Last Updated : 30 Dec, 2015 12:29 PM

 

Published : 30 Dec 2015 12:29 PM
Last Updated : 30 Dec 2015 12:29 PM

வாண்டு பாண்டு: தண்ணீரைச் சேமிக்கும் சிறுமியின் கண்டுபிடிப்பு

வாண்டு: ஹாய் பாண்டு, குட் மார்னிங்.

பாண்டு: வணக்கம் வாண்டு. காலையிலேயே சீக்கிரமா குளிச்சிட்ட போல இருக்கே?

வாண்டு: ஆமா பாண்டு, இன்னைக்கு நூலகத்துக்குப் போலாம்னு இருக்கேன். அதான் ரெடியாயிட்டேன். நீயும் வர்றியா?

பாண்டு: அப்படியா வாண்டு, நானும் வாரேன். காலையிலேயே நூலகம் போக இவ்வளவு ஆர்வமா இருக்கியே. விஷயம் எதுவும் இல்லாம நீ இப்படி பண்ண மாட்டியே?

வாண்டு: குழந்தைகளோட கின்னஸ் சாதனைகளைப் பத்தி தெரிஞ்சுக்கணும். அதுக்காகத்தான் நூலகத்துக்குப் போறேன்.

பாண்டு: ஓ… குழந்தைகளுக்காக கின்னஸ் புத்தகம் அங்கே இருக்கா?

வாண்டு: குழந்தைகளுக்காக என்று தனியா புத்தகம் இல்லை. ஆனா, குழந்தைகளுக்குரிய கின்னஸ் இணையதளம் தனியா இருக்கு பாண்டு.

பாண்டு: ஓ... அப்போ அதுல குழந்தைங்க செஞ்ச சாதனைகளைப் போட்டிருப்பாங்களா?

வாண்டு: அது மாதிரி சாதனைகளைப் பத்தி இருக்காது. ஆனா, குழந்தைகளுக்குப் பிடிச்ச சாதனைகளைப் பத்தி அதுல போட்டிருப்பாங்க.

பாண்டு: நீ சொல்றது எதுவும் எனக்குப் புரியலை.

வாண்டு: புரியற மாதிரியே சொல்றேன். அந்த இணையதளத்துல விலங்குகள், மனித உடல், உணவு, பிரமிப்பான தகவல்கள், சேகரிப்பு விஷயங்களில் நடந்த சாதனைகளைப் பத்தி போட்டிருப்பாங்க. ரொம்ப வேடிக்கையான விஷயங்களைப் பத்தியும் இருக்கும். அதைப் பார்க்கவும் படிக்கவும் ரொம்ப ஜாலியா இருக்கும் பாண்டு.

பாண்டு: நீ சொல்றது இப்போதான் கொஞ்சம் புரியுது. அதுல ஏதாவது புதுசா வந்த, ஒரு சாதனையைப் பத்தி சொல்லேன்.

வாண்டு: உலகிலேயே அதிகமாக பந்துகள பிடிச்ச நாய், ரொம்ப நீளமான தூரத்துக்கு தாண்டுன பூனை பத்தியெல்லாம் அதுல வந்திருக்கு. இது மாதிரி எல்லாமே நம்மள மாதிரி சின்னப் பசங்க ஜாலியா படிக்க, நிறைய சாதனைகளைப் போட்டிருப்பாங்க.

பாண்டு: ஆஹா, இது நம்மள மாதிரி குட்டிப் பசங்களுக்கான இணையதளம்தான் போலிருக்கு. அந்த இணையதளத்தோட பேரைச் சொல்லேன்.

வாண்டு: இரு இரு சொல்றேன். >http://www.guinnessworldrecords.com/kids/pictures.html இந்த இணையதளத்துல போய் பார்த்த நிறைய ஜாலியான தகவல்களைப் பார்க்கலாம் பாண்டு.

பாண்டு: சரி வாண்டு. நீ சாதனைப் புத்தகத்தைப் பத்தி பேசுன பிறகுதான், நம்ம நாட்டுல ஒரு சின்னப் பொண்ணு செஞ்ச சாதனை எனக்கு ஞாபகத்துக்கு வருது.

வாண்டு: அப்படி என்ன சாதனை செஞ்சா அந்தச் சின்னப் பொண்ணு?

பாண்டு: நாமெல்லாம் ஷவரில் ஜாலியா குளிக்கிறோம்ல? அப்படி குளிக்கிறப்ப 65 - 80 லிட்டர் தண்ணீயை செலவு செய்றோமாம்.

வாண்டு: அப்படியா? அதுக்கும், இந்தச் சின்னப் பொண்ணு செஞ்ச சாதனைக்கும் என்ன சம்பந்தம்?

பாண்டு: கொஞ்சம் பொறு வாண்டு. ஒரு மனிதன் குளிக்க அதிகபட்சமா 35 லிட்டர் போதுமாம். அப்போ நாம எவ்ளோ தண்ணீரை வீணாக்குறோம் பாத்தியா? அப்படி தண்ணீயை வீணாக்காம இருக்க மகாராஷ்டிராவில் நாசிக் நகர்ல்ல இருக்குற 12 வயது சிறுமி ஷ்ருஷ்டி நேர்கர் ஒரு தீர்வைச் சொல்லியிருக்காப்பா.

வாண்டு: அப்படி என்ன தீர்வு அது?

பாண்டு: வழக்கமா நாம பயன்படுத்துற ஷவருக்குப் பதிலா வித்தியாசமான குழாய் முனைகளைக் கொண்ட புதுமையான ஷவர் ஒன்றை ஷ்ருஷ்டி செஞ்சிருக்கா. இத்தனைக்கும் ஷ்ருஷ்டி 6-ம் வகுப்புதான் படிக்குறா.

வாண்டு: 6-ம் வகுப்பு படிக்குற ஒரு சின்னப்பொண்ணு எப்படி இதை செய்ய முடியும்?

பாண்டு: எனக்கும் அந்த டவுட் வந்துச்சே. அவுங்க அப்பா ஒரு டிப்ளமோ இன்ஜினியராம். அவரோட உதவியோடதான் இதை செஞ்சிருக்கா. ஷவருக்காக வளையும் குழாய்களைப் பயன்படுத்தி இந்த சாதனையைப் படைச்சுருக்கா.

- ஷ்ருஷ்டி

வாண்டு: இதுல எவ்வளவு தண்ணியை மிச்சம் பிடிக்க முடியுமாம்?

பாண்டு: ஷ்ருஷ்டி செஞ்ச ஷவரைப் பயன்படுத்தினா குளிக்கிறதுக்கு 15 லிட்டர் தண்ணீர்தான் செலவாகுமாம். அதனால 50 60 லிட்டர் தண்ணீ மிச்சமாகுமாம். இப்படி ஒவ்வொருத்தரும் மிச்சம் பண்ணா, எவ்வளவு தண்ணி சிக்கனமாகும் தெரியுமா?

வாண்டு: இது ரொம்ப அவசியமான கண்டுபிடிப்புதான் பாண்டு. அதைச் செஞ்ச ஷ்ருஷ்டியை நாமும் பாராட்டுவோம்.

பாண்டு: இரு வாண்டு, நான் குளிச்சிட்டு வரேன். அப்புறமா நூலகத்துக்குப் போவோம்.

வாண்டு: சரி பாண்டு, ஷ்ருஷ்டி கண்டுபிடிச்ச ஷவர் நமக்குக் கிடைக்குற வரைக்கும் ஷவருல தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்துவோம். புத்தாண்டுக்கு இதையே நம் தீர்மானமா வைச்சுக்குவோமா பாண்டு?

பாண்டு: நீ சொல்வறதும் சரிதான். இந்தப் புது வருஷத்துல இருந்து தண்ணியை வீணாக்கமாட்டோம்… தண்ணியைச் சேமிப்போம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x