Published : 04 Nov 2015 11:16 AM
Last Updated : 04 Nov 2015 11:16 AM
தென்றல் இனிமையாக வீசியது. கிளிக் கூட்டம் ‘கீக்கீ’ என கத்தியபடியே கடந்து சென்றது. மற்ற நேரமென்றால் பசுமைப் பள்ளியின் குழந்தைகள் ஆரவாரம் செய்வார்கள். ஆனால், இப்போது அவர்கள் தங்களுக்குள் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். உயிரினங்கள் கற்றுத் தந்த பாடங்கள் அப்படி!
உடல் மட்டும் உள்ளது ஓரறிவு மரம் போல.
உடலும் வாயும் உள்ளது இரண்டறிவு மண்புழுப் போல
உடல் வாயோடு மூக்கும் உள்ளது மூன்றறிவு எறும்புப் போல
உடல், வாய், மூக்கோடு கண்ணும் உள்ளது நான்கறிவு தேனீ, பறவை போல
இந்த நான்கோடு செவியும் உடையது ஐந்தறிவு பாலூட்டிகள் போல
மனிதரும் பாலூட்டிதானே? ஆனால், மனிதரை மட்டும் உயர்திணை (பகுத்தறிவு) என்கிறோமே ஏன்? ஏனெனில், மனிதருக்கு சிந்திக்கும் அறிவான ஆறாம் அறிவு இருக்கிறது.
குழந்தைகள் உரையாடுவதைக் கேட்டு மெல்லச் சிரித்தது புவி. பார்க்க முடியாவிட்டாலும், அதன் குரலை குழந்தைகளால் கேட்க முடிந்தது.
“ஏன் சிரிக்கிறாய் புவியே?” என்று கேட்டான் அன்பன் என்கிற சிறுவன்.
“இவ்வளவு படித்த பிறகும் மனிதர்களைக் கொஞ்சம் உயர்த்திப் பேசுவதை நினைத்துச் சிரித்தேன். எல்லா உயிர்களும் சமம் என்பது இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை?!”
“ஆனால், மனிதர்கள்தானே சிந்திக்கிறார்கள்? அப்படிச் சிந்திப்பதால்தானே விண்ணில் ஏவுகணைகள், செயற்கைக் கோள்களை ஏவியிருக்கிறோம்.”
“ஆனால், காலுக்கு கீழே உள்ள புவிக்குள் என்ன நடக்கிறது என மனிதருக்கு தெரியவில்லையே! அப்படி தெரிந்திருந்தால் ஆழிப்பேரலை (சுனாமி), பூகம்பம் பற்றித் தெரிந்துகொண்டு பல லட்சம் உயிர்களை காப்பாற்றிவிடலாமே?”.
“பழங்குடி மனிதர்கள் தப்பித்தார்களே?”.
“பழங்குடிகள் எல்லா உயிர்களையும் சமமாக மதிப்பவர்கள். அதனால்தான் அவற்றைக் கூர்ந்து கவனித்து இயற்கையை அறிந்து உயிர் தப்பினார்கள். உண்மையில் உங்கள் முப்பாட்டன் - முப்பாட்டிகளும் இப்படித்தான் வாழ்ந்தார்கள். நீங்கள்தான் அந்த வாழ்க்கையைத் தவறவிட்டு விட்டீர்கள்”.
“அப்படியா?”.
“ஆமாம். அதைப் பற்றிச் சொல்லட்டுமா? நமக்கு இரு மழைப்பருவங்கள் இருக்கின்றன. ஒன்று, தென்மேற்குப் பருவமழை. இன்னொன்று, வடக்கிழக்குப் பருவமழை. இவை இரண்டும் பெய்யுமா, பெய்யாதா என்பதை முன்கூட்டியே அறிந்து விவசாயம் செய்தார்கள் நம் முன்னோர்கள்”
குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகமானது. “எப்படி?” என்று ஒரே குரலில் கேள்வி எழுப்பினார்கள்.
“தென்மேற்குப் பருவ மழையை இவர்களுக்கு முன்கூட்டியே அறிவித்தது காகம். கோடையில் வேப்பமரத்தில் காகம் கூடு கட்டும். அக்கூட்டை மரத்தின் உட்புறத்தில் கட்டினால், அந்த ஆண்டில் நல்ல மழைப் பெய்யுமாம். அதையே நுனிக்கிளையில் கட்டினால் மழை குறையுமாம்.”
“இதுபோலவே வடகிழக்குப் பருவ மழையை முன்னறிவிக்கும் பறவை தூக்கணாங் குருவி. இந்தப் பறவை கூடு கட்டும்போது, அதன் கீழ்புற வாசல் வடக்குப் பக்கம் லேசாகத் திரும்பியிருந்தால் அந்த ஆண்டு மழை குறையுமாம். அதுவே தெற்குப் பக்கம் திரும்பியிருந்தால் மழை அதிகமாம். ஏனென்றால் “அந்த மழை வடக்கிலிருந்தே வரும். அப்போது வாசல் வடப்பக்கம் இருந்தால் உள்ளே குஞ்சுகளைப் பாதிக்குமாம். இப்படியெல்லாம் இயற்கையை உன்னிப்பாகக் கூர்ந்து அறியும் அறிவே உண்மையான ஆறறிவு”
புவி சொல்லி முடித்ததும், குழந்தைகள் ஒன்றுகூடி ஓர் உறுதிமொழி எடுத்தார்கள்: “இயற்கையுடன் இணைவோம். இயற்கையாய் வாழ்வோம்”
அப்புறமென்ன, நீங்களும் உறுதிமொழி எடுத்துவிட்டீர்களா?
ஆறறிவுப் பாடம் இத்துடன் முடிந்தது.
(அடுத்தது: ஐந்திணை அறிவு)
கட்டுரையாளர், குழந்தை எழுத்தாளர் மற்றும் சூழலியலாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT