன. WASP 76b எனும் புறக்கோளில் இரும்பு மழை, டைட்டனில் மீத்தேன் மழை, வியாழன் கோளில் அமோனியா மழை முதலியவற்றை ஆராய்ந்தார்கள்.எந்தக் கோளாக இருந்தாலும் எந்தப் பொருள் மழையாகப் பொழிந்தாலும் அவற்றின் அளவு பூமியில் பொழியும் மழைத்துளிகளின் அளவை ஒத்துதான் இருக்கும்.

வைர மழை

மழை என்றதும் சடசடவென விழும் நீர்த்துளிகள்தாம் நினைவுக்கு வரும். பூமியில் மட்டுமே கோளின் மேற்பரப்பில் கணிசமான நீர் இருக்கிறது. எனவே அந்த நீர் ஆவியாகி, மேகமாக உருவெடுத்தது மழையாகப் பொழிகிறது. ஆனால், மற்ற கோள்களில் பொழிவது நீர் அல்ல.

நேரடிச் சான்றுகளோடு உறுதி செய்யப்படவில்லை என்றாலும் நெப்டியூன் கோளில் வைர மழை பொழிகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆண்டுக்குச் சுமார் ஆயிரம் டன் வைரம் உருவாகி மழையாகப் பொழிகிறது. நுண் அளவு தூய கார்பன், நெப்டியூன் உள்ளே மிகு அழுத்தத்தில் வைரமாக மாறிவிடுகிறது. நெப்டியூன் மட்டுமல்ல சனி, வியாழன் கோள்களிலும்கூட வைர மழை பொழிகிறது.

நெப்டியுனுக்கு ஒரு டிக்கெட் போட்டு வைர மழையைச் சேகரித்து வர நினைக்கிறீர்களா? நெப்டியூன் ஒரு வாயுக் கோளம். இந்த மழை அதன் மேற்புறத்தில் பொழிவதில்லை, கோளின் உள்ளே 7000 கி.மீ. ஆழத்தில்தான் வைரம் தயாராகிறது. அங்கே உள்ள அழுத்தம் நம்மை அப்பளம் போல நசுக்கிவிடும்.

சல்பூரிக் அமில மழை

தொலைநோக்கியில் பார்க்கும்போது மேகமூட்டத்தால் மூடப்பட்டதாகவே வெள்ளிக் கோள் தென்படும். அவை நீர் செறிவான மேகங்கள் அல்ல. அவற்றில் உள்ளது சல்பூரிக் அமிலம்.

மேலடுக்கு பகுதியில் சல்பூரிக் அமில மழைத் துளியாக விழும்போது, தரைக்கு மேலே சுமார் 25 கி.மீ. உயரதுக்குள் மறுபடி ஆவியாகி விடுகிறது. எனவே, தரையில் விழும் சல்பூரிக் அமில மழைத்துளிகள் அரிது.

வியாழன் கோளில் ஹீலியம் மழை, அமோனியா பனிக்கட்டி மழை, சனிக் கோளின் நிலவான டைட்டனில் மீத்தேன் மழை என வெவ்வேறு கோள்களில் வெவ்வேறு பொருள்கள் மழையாகப் பொழிகின்றன. செவ்வாய்க் கோளில் கார்பன்டை ஆக்ஸைடு உலர்பனி துகள்களாகப் பொழிகிறது.

சூரியனைத் தவிர வேறு விண்மீன்களைச் சுற்றியும் கோள்கள் உள்ளன, அவற்றைப் புறக்கோள்கள் என்பார்கள். HD 189733 விண்மீனைச் சுற்றிவரும் HD 189733b எனும் புறக்கோளில் கண்ணாடி மழை பொழிகிறது. இந்தக் கோளின் வளிமண்டலத்தில் கண்ணாடி உருவாகும் மூலப்பொருளான சிலிகேட் செறிவாக உள்ளது. எனவே, நுண் அளவில் கண்ணாடித் துளிகள் மழையாகப் பொழிகின்றன.

கோள்களின் காலநிலை

திரவ நிலையில் மழை பொழியும்போது அது எந்தப் பொருளாக இருந்தாலும் அதன் அளவு பூமியில் பொழியும் மழைத்துளி அளவுக்கு நெருக்கமாகத்தான் இருக்கும். சூரியனைச் சுற்றும் கோள்களில் மட்டுமல்ல, பிரபஞ்சத்தில் வேறு விண்மீன்களைச் சுற்றிவரும் கோள்களில்கூட மழைத்துளியின் அளவு ஒரே மாதிரிதான் இருக்கும். ஒவ்வொரு கோளிலும் மேகங்கள் மூலம் சில நேரம் கோளின் வெப்பநிலை உயரக்கூடும், குறையக்கூடும். ஆனால், பொழியும் மழைத்துளியின் பரிமாணம் எல்லா இடங்களிலும் ஒரே அளவாகத்தான் இருக்கும் என்று சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்திருக்கிறது.

கட்டுரையாளர், விஞ்ஞானி

தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x