Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM
வறுமைக்கும் பசிக்கும் வேலைக்குச் செல்லும் குழந்தைகளைக் ‘குழந்தைத் தொழிலாளர்’ என்கிறோம். திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடிக்கும் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர் இல்லையா, டிங்கு?
- பி.ஜி. மாதங்கி, 7-ம் வகுப்பு, செயின்ட் ஜோசப் பள்ளி, குன்னூர்.
இந்த வயதில் ரொம்ப நல்ல கேள்வி மாதங்கி. நடிப்பு என்பதை வேலையாக அல்லாமல், ஒரு கலையாகத்தான் பார்க்கிறது இந்தச் சமூகம். வறுமையின் காரணமாக வேலைக்குச் செல்லும் குழந்தைகள் தங்கள் வயதுக்கு மீறிய கடினமான வேலைகளைச் செய்கிறார்கள். பல மணி நேரம் உழைக்கிறார்கள். அவர்களின் உழைப்புக்குக் குறைந்த வருமானமும் பாதுகாப்பும்தான் கொடுக்கப்படுகிறது. அவர்கள் விரும்பியும் இந்த வேலைக்குச் செல்வதில்லை. நாள் முழுவதும் உழைத்துவிட்டு வரும்போது, அவர்களால் அந்த வயதுக்குரிய படிப்புக்கோ விளையாட்டுக்கோ நேரம் இல்லாமல் போய்விடுகிறது.
குழந்தைத் தன் குழந்தைத்தனத்தை இழந்துவிடுகிறது. நடிப்பு என்பது பெரும்பாலும் விரும்பிச் செய்வதாக இருக்கிறது. இந்தியத் தொழிலாளர் சட்டப்படி ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரத்துக்கு மேல் நடிக்கக் கூடாது. போதிய ஓய்வு கொடுத்துத்தான் நடிக்க வைக்க வேண்டும். பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். குழந்தைக்குக் கஷ்டமான விஷயங்களைச் செய்யச் சொல்லக் கூடாது. 27 நாட்களுக்கு மேல் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கக் கூடாது. மாவட்ட நீதிபதியிடம் அனுமதி வாங்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் எல்லாம் நடிப்புக்கு இருக்கிறது. அதனால், நடிக்கும் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாகக் கருதப்படுவதில்லை.
ரயில் வண்டியின் கடைசிப் பெட்டியில் ‘X’ என்று எழுதப்பட்டிருக்கிறதே ஏன், டிங்கு?
- தா. லோகேஸ்வரி, 10-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, பிராட்டியூர், திருச்சி.
ரயிலின் கடைசிப் பெட்டி என்பதைக் குறிக்கும் விதத்தில் X என்று மஞ்சள் நிறத்தில் எழுதப்பட்டிருக்கும். X மட்டுமின்றி அதுக்குக் கீழே சிவப்பு விளக்கும் அருகில் LV (Last Vehicle) என்கிற எழுத்துகளும் காணப்படும். சிவப்பு விளக்கு எரிந்தால் அது இரவு நேரம். அந்த வெளிச்சத்தில் X எழுத்து பளிச்சென்று தெரியும். பகலில் விளக்கு இல்லாமலேயே X நன்றாகத் தெரியும்.
X சின்னத்துடன் கடைசிப் பெட்டி வரவில்லை என்றால், ரயிலில் ஏதோ பிரச்சினை என்று அறிந்துகொள்ளலாம். அல்லது சில பெட்டிகள் இல்லாமல் ரயில் செல்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். தொலைத்தொடர்பு கருவிகள் இல்லாத காலத்தில் இதை வைத்து ரயிலின் பிரச்சினைகளை அதிகாரிகள் புரிந்துகொண்டு, நடவடிக்கை எடுத்தார்கள், லோகேஸ்வரி.
சட்ட மேதை அம்பேத்கரிடமிருந்து நாங்கள் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் சொல்லேன், டிங்கு.
- வ. லக்ஷணா, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
எந்தக் காரணம் கொண்டும் சக மனிதர்களிடம் பாகுபாடு பார்க்கக் கூடாது என்பதை நாம் எல்லோரும் மாமேதை அம்பேத்கரிடமிருந்து அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும், லக்ஷணா.
சார்லஸ் டிக்கின்ஸ் எழுதிய டேவிட் காப்பர்ஃபீல்ட், ஆலிவர் ட்விஸ்ட் எனக்கு மிகவும் பிடிக்கும். இவற்றில் உனக்கு எது அதிகம் பிடிக்கும், டிங்கு?
- ஜெ. சஞ்சனா, 9-ம் வகுப்பு, செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்.
சார்லஸ் டிக்கின்ஸ் நாவல்கள் அனைத்தும் மனத்தை நெகிழச் செய்யக்கூடியவை. டேவிட் காப்பர்ஃபீல்டும் பிடிக்கும், ஆலிவர் ட்விஸ்ட்டும் பிடிக்கும். இவை இரண்டையும்விட ‘கிறிஸ்துமஸ் கேரல்’ ரொம்பப் பிடிக்கும், சஞ்சனா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT