Published : 04 Nov 2015 11:51 AM
Last Updated : 04 Nov 2015 11:51 AM
செப்டம்பர் மாதக் கடைசியில் மூன்று குட்டிக் குழந்தைகள் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்கள். குட்டிக் குழந்தைகள் என்றால் உண்மையிலேயே ரொம்பவும் குட்டிக் குழந்தைகள். அர்ஜுன் கோபாலும் ஆரவ்வும் பிறந்து ஆறு மாசம்தான் ஆகிறது. ஸோயா பாசினுக்கு ஒன்றே கால் வயது.
இவர்களுக்கு என்ன பிரச்சினை? எதற்காக உச்ச நீதிமன்றம் போனார்கள்? சரி, இவ்வளவு சின்ன வயசில் நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு போட முடியுமா?
தாராளமாகப் போடலாம். இவர்களைப் போன்ற பச்சிளம் குழந்தைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, அவர்களுடைய பெற்றோர் அல்லது நேரடிப் பாதுகாவலர்கள் (கார்டியன்) குழந்தைகள் சார்பில் வழக்கு தொடரலாம். இந்திய நீதித் துறையில் மூன்று பச்சிளம் குழந்தைகள் சார்பில் தொடுக்கப்பட்ட முதல் வழக்கு இதுதான். இந்த மூன்று குழந்தைகளின் அப்பாக்களும் வழக்கறிஞர்களும்கூட.
சுத்தமான காற்று வேண்டும்
குழந்தைகளுக்கு வழக்கு போட உரிமை இருப்பதெல்லாம் சரி, என்ன பிரச்சினைக்காக அவர்கள் வழக்கு போட்டார்கள்? ‘உயிர் வாழத் தேவையான சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கு வசதியாக எங்களுடைய நுரையீரல்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடைய வில்லை. இந்த நிலையில் பண்டிகைகளுக்குப் பட்டாசு வெடிப்பதால் உருவாகும் காற்று மாசுபாட்டை எங்கள் நுரையீரல்களால் தாங்கிக்கொள்ள முடியாது. அதனால் பட்டாசுகளுக்குத் தடை விதிக்க வேண்டும்' என்பதுதான் அந்தப் பிஞ்சுகளின் கோரிக்கை.
தீபாவளி, தசரா பண்டிகைகளின்போது பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் சீர்கெட்டுக் காற்று மாசுபாடும் ஒலி மாசுபாடும் மோசமாகிறது. அரசியல் சாசன சட்டப் பிரிவு 21-ன்படி சுத்தமான காற்றைப் பெறுவது ஒருவருடைய அடிப்படை உரிமை. அந்த அரசியல் சாசன உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றால் தீபாவளிக்கான பட்டாசு விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அந்தக் குழந்தைகள் இந்த வழக்கைத் தொடர்ந்தார்கள்.
‘டெல்லியில் மூன்றில் ஒரு குழந்தை நுரையீரல் கோளாறுடன் இருக்கிறது என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரமே கூறுகிறது. நமது வருங்காலத் தலைமுறையின் ஆரோக்கியம் ஏற்கெனவே சீர்கெட்டுப் போய்விட்டது' என்று டெல்லி அறிவியல், சுற்றுச்சூழல் மைய நிர்வாக இயக்குநர் அனுமிதா ராய்சௌத்ரி சுட்டிக்காட்டுகிறார்.
மிரட்டும் நோய்கள்
கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகிலேயே மிக மோசமாக மாசுபட்ட நகரம் என்று நம் நாட்டின் தலைநகரம் டெல்லியை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் ஓராண்டில் நாடு முழுவதும் காற்று மாசுபாட்டினால் 7 லட்சம் பேர் இறந்துபோகின்றனர். அதிலும் குழந்தைகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுடைய நுரையீரல் முழுமையாக வளர்ச்சி பெற்றிருக்காது.
காற்று மாசுபாட்டால் அவர்களுடைய முக்கிய உள்ளுறுப்புகளின் செயல்பாடும் மோசமாகப் பாதிக்கப்படும். வைக்கோலை எரிப்பது, வாகனப் புகை, கட்டுமானத் தூசி, தொழிற்சாலைப் புகை போன்றவை காற்று மாசுபாடு அதிகரிக்க முக்கியக் காரணங்கள்.
‘காற்றை மாசுபடுத்தும் இத்தனை அம்சங்களுடன் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தீபாவளி, தசராவுக்கு உலகிலேயே அதிகமான பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. இதன் காரணமாக ஏற்படும் மாசுபாடுகளால் நுரையீரல் நோய்கள் மோசமாக அதிகரிக்கின்றன. தீபாவளியின்போது மூச்சிளைப்பு, நுரையீரல் கோளாறுகள், ஆஸ்துமா, இருமல், மூச்சுக் குழாய் கோளாறுகள் போன்றவை டெல்லியில் 40 சதவீதம் அதிகரிப்பதாக ஒரு ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
அத்துடன் குழந்தைகளுக்கு நரம்பு மண்டலக் குறைபாடு, மூளை வளர்ச்சிக் குறைபாடு போன்றவையும் ஏற்பட வாய்ப்புண்டு. குழந்தைகளுடைய தாங்கும் சக்தியும், நோய் எதிர்ப்புத் திறனும் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காது என்பதால் அவர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
உயிருக்கே ஆபத்தாக முடியும் காற்று மாசுபாட்டைத் தடுத்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் அரசு அமைப்புகள் தீவிரமாகச் செயல்படவில்லை. சுத்தமான காற்றைச் சுவாசிப்பதற்கான, மாசுபாடற்ற சுற்றுச்சூழலைப் பெறுவதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது. அந்த அடிப்படை உரிமையை உறுதிசெய்ய அரசு கடமைப்பட்டுள்ளது' என்று இந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டது.
பிஞ்சுகளைப் பின்பற்றுவோம்
ஆனால், இந்தப் பிஞ்சுகளின் கோரிக்கையை ஏற்றுப் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. பட்டாசுகள் ஏற்படுத்தும் ஒலி மாசுபாடு, காற்று மாசுபாடு, உடல்நலப் பிரச்சினைகள் தொடர்பாகத் தீபாவளி நேரத்தில் மத்திய அரசு விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
எது எப்படியோ, நம்முடைய பிஞ்சுக் குழந்தைகள் மூவரும் தாக்கல் செய்த வழக்கில், பட்டாசுப் பிரச்சினைக்குத் தற்காலிகத் தீர்வாக ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். நாள் முழுக்கப் பட்டாசு வெடிப்பதையும், வீடுதோறும் பட்டாசு வெடிப்பதையும் குறைத்துக்கொண்டு நண்பர்கள், சொந்தக்காரர்கள், தெருவாசிகள், ஃபிளாட்டில் இருப்பவர்கள் எல்லோரும் சேர்ந்து குறைந்த அளவிலான பட்டாசு களை ஒரே இடத்தில் வெடிக்கலாம் என்பதே அந்த யோசனை. இந்தத் தீபாவளிக்கு நாமும் ஏன் அந்த யோசனையைப் பின்பற்றக்கூடாது. நாமும், நம்மைப் போன்ற குழந்தைகளுடைய உடல்நலமும் முக்கியம்தானே?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT