Last Updated : 18 Nov, 2015 11:18 AM

 

Published : 18 Nov 2015 11:18 AM
Last Updated : 18 Nov 2015 11:18 AM

பசுமைப் பள்ளி - 9: ஐந்திணை அறிக

பசுமைப் பள்ளியின் குழந்தைகளுக்கு இம்முறை ஐந்திணைப் பாடம். பாடங்களை நேரடியாகக் களத்தில் கற்றுக்கொள்வதுதானே அவர்களுடைய வழக்கம்! அவர்கள் அனைவரும் ஒரு பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். வழியில் உதிர்ந்து கிடந்த யானைத் தந்த நிற மரமல்லிப் பூக்களை எடுத்து முகர்ந்து கொண்டே போனார்கள். குட்டி நாகசுரம் போன்றிருந்த அந்தப் பூவிலிருந்து நறுமணம் வந்தது. அப்போது…

‘டிட் யு டூ யிட்… டிட் யு டூ யிட்…’

ஆள்காட்டிப் பறவை ஒன்று கத்தியது. இந்தப் பறவை அந்நியர்களைப் பார்த்துவிட்டால், இப்படித்தான் கத்தும். இதனால்தான் இதை ‘ஆள் காட்டும் பறவை’என்ற பொருளில், இப்படி அழைக்கிறார்கள். எழிலி என்ற சிறுமிக்கு இந்தப் பறவையைப் பற்றிய ஒரு நாட்டுபுறப் பாடல்கூட தெரியும். அதை அவள் பாடிக்காட்டினாள்.

ஆக்காட்டி ஆக்காட்டி அழகியம்மா ஆக்காட்டி

எங்கெங்கே கூடு கட்டி எத்தினி மொட்டு வச்சே?...

அந்தப் பாடலைக் கேட்டதும் ஆள்காட்டிப் பறவைக்கு, இக்குழந்தைகள் தன் நண்பர்கள் என்பது புரிந்தது. அது எசப்பாட்டு எனும் பதில் பாட்டைப் பாடிக்கொண்டே குழந்தைகளுக்கு அருகில் வந்தது.

ஆத்தோரம் குழிப்பறிச்சு, கரையோரம் கால்பாத்து

கல்லைப் போல, நான் போட்ட நல்ல மொட்டு நாலல்லவோ

தரையில் இறங்கும்போது ஆள்காட்டிப் பறவை விமானம் தரையில் இறங்குவதுபோல் சிறிது தொலைவுக்கு ஓடிவந்து பிறகே நின்றது.

“நலமா குழந்தைகளே? எங்கே இந்தப் பக்கம்?”

“நாங்கள் ஐந்திணைப் பாடம் படிக்க வந்தோம்”

“ஐந்திணை என்றால் என்ன, சொல்லுங்கள் பார்ப்போம்?” ஆள்காட்டியின் கேள்விக்குப் பதில் சொன்னாள் எழிலி.

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி

காடும் காடு சார்ந்த இடமும் முல்லை

வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம்

கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல்

மணலும் மணல் சார்ந்த இடமும் பாலை

“நீங்கள் சொல்வது எல்லாம் உங்கள் புத்தகத்தில் இருப்பது. ஐந்திணையின் இப்போதைய உண்மை நிலையை நேரில் போய்ப் பாருங்கள், ஏமாந்து போவீர்கள்! அந்த அளவுக்கு மனிதர்களின் பேராசை இந்த நிலங்களைக் கெடுத்து வைத்துள்ளது.”

“எப்படி?” என்றாள் எழிலி.

“இன்று மலை என்பதே இல்லை. காடு என்பது ஏடுகளில் மட்டும். வயல்களுக்கோ வாழ்வில்லை. கடலோ கதறுகிறது. பாலைக்கூட பாழ்தான்”

புதிர் போடுவதுபோலப் பேசியதால், குழந்தைகளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“கொஞ்சம் தெளிவாகச் சொல்லேன் ஆள்காட்டி” என்றார்கள்.

“நான் சொல்வதைவிட ஒவ்வொரு திணைக்கு உரிய பூவும், உங்களுக்கு அந்தந்தத் திணையின் கதையைச் சொல்லும்.”

“ஆள்காட்டியே! அந்நியர்களைப் பார்த்தால் கத்தி எச்சரிக்கிறாயே! மனிதர்கள் அழிக்க வந்தபோது, இப்படி எச்சரித்து ஐந்திணைகளையும் நீ காப்பாற்றி இருக்கலாமே?”

“யார் நானா? என் வாழ்வைக் காப்பாற்றிக் கொள்வதே பெரும்பாடாக உள்ளது. நீங்கள் உங்கள் வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால், உடனே ஐந்திணைகளையும் காப்பாற்றப் பாருங்கள்”

இப்படிச் சொல்லிவிட்டு ஆள்காட்டி பறந்தது.

ஐந்திணைகளுக்கும் அப்படி என்னதான் ஆபத்து? அடுத்த வாரம் பார்ப்போமா?



(அடுத்தது: கிரானைட் மலை)
கட்டுரையாளர், குழந்தை எழுத்தாளர் மற்றும் சூழலியலாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x