Published : 09 Dec 2015 12:26 PM
Last Updated : 09 Dec 2015 12:26 PM
வாண்டு: ஏய் பாண்டு... என்னா இவ்வளவு சோகமா இருக்கே?
பாண்டு:ஆமா வாண்டு. சென்னை, கடலூர்ல வந்த வெள்ளத்தை நினைச்சேன். அதை நினைக்குறப்பவே பயமாவும் கவலையாவும் இருக்கு.
வாண்டு: ஓ... வெள்ளத்தைப் பத்தி சொல்றியா? அதை நினைச்சா எனக்கும் ஒரே பயமாத்தான் இருக்கு பாண்டு.
பாண்டு: சரி, வெள்ளம் வந்த அன்னைக்கு நீ எங்க இருந்த?
வாண்டு: வீட்டுல தூங்கிட்டு இருந்தேன் பாண்டு, போன செவ்வாய்க்கிழமை சாயங்காலம் மழை கொட்டிட்டு இருந்தப்போ, கண்டிப்பா வெள்ளம் வந்துடும்ணு அம்மா சொன்னாங்க. அதெல்லாம் வராதும்மா, நவம்பர் மாசம் 15-ம் தேதி ஒரே நாள்ல 240 மி.மீ. மழை பெய்ஞ்சப்பவே, நம்ம வீட்டுக்குள்ள வரல. இப்ப வரப்போகுதான்னு சொல்லிட்டிருந்தேன். ஆனா, அதெல்லாம் பொய்யாப் போச்சு. நைட்டு ஆரம்பிச்சவுடனே வெள்ளம் வந்துடுச்சு. ஆமா, நீ எங்க இருந்த பாண்டு?
பாண்டு: அன்னைக்கு சாயங்காலம் அம்மாகூட கடைக்குப் போய், அங்கேயே மாட்டிக்கிட்டேன். எங்க பக்கத்து வீட்டு அகமது அங்கிளும் கடைக்கு வந்திருந்தாரு. அவுருதான் என்னையும், எங்க அம்மாவையும் பத்திரமா வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தாரு.
வாண்டு: ஓ... அப்படியா! மாடி வீட்டுல இருக்குற நாம பாதுகாப்பா இருந்தோம். ஆனா, குடிசை வீட்டுல இருந்த சின்னக் குழந்தைகளும், குட்டிப் பசங்களும் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருப்பாங்க.
பாண்டு: வெள்ளம் வந்த அன்னைக்குக் குழந்தைகளைக் கையில தூக்கிக்கிட்டு அவுங்க அம்மா, அப்பாக்களும் பாதுகாப்பான இடம் தேடி சென்னைல நீந்தியும் ஓடியும் போயிருக்காங்க. கடலூர்லயும் இப்படித்தான் நிறைய பேரு கஷ்டப்பட்டிருக்காங்க.
வாண்டு: அது மட்டுமா, நிறைய கடைகள மூடிட்டதால, குழந்தைகளுக்குப் பால்கூட கிடைக்கலையாம்.
பாண்டு: ஆமா வாண்டு, நான்கூட பேப்பர்ல படிச்சேன். எங்க வீட்டுல பால் பவுடர் இருந்ததால, என் குட்டித் தம்பிக்கு அதைக்கலக்கி எங்கம்மா பால் கொடுத்தாங்க.
வாண்டு: அது நல்ல விஷயம். ஆனா, குடிசை வீட்டுலயும் பிளாட்பாரத்துலயும் இருந்த குழந்தைங்களுக்கெல்லாம் எந்தச் சாப்பாடும் கிடைச்சிருக்காதே.
பாண்டு: ஆமா வாண்டு, அதை நினைச்சு எனக்கும் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனா, அந்த வெள்ளத்துலயும் முகம் தெரியாத நிறைய பேரு பால், தண்ணீ, பிஸ்கட், சாப்பாட்டுப் பொட்டலம் கொண்டுவந்து கொடுத்திருக்காங்க தெரியுமா?
வாண்டு: ஆமா பாண்டு. சென்னையில பக்கத்து வீட்டுல இருக்குறவங்க பேருகூட தெரியாம வாழ்றாங்கன்னு எங்கப்பா அடிக்கடி சொல்வாரு. ஆனா, அப்படி முகம் தெரியாத நிறைய பேரு மழை வெள்ளத்துல பாதிக்கப்பட்டவங்களுக்கும், குழந்தைங்க, குட்டிப் பசங்களுக்கு ஓடோடி வந்து உதவி செஞ்சியிருக்காங்க, தெரியுமா?
பாண்டு: அதை பேப்பர்ல பார்த்தப்ப எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. சென்னைக்கு வெளியே இருந்தும் நிறைய பேரு உதவி செய்ய ஓடோடி வர்றாங்க வாண்டு.
வாண்டு: அப்புறம், நம்மள மாதிரி படிக்கிற குட்டிப் பசங்களோட நோட்டு புத்தகமெல்லாம் வெள்ளத்துல அடிச்சுக்கிட்டு போயிடுச்சாம்.
பாண்டு: பாய்ஞ்சோடி வந்த வெள்ளத்துக்கு காரே அடிச்சுக்கிட்டு போகும்போது, நோட்டு புத்தகமெல்லாம் எம்மாத்திரம்? ஆனா, அவுங்களுக்கு புதுசா புத்தகம் தரதா அரசாங்கம் சொல்லியிருக்குன்னு கேள்விப்பட்டேன்.
வாண்டு: ஓ... அப்படியா, நம்ம ஸ்கூல் டீச்சர் நேத்து போன் பண்ணாங்க. ஸ்கூலுக்கு திரும்ப வர்றப்ப வெள்ளத்துல பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவ காசு கொண்டுவரச் சொன்னாங்க. உனக்கு போன் வந்துச்சா?
பாண்டு: எனக்கும் வந்துச்சு வாண்டு. பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவ ஒவ்வொருத்தரும் கைக்கோக்கணும். அதுல நம்ம கையும் நிச்சயம் இருக்கணும் வாண்டு.
வாண்டு: கரெக்டா சொன்ன.
பாண்டு: அப்புறம், வெள்ள நீர் தேங்குனதால நிறைய தொற்று நோய் வருமாம். நம்மள மாதிரி சின்னப் பசங்களுக்கு உடனே வந்துடும். அதனால தேங்குன வெள்ள நீர்ல இறங்கி விளையாடக்கூடாதுன்னு எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற டாக்டர் அங்கிள் எச்சரிக்கை பண்ணினாரு.
வாண்டு: அதுமட்டுமா, சுடுதண்ணி மட்டும்தான் குடிக்கணுமாம். கொஞ்ச காலத்துக்கு நாம ரொம்பப் பாதுகாப்பா இருந்துக்கணும்.
பாண்டு: ஐயோ வாண்டு, மழை தூற ஆரம்பிக்குது. வா, வீட்டுக்குப் போயிடுவோம்.
வாண்டு: ஆமா ஆமா. சீக்கிரம் ஓடு... ஓடு...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT