Last Updated : 17 Feb, 2021 03:12 AM

 

Published : 17 Feb 2021 03:12 AM
Last Updated : 17 Feb 2021 03:12 AM

எட்டுத்திக்கும் சிறகடிக்கும் கதைகள் - சீனா: செல்லாக்காசு

சீனாவில் புதிய புத்தர் சிலை உருவாக்குவதற்கு ஏற்பாடு செய்தார்கள். சிலை செய்வதற்கு ஆகும் செலவை மக்களிடம் வசூலிக்க வேண்டும் என்று புத்த துறவிகள் முடிவு செய்தார்கள்.

பக்கத்து கிராமத்தில் பணக்காரப் பெண் ஒருத்தி இருந்தார். அவரிடம் வேலை செய்த ஒரு பெண்ணின் மகள் டினு. புத்தர் சிலை செய்வதற்குப் பணம் திரட்டச் சென்ற துறவி, அந்தப் பணக்காரப் பெண்ணின் வீட்டை அடைந்தார். அவர், துறவிக்குத் தங்க நாணயங்களைக் கொடுத்தார்.

தானும் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தாள் டினு. அவளிடம் ஒரே ஒரு செல்லாத நாணயம் மட்டும்தான் இருந்தது. டினு ஓடிச் சென்று அந்தச் செல்லாக் காசைக் கொண்டு வந்தாள். அதைத் துறவியிடம் கொடுத்தாள்.

துறவி அதை வாங்கிக் கொள்ளவில்லை. “இந்தக் காசு செல்லாது. எதற்குமே பயன்படாது. இதை நீயே வைத்துக்கொள்” என்றார் அவர்.

துயரத்துடன் டினு, அந்த நாணயத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டாள்.

அன்று அவளுக்குத் தூக்கம் வரவில்லை. ‘என்னுடையது செல்லாக் காசு என்பதால்தானே துறவி வாங்கிக்கொள்ளவில்லை. என்னிடம் வேறு எதுவும் இல்லையே... புத்தருக்கு பணக்காரர்களைத்தான் பிடிக்குமா?’ என்று வருத்தப்பட்டாள் டினு.

சில நாட்களுக்குப் பிறகு புத்தர் சிலையை உருவாக்கத் தொடங்கினார்கள். முதலில் அச்சு தயார் செய்தார்கள். பிறகு, அதற்குள் உலோகத்தை உருக்கி ஊற்றினார்கள். அச்சு குளிர்ந்த பிறகு அதை நீக்கிவிட்டு சிலையைப் பரிசோதித்தார்கள். திகைத்துப்போனார்கள் சிற்பிகள். சிலையில் ஒரு மெல்லிய விரிசல் தென்பட்டது. துறவிகளும் வியப்படைந்தார்கள்.

மீண்டும் இன்னொரு சிலையை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள்.

ஒவ்வொரு முறை அச்சைப் பிரித்துப் பார்க்கும்போதும் சிலை விரிசல்விட்டிருந்தது.

தலைமைத் துறவி சிந்தனையில் ஆழ்ந்தார். மக்களிடம் பணம் வசூலிக்கச் சென்றவர்களை எல்லாம் அழைத்தார்.

“நீங்கள் யாரிடமிருந்து பணம் வாங்கினீர்கள்?” என்று கேட்டார் தலைமைத் துறவி.

ஒவ்வொருவரும் பணம் சேகரித்த விதத்தைக் குறித்தும், பணம் கொடுத்த ஆட்களைப் பற்றியும் விவரிக்கத் தொடங்கினார்கள்.

“யாருடைய பங்களிப்பையாவது வேண்டாம் என்று மறுத்தீர்களா?” மீண்டும் கேட்டார் தலைமைத் துறவி.

பணக்காரப் பெண் வீட்டுக்குப் பணம் வாங்கச் சென்ற துறவிக்கு, டினுவைப் பற்றிய நினைவு வந்தது. அவர் சொன்னார்: “ஒரு சிறுமி கொடுத்த செல்லாக் காசை நான் வாங்கவில்லை.”

எங்கு தவறு நடந்தது என்று தலைமைத் துறவிக்குப் புரிந்தது. அவர் கட்டளையிட்டார்: “உடனே சென்று அந்த நாணயத்தை வாங்கிக்கொண்டு வாருங்கள்.”

துறவி விரைந்து சென்று டினுவின் கையிலிருந்த அந்த நாணயத்தை வாங்கிக்கொண்டு வந்தார்.

பிறகு அந்த நாணயத்தையும் சேர்த்து உருக்கி அச்சில் ஊற்றினார்கள்.

அச்சை நீக்கிப் பார்த்தவுடன் அனைவரும் மகிழ்ச்சியடைந்தார்கள்! புத்தர் சிலை பளபளவென்று மின்னியது. அப்போது, சிலையின் இதயப் பகுதியில் ஏதோ பதிந்திருப்பதுபோலிருந்தது. எல்லோரும் அதை உற்றுப் பார்த்தார்கள். அருகே சென்று கவனித்துப் பார்த்தபோதுதான், அது என்னவென்று புரிந்தது.

டினு நன்கொடையாக அளித்த செல்லாக் காசுதான் அது! அந்த நாணயத்தின் அழகுதான் சிலை முழுவதும் ஒளிர்ந்துகொண்டிருந்தது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x