Last Updated : 23 Dec, 2020 03:16 AM

1  

Published : 23 Dec 2020 03:16 AM
Last Updated : 23 Dec 2020 03:16 AM

மாய உலகம்: நான் ஏன் எழுதுகிறேன்?

ஓவியம்: லலிதா

பொழுது விடிந்து, பொழுது சாயும்வரை ஓயாமல் எழுதித் தள்ளிக்கொண்டே இருக்கிறீர்களே? அப்படி என்னதான் எழுதுகிறீர்கள்? உடலையும் உள்ளத்தையும் வருத்தி இவ்வாறு எழுதுவதன் மூலம் என்ன பெரிதாக நீங்கள் சாதித்துவிட்டீர்கள்? இன்னும் எழுத எவ்வளவு கதைகள் வைத்திருக்கிறீர்கள், சார்லஸ் டிக்கன்ஸ்?

அடிக்கடி என்னிடம் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கு விடை அளிக்க வேண்டுமானால் என் வாழ்விலிருந்து ஒரு பக்கத்தை எடுத்து உங்களுக்கு நான் காட்டியாக வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது. நல்ல பனி பெய்யும் ஒரு மாலை நேரம். தேநீர் அருந்திவிட்டு என் அறைக்குள் நுழைந்து, கதவைச் சாத்திக்கொண்டு மேஜை முன்னால் அமர்ந்து எழுத ஆரம்பித்தேன். விடிந்தால் கிறிஸ்துமஸ். எனக்கோ விடிவதற்குள் ஓர் அத்தியாயத்தை எழுதி முடித்தாக வேண்டும். உலகை மறந்து எழுதிக்கொண்டிருந்தேன். எப்போது வெளிச்சம் மறைந்தது, எப்போது இருள் பரவ ஆரம்பித்தது என்பது தெரியவில்லை. எழுதி முடித்து ஒருவித களைப்போடும் ஒருவித நிறைவோடும் தலையை உயர்த்தி ஜன்னல் வழியாகப் பார்வையைச் சுழலவிட்டேன்.

கழுவிவிட்டது போல் சுத்தமாக இருந்தது வீதி. ஒரேயொரு மனித உயிரைக்கூட வெளியில் காண முடியவில்லை. எல்லோரும் கதவை அடைத்துக்கொண்டு என்னைப் போல் ஒடுங்கிவிட்டார்கள். நான் பரபரவென்று கைகளைத் தேய்த்து விட்டுக்கொண்டேன். மனிதர்களைக் காணத்தான் முடியவில்லையே தவிர, அவர்களுடைய உற்சாகக் குரல்களும் சிரிப்பொலிகளும் மூடிய கதவுகளைக் கடந்து நாலா பக்கங்களிலிருந்தும் மிதந்து வந்துகொண்டிருந்தன. என் வீடு மட்டும் விதிவிலக்கா என்ன? உறவினர்களும் நண்பர்களும் எல்லா அறைகளிலும் நிரம்பியிருந்தார்கள். தரையே அதிரும் அளவுக்கு குழந்தைகள் குதி குதியென்று குதித்துக்கொண்டிருந்தார்கள். விடிந்தவுடன் ஒவ்வொருவரையும் அழைத்து, ‘சாண்டா உன்னிடம் கொடுக்கச் சொன்னார்’என்று ஒவ்வொருவரின் உள்ளங்கையையும் பிரித்து அவரவருக்கான பரிசுகளைச் சரியாக அளிக்க வேண்டும்.

சரி, கொஞ்சம் ஓய்வெடுப்போம் என்று மெழுகுவர்த்தியை ஊதி அணைக்கக் குனிந்தபோது தற்செயலாக ஜன்னலுக்கு வெளியில் அந்தச் சிறுமியைக் கவனித்தேன். யார் இவள்? இந்த நேரத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறாள்? அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தை போலவும் தெரியவில்லை. ஒவ்வோர் அடியாக நிதானமாக எடுத்து எடுத்து வைத்தபடி அவள் நடந்துகொண்டிருந்தாள். சுருள், சுருளான அவள் தலைமுடியில் பனித்துளிகள் ஒட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது என் உடல் தன்னிச்சையாக ஒருமுறை நடுங்கியது. இந்தா இதையாவது கட்டிக்கொண்டு போ என்று பிடித்து இழுத்து ஒரு துண்டுத் துணியைக்கூடத் தலையில் சுற்றாமல் யார் அவளை வீட்டைவிட்டு வெளியில் விளையாடவிட்டது?

அவள் கையில் ஒரு பை இருந்ததையும் அந்தப் பை அழுக்காகவும் கிழிந்தும் இருந்ததையும் கண்டேன். ஓ, அப்படியானால் இவள் எங்காவது கடைக்குப் போகிறாளா? தேவையானதை எல்லாம் முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுகூட இவர்கள் வீட்டிலிருப்பவர்களுக்குத் தெரியாதா? அப்பா எங்கே போனார்? அவளை ஏன் அனுப்புகிறாய், நான் வாங்கி வருகிறேன். கொண்டா அந்தப் பையை என்று வீட்டிலுள்ள மற்றவர்கள் இந்தச் சிறுமியை ஏன் தடுத்து நிறுத்தவில்லை? அல்லது, எனக்குக் குளிரும் நான் போக மாட்டேன் என்று சிறுமியாவது சிணுங்கியிருக்க வேண்டாமா?

இந்நேரம் என் ஜன்னலுக்கு மிக அருகில் வந்து சேர்ந்துவிட்டாள் சிறுமி. அவள் முகம் ஒரு சிறுமியின் முகம் போலவே இல்லை. கன்னங்கள் வீங்கியிருந்தன. அவளுடைய சிறிய கண்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தன. அடைந்து கிடந்த ஒவ்வொரு வீட்டையும் அவள் சில நொடிகளேனும் ஏக்கத்தோடு பார்த்து நிற்பது போல் இருந்தது. அதற்குமேல் அவள் கண்களைப் பார்க்க முடியாமல் என் பார்வையைத் தாழ்த்திக்கொண்டபோது அவள் கால்கள் தெரிந்தன. பிஞ்சுப் பாதங்கள். ஆனால், அந்தப் பாதங்களோ அவற்றைவிட அளவில் பல மடங்கு பெரிய செருப்புகளை அணிந்துகொண்டிருந்தன. அதனால்தான் அவளால் வேகமாக நடக்க முடியவில்லையோ!

என் அறைக் கதவைத் திறந்துகொண்டு வரவேற்பறைக்குள் நுழைந்தேன். குழந்தைகள் ஓடிவந்து என் கால்களைப் பிடித்துக்கொண்டனர். சின்னச் சின்ன பொம்மைகளும் நட்சத்திரங்களும் மின்ன நன்றாக நிமிர்ந்து நின்றுகொண்டிருந்த கிறிஸ்துமஸ் மரத்தைப் பார்த்தேன். என்ன டிக்கன்ஸ், இன்றைய கதை எழுதி முடித்துவிட்டீர்களா என்று யாரோ ஓர் உறவினர் என்னைப் பார்த்து கேட்டார். இறைச்சியின் மணமும் கேக்கின் மணமும் என் நாசிகளை நிரப்ப ஆரம்பித்தன. சாண்டா கிளாஸ் எப்போ வருவார் என்று ஒரு குழந்தை நிமிர்ந்து பார்த்து கேட்டது. வெளியில் ஓடிவந்தேன். வீதி பழையபடி காலியாக இருந்தது. மூடிய வீடுகளைக் கடந்து, பொங்கும் சிரிப்பொலிகளைக் கடந்து, விதவிதமான வாசனைகளைக் கடந்து அந்தச் சிறுமி போய்விட்டாள்.

அவள் பெயர் தெரியாது. என் நாடு முழுவதும் அவள் நிரம்பியிருக்கிறாள். உலகம் முழுக்க அவள் நடந்து சென்றுகொண்டிருக்கிறாள். அவள்தான் என் கதைகளின் ஆன்மா. அவளிடமிருந்துதான் தோன்றுகின்றன அத்தனை கதைகளும். அவள்தான் என் இதயத்தையும் விரல்களையும் இயக்குகிறாள். அவளிடமிருந்துதான் பெற்றுக்கொள்கிறேன் எனக்கான அத்தனை சொற்களையும். எனவே, அவள் கதையைச் சொல்லி முடிக்கும்வரை எழுதுவேன். வீதிகளும் கதவுகளும் மனங்களும் அவளுக்காகத் திறக்கும்வரை எழுதுவேன்.

அவள் கன்னங்களில் வண்ணம் வந்து ஒட்டிக்கொள்ளும்வரை எழுதுவேன். அவள் பாதங்களுக்கு ஏற்ற செருப்புகள் கிடைக்கும்வரை எழுதுவேன். அவளுக்கொரு வீடும் அந்த வீட்டுக்கு ஒரு கிறிஸ்துமஸ் மரமும் கிடைக்கும் வரை எழுதுவேன். கதகதப்பான ஒரு மெத்தையில் சுருண்டு படுத்துக்கொண்டு அவள் உறங்கும்வரை எழுதுவேன். அவள் கனவில் சாண்டா கிளாஸ் தோன்ற வேண்டும். அது கனவென்று தெரியாமல் பூரிப்போடு அவள் தன் கரங்களை நீட்ட வேண்டும். அந்தச் சிறிய கரங்களுக்குள் உலகம் வந்து அமர்ந்துகொள்ள வேண்டும். அதுவரை நான் எழுதிக்கொண்டிருப்பேன்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x