Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM
கீழடி – வைகை நாகரிகம்,
க. சுபாஷிணி
‘உலக நாகரிகங்கள் வரிசை’யில் முதல் நூலாக ‘கீழடி – வைகை நாகரிகம்’ என்கிற தலைப்பில் குழந்தைகளும் அறிந்துகொள்ளும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. எழுதியவர் தமிழ் மரபு அறக்கட்டளைத் தலைவர் க. சுபாஷிணி.
ஜெர்மனியில் ஆறாம் வகுப்பு படிக்கும் தமிழ்ப் பெண்ணான ஔவை குடும்பத்தினருடன், மதுரை செல்லூரில் வசிக்கும் மாமா செல்வத்தின் குடும்பத்தினரைச் சந்திக்க வருகிறாள்.அங்கு மாமாவின் குழந்தைகள் நிலா, கீரனுடன் கீழடி வைகை நாகரிகம் குறித்து அவள் அறிந்துகொள்கிறாள். மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகம், கீழடி தொல்பொருள் ஆராய்ச்சித் தளம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று தொல்லியல் குறித்து ஆழமாக அறிந்துகொள்கிறாள்.
கதைப் போக்கிலேயே கீழடி ஆய்வின் மையமாக இருந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியே வைகை நாகரிகம் என வலியுறுத்தி ஆராய்ச்சிகளை முன்வைத்துவரும் ஆட்சிப்பணி அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோரும் இந்தக் கதைக்குக் கூடுதல் வலுசேர்க்கிறார்கள்.
பானைகள், அவற்றில் எழுத்துப் பொறிப்பு, சுடுமண் சிற்பங்கள், பண்டைத் தமிழகப் பெயர்கள், கீழடி நாகரிகம் குறித்த காலக்கணிப்பு, சிந்துவெளி நாகரிகத்துக்கும் கீழடி நாகரிகத்துக்கும் இடையிலான தொடர்பு எனப் பல்வேறு தொல்லியல் அம்சங்கள் கதைப்போக்கில் விளக்கப்பட்டுள்ளன. ஜெர்மனி திரும்பும்போது, எதிர்காலத்தில் தானும் ஒரு தொல்லியல் ஆராய்ச்சியாளராக வேண்டுமென உறுதியெடுத்துச் செல்கிறாள் ஔவை.
பூப்பூவாய் ஒரு உலகம்,
டிரினா பாலஸ், தமிழில்: சென்னி வளவன்
இந்த உலகத்தில் மனிதர்கள் வாழ்வதன் அர்த்தம் குறித்து உருவகப்படுத்தி பல கதைகள் எழுதப்பட்டுவிட்டன. பெரியவர்களுக்கான தத்துவ உரையாடலுக்குள் நுழையாமல், மனித வாழ்க்கையின் மேன்மைகளைப் பேசிய பல கதைகள் உண்டு. அப்படிப்பட்ட புகழ்பெற்ற கதைகளில் ஒன்று டிரினா பாலஸ் எழுதிய ‘Hope for the Flowers’. இந்தப் புத்தகம் ‘பூப்பூவாய் ஒரு உலகம்’ என்கிற பெயரில் பெரு. முருகனால் (சென்னி வளவன்)மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மஞ்சுளா, கறுப்பன் என்கிற இரண்டு கம்பளிப்புழுக்கள் இலைகளைத் தின்றுகொண்டே இருக்கின்றன. ஆனால், அதைவிடப் பெரிய விஷயத்தை அடைய வேண்டுமென இரண்டும் விரும்புகின்றன. ஆனால், கம்பளிப்புழுக்களால் ஆன தூண்களின் மீது மற்ற கம்பளிப்புழுக்கள் ஏறி உச்சிக்குச் செல்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. மஞ்சுளாவும் கறுப்பனும் இந்தப் பந்தயத்தில் ஒரு கட்டத்தில் ஈடுபட்டாலும், பிறகு அதிலிருந்து விலகிவிடுகிறார்கள்.
மஞ்சுளா தன்னைச் சுற்றி, பட்டு நூலால் கூடு கட்டி, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வண்ணத்துப்பூச்சியாகி தனது தனித்தன்மையைக் கண்டடைகிறது. ஆனால், இடையிலேயே தூணில் ஏறப்போன கறுப்பன், உச்சிக்குச் சென்றுவிட்டு, அதன் பிறகு ஏதுமற்றதை உணர்கிறது. அது மஞ்சுளாவிடம் திரும்ப வருகிறது. பிறகு அதுவும் பட்டுக்கூட்டை கட்டத் தொடங்கி வண்ணத்துப்பூச்சியாக மாறித் தனது தனித்தன்மையைக் கண்டடையத் தயாராகிறது.
இரண்டு நூல்களும் வெளியீடு - பயில் பதிப்பகம், தொடர்புக்கு: 72000 50073
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT