Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM

புதிய கண்டுபிடிப்புகள்: செவ்வாயில் செயற்கை மரம்!

இளங்கோவன்

எம்.ஐ.டி., ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்த உத்தியைக் கொண்டு அமெரிக்க விண்வெளித் துறை செவ்வாய்க் கோளில் ஆக்சிஜனை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய்க் கோளில் பெர்சிவரன்ஸ் ரோவர் வாகனம் தரை இறங்கியது. இந்த விண்கலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட மோக்சி (Moxie) கருவி, ஏப்ரல் 20 அன்று இயக்கப்பட்டு, ஒரு மணி நேரத்தில் 5.4 கிராம் ஆக்சிஜனைத் தயார் செய்தது. இந்த அளவு ஆக்சிஜன் ஒரு சராசரி மனிதன் பத்து நிமிடங்களுக்குச் சுவாசிக்கப் போதுமானது. முழு வீச்சில் செயல்படும்போது இந்தக் கருவி மணிக்குப் பத்து கிராம் ஆக்சிஜனைத் தயார் செய்யும்.

செயற்கைத் தாவரம்

விண்வெளியில் மனிதன் சுவாசிக்க ஆக்சிஜன் இல்லை. செவ்வாய் உள்படப் பல்வேறு கோள்களின் வளிமண்டலத்திலும் ஆக்சிஜன் இல்லை. பூமியைச் சுற்றி விண்வெளியில் வலம்வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் நீரை மின்பகுப்பு செய்து ஆக்சிஜனைப் பெறுகிறார்கள். இந்த முறையில் வெகுவாக ஆற்றலைச் செலவழித்துத்தான் ஆக்சிஜனைப் பெற முடியும். எனவே, மாற்றுவழிகளை ஆராயும்போது இந்தப் புதிய வழியைக் கண்டுபிடித்தார்கள்.

ஒளிச்சேர்கை நிகழ்வின்போது காற்றில் உள்ள கார்பன் டைஆக்சைடை எடுத்துக்கொண்டு, ஆக்சிஜனைத் தாவரங்கள் வெளியிடுகின்றன. அதுபோல் செவ்வாயின் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டைஆக்சைடை எடுத்து, கார்பனைத் தனியாகவும் ஆக்சிஜனைத் தனியாகவும் பிரிக்கிறது மோக்சி. எனவே இதை ‘செயற்கைத் தாவரம்’ என்று அழைகிறார்கள்.

இதில் ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ளது. தாவரம் H2Oஎன்கிற நீரையும் CO2என்கிற கார்பன்டை ஆக்சைடையும் எடுத்துக்கொண்டு, சூரியனின் ஆற்றலைப் பயன்படுத்தி குளுக்கோஸைத் தயார் செய்து, ஆக்சிஜனை வெளியிடுகிறது. தாவரம் வெளியிடும் ஆக்சிஜன், நீர் மூலக்கூறிலிருந்து வெளியே வருகிறது. ஆனால், ஒருவித அணு ஆற்றல் கருவியைப் பயன்படுத்திதான் மோக்சி தனக்கு வேண்டிய ஆற்றலைப் பெறுகிறது.

நீரின் மின்னாற்பகுப்பின்போது, மின்னோட் டத்தின் மின்னழுத்தத்தில் நீர் மூலக்கூறுகள் ஹைட்ரஜன், ஆக்சிஜனாக உடைந்து போகின்றன. நேர்மின்வாய் (anode) பகுதியில் ஆக்சிஜனும் எதிர்மின்வாய் (cathode) பகுதியில் ஹைட்ரஜனும் வெளிப்படும். அதே மாதிரிதான் மோக்சியும் திடநிலை மின்னாற்பகுப்பு கருவி.

செவ்வாயில் குடியேற்றம்

பூமியைவிடச் சுமார் 170 மடங்கு குறைந்த அடர்த்தி கொண்டது செவ்வாய் வளிமண்டலம். பூமியில் சுமார் 21 சதவீதம் ஆக்சிஜன், 0.04 சதவீதம் மட்டுமே கார்பன்டை ஆக்சைடு. செவ்வாயில் 96 சதவீதம் கார்பன்டை ஆக்சைடு, 0.13 சதவீதம் மட்டுமே ஆக்சிஜன்.

செவ்வாய்க்கு மனிதனை அனுப்பி ஆராய்ச்சி செய்வதோடு, எதிர்காலத்தில் செவ்வாயில் மனிதன் குடியிருக்க ஏற்பாடு செய்யவும் திட்டமிடுகின்றனர்.அங்கே மனிதன் வாழ ஆக்சிஜனும் நீரும் அவசியம். இந்தக் கருவி மூலம் தேவையான ஆக்சிஜனைத் தயாரித்துக்கொள்ள முடியும். மோக்சி தயாரிக்கும் ஆக்சிஜனை ஹைட்ரஜனுடன் வினைபுரியச் செய்தால் நீரும் கிடைத்துவிடும்.

செவ்வாயில் ஆக்சிஜன் தயார் செய்த மோக்சி கருவியை வடிவமைத்து உருவாக்கிய ‘ஆக்ஸியோன் எனர்ஜி’ நிறுவனத்தின் ஆய்வுத் தலைவர் எஸ். இளங்கோவன். இவர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இளங்கலை வேதியியல் படித்துவிட்டு, பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் மேற்கல்வி பயின்றவர். அமெரிக்காவில் வசிக்கும் இவர், செவ்வாயில் மோக்சி ஆக்சிஜன் தயார் செய்ததும் நெகிழ்ந்துபோனதாகச் சொல்லியிருக்கிறார்.

கட்டுரையாளர், விஞ்ஞானி

தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x