Published : 09 Dec 2015 12:22 PM
Last Updated : 09 Dec 2015 12:22 PM

உலகின் மாபெரும் வெள்ளம்!

100 ஆண்டுகளில் பெய்த மிகப் பெரிய மழையில் சென்னை மூழ்கிக் கிடக்கிறது. அதேநேரம் காலங்கள்தோறும் பெருவெள்ளங்களைப் பற்றி பல கதைகள் நம்மிடையே புழங்கிவந்துள்ளன. உலகில் பெய்த மிக நீண்ட மழை தொடர்பாக நமக்கெல்லாம் தெரிந்த பிரபலமான கதை, நோவாவின் கப்பல் கதை.



நோவாவின் கப்பல்

உலகில் மிகப் பெரிய வெள்ளம் வரப்போவதாகவும், அப்போது உலகிலுள்ள அனைத்து உயிரினங்களிலும் ஒரு ஜோடியை காப்பாற்றுமாறும் நோவாவுக்குச் செய்தி வருகிறது. அதற்காக மிகப் பெரிய கப்பலைக் கட்டுகிறார் நோவா. பெருவெள்ளம் வருவதற்கு ஏழு நாட்களுக்கு முன் நோவாவின் குடும்பத்தினரும் மற்ற உயிரின ஜோடிகள் தலா ஒவ்வொன்றும் அந்த மாபெரும் கப்பலில் ஏறிக்கொள்கின்றன.

அராரத் மலைகளில் முட்டுக்கொடுத்துக் கப்பல் நின்ற பிறகு, வெள்ளம் வடியத் தொடங்குகிறது. பைபிளின் முதல் அத்தியாயத்தில் இந்தக் கதை உள்ளது. இதே போன்ற மற்ற மத நூல்கள், பண்பாடுகளிலும் பெருவெள்ளம் பற்றிய கதைகள் இருக்கின்றன.



500 கதைகள்

உலகெங்கிலும் பெருவெள்ளம் பற்றிய 500-க்கும் மேற்பட்ட பழங்கதைகள் உள்ளன. பைபிளில் வரும் நோவாவின் கப்பல் தொடர்பான பிரபல கதையைப் போலவே உலகப் பழங்குடி இனங்கள் பலவற்றிலும் பெருவெள்ளம் பற்றிய கதைகள் உள்ளன.

இந்தியா, சீனா, பாபிலோனியா, வேல்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, ஹவாய், ஸ்காண்டிநேவியா, சுமத்ரா, பெரு, பாலினேசியா ஆகிய பண்டைய நாகரிகப் பகுதிகளில் பெருவெள்ளம் பற்றி, அந்தந்தப் பகுதிகளுக்கே உரிய அம்சங்களுடன் இந்தக் கதைகள் அமைந்திருக்கின்றன.

இந்த வாய்மொழிக் கதைகளில் சிற்சில மாற்றங்கள் இருந்தாலும், அடிப்படைக் கதை பெரும்பாலும் ஒன்று போலவே இருக்கிறது.

சுமேரிய கில்காமெஷ் கதையும் பைபிள் நோவாவின் கப்பல் கதையும் ஒரே ஆதாரத்திலிருந்து உருவாகியிருக்க வேண்டும். ஒரு நிகழ்வில் இருந்தோ அல்லது ஒரு வாய்மொழி பரம்பரைக் கதையில் இருந்தோ இவை உருவாகியிருக்கலாம்.



மனிதர்கள் இல்லாத மழை

அறிவியல்பூர்வமாகப் பார்த்தால், உலகில் தோன்றிய முதல் பெருவெள்ளம், பூமியில் எந்த உயிர்களும் தோன்றாத காலத்தில் உருவானது. 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பூமி தோன்றியது. அப்போது சூரியன் கட்டுக்கடங்காத அளவுக்குச் சுட்டெரித்துக்கொண்டிருந்தது.

அது குளிரத் தொடங்கியவுடன் புயலும் பெருமழையும் தொடங்கின. பூமியில் பெய்த மிக நீண்ட மழை அதுதான். லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு இந்த மழை பெய்துகொண்டிருந்தது. எவ்வளவு என்றால், நிலம் இருந்த பகுதிகள் எல்லாம் பெருங்கடல்களாக மாறும் அளவுக்கு அந்த மழை இருந்தது.



கில்காமெஷ் வெள்ளம்

நோவாவின் கப்பல் கதையைப் போலவே பண்டைய சுமேரிய நாகரிக காலத்தில் எழுதப்பட்ட கில்காமெஷ் காவியத்திலும் ஒரு கதை உள்ளது. இந்தக் காவியத்தின் தலைவன் கில்காமெஷ், உத்னாபிஷ்டிம் என்ற முதிய மனிதனை சந்திக்கிறான். அவர் தன்னுடைய அனுபவத்தைச் சொல்கிறார்.

மிகப் பெரிய வெள்ளம் வரப்போகிறது என்பதால், அவருடைய வீட்டை இடித்துவிட்டு மிகப் பெரிய கப்பலைக் கட்டுமாறு உத்னாபிஷ்டிமுக்கு அறிவுறுத்தப்படுகிறது. கப்பல் கட்டப்பட்டு முடிந்தவுடனேயே மழை பெய்ய ஆரம்பிக்கிறது. நோவாவைப் போலவே உத்னாபிஷ்டிம் குடும்பத்தினருடன், அனைத்து உயிரினங்களிலும் ஒரு ஜோடியும் உணவும் கப்பலில் ஏற்றப்படுகின்றன.

ஆறு நாட்களுக்கு இடைவெளி இல்லாமல் மழை பெய்கிறது. நிசிர் மலையில் முட்டி கப்பல் நிற்கிறது. ஏழு நாட்களுக்குப் பிறகு கப்பல் நின்றதும், உத்னாபிஷ்டிம் ஒரு புறாவைப் பறக்க விடுகிறார். நிலம் காயாததால் அந்தப் புறா திரும்ப வருகிறது. அதன் பிறகு அனுப்பிய தைலான் குருவியும் திரும்பிவிடுகிறது. பிறகு காக்கையை அனுப்புகிறார். அது திரும்ப வரவில்லை. சாப்பிட்டுவிட்டு, அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் பறந்துகொண்டிருக்கிறது. அதன் பிறகு கப்பலிலிருந்து அனைவரும் இறங்குகிறார்கள்.

இந்த இரண்டு கதைகளும் பல வகைகளில் ஒன்றைப் போலவே இருக்கின்றன. நோவாவின் கதை, கில்காமெஷ் கதைகளைப் போலவே இந்தியாவிலும் ஒரு கதை இருக்கிறது.



மனுவும் காஷா மீனும்

இந்தியாவில் நீண்ட காலத்துக்கு முன் மனு என்றொருவன் குளிக்கும்போது, ஒரு பெரிய மீன் விழுங்குவதிலிருந்து சின்ன மீன் ஒன்றைக் காப்பாற்றுகிறான். ‘நான் முழுதாக வளரும்வரை என்னைக் காப்பாற்றினால், மோசமான காலத்தில் உனக்கு உதவுவேன்’ என்று அந்த மீன் கூறுகிறது. என்ன மாதிரி மோசமான விஷயங்கள் வரப்போகின்றன என்று மனு கேட்கிறான். ‘பெருவெள்ளம் வரப்போகிறது, பூமியில் உள்ள அனைத்தையும் அது அழிக்கப்போகிறது. என்னைக் காப்பாற்ற ஒரு களிமண் குடுவையில் போட்டு வை’ என்று அந்த மீன் சொல்கிறது.

பிறகு அந்த மீன் வளர்ந்துகொண்டே போகிறது. மீன் வளர வளர ஜாடியை மாற்றி பெரிதாக வைத்துக்கொண்டே இருக்கிறான் மனு. கடைசியில் அது காஷா என்ற உலகிலேயே மிகப் பெரிய மீனாக வளர்கிறது. வரப்போகும் வெள்ளத்திலிருந்து தப்பிக்க மிகப் பெரிய கப்பலைக் கட்டுமாறு அந்த மீன் அறிவுறுத்துகிறது. மழை பெய்யத் தொடங்கியவுடன் கப்பலில் கயிற்றைக் கட்டி, காஷா மீனுடன் பிணைத்துவிடுகிறான் மனு.

பூமி முழுவதும் தண்ணீர் சூழ்கிறது. காஷா மீனுடைய வழிகாட்டுதலில் கப்பல் பயணிக்கிறது. பிறகு தண்ணீர் வடிய ஆரம்பித்தவுடன் மனுவின் கப்பலை ஒரு மலை உச்சிக்கு இட்டுச் செல்கிறது காஷா மீன். அதில் இருக்கும் அனைவரும் பூமியில் இறங்கி உயிர்வாழ ஆரம்பிக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x