Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM

பணம் பழகுவோம்: நூறு ரூபாய் பச்சை மிளகாய்!

விளையாடிக்கொண்டிருந்த ப்ரீத்தாவை அழைத்த அம்மா, “பர்ஸ்ல பணம் இருக்கு. பச்சை மிளகாய் வாங்கிட்டு வா” என்றார்.

பர்ஸில் நூறு ரூபாய் மட்டுமே இருந்தது. அதை எடுத்துக்கொண்டு கடைக்குச் சென்ற ப்ரீத்தா, “பச்சை மிளகாய் வேணும்” என்று கடைக்காரரிடம் நூறு ரூபாயைக் கொடுத்தாள்.

“எவ்வளவு வேணும்?”

“நூறு ரூபாய்க்கு...”

ப்ரீத்தா சொன்னதைக் கேட்டு எல்லோரும் சிரித்தனர்.

“பத்து ரூபாய்க்குத் தரேன்” என்று கூறி, மீதிப் பணத்தைக் கொடுத்தார் கடைக்காரர்.

கோபமாக வீட்டுக்கு வந்த ப்ரீத்தா, “அம்மா, எவ்வளவு ரூபாய்க்குப் பச்சை மிளகாய் வாங்கணும்னு சொல்ல மாட்டீங்களா?” என்று கேட்டாள்.

“நீ கடைக்குப் போகும்போது அதைக் கேட்கலையே? மீதிப் பணத்தை எண்ணிப் பார்த்து வாங்குனீயா?” என்று அம்மா கேட்க, விழித்தாள் ப்ரீத்தா.

“ஐயோ... நாலு இருபது ரூபாய் நோட்டுகள்தான் இருக்கும்மா... கடைக்காரர் கிட்ட கேட்டு வாங்கிட்டு வரட்டுமா?”

“வேணாம். நான் வாங்கிக்கறேன். யார் பணம் கொடுத்தாலும் உடனே எண்ணிப் பார்த்துடணும். சரியா?”

தலையை ஆட்டிவிட்டு விளையாடச் சென்றாள் ப்ரீத்தா.

மறுவாரம் அப்பாவுடன் உழவர் சந்தைக்குப் போனாள் ப்ரீத்தா.

“இருநூறு ரூபா இருக்கு. ஒரு வாரத்துக்கு உனக்கும் தம்பிக்கும் லஞ்சுக்குத் தேவையான காய்களை நீயே வாங்கு. நான் புத்தகம் வாங்கிட்டு வந்துடறேன்” என்று கூடையைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார் அப்பா.

கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, பத்து ரூபாய்க்குப் பச்சை மிளகாயையும் வாங்கினாள். உடனுக்குடன் கணக்கும் போட்டுக்கொண்டாள்.

வீட்டுக்கு வந்த ப்ரீத்தா, அம்மாவிடம் காய்கறிக் கூடையைக் கொடுத்தாள்.

“வெண்டைக்காய், பீன்ஸ் சூப்பர்டா. ஆனா, உங்க ரெண்டு பேர் லஞ்சுக்கு இவ்வளவு கேரட் தேவையில்ல. உருளைக்கிழங்கு ஏற்கெனவே இருக்கே” என்றார் அம்மா.

மறுநாள் புத்தகக் கண்காட்சிக்குத் தோழிகளுடன் ப்ரீத்தாவை அனுப்பி வைத்தார் அம்மா.

“புக்ஸ் தவிர உனக்குத் தேவையான பொருட்களையும் வாங்கிக்கோ. இதில் மிச்சமாகும் பணத்தை உன் சேமிப்புல வச்சுக்கலாம்” என்று ஆயிரம் ரூபாயை, ப்ரீத்தாவிடம் கொடுத்தார் அம்மா.

கண்காட்சியில் தம்பிக்கு கார்ட்டூன் புக், கலரிங் புக், க்ரேயான், தனக்கு க்ராஃப்ட்ஸ் புக், மல்டி கலர் பால், ஜாமெட்ரி பாக்ஸ் என்று வாங்கினாள் ப்ரீத்தா.

பணத்தை இருமுறை சரிபார்த்துக் கொடுத்தாள்.

தோழிகளுடன் ஐஸ்கிரீம், பாப்கார்ன் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினாள்.

“இந்த ஜாமெட்ரி பாக்ஸ், க்ரேயான் எல்லாம் ஏற்கெனவே இருக்கே ப்ரீத்தா! தேவை இல்லாமல் எதையும் வாங்கக் கூடாது. சரி, எவ்வளவு மிச்சம்?” என்று கேட்டார் அம்மா.

“ஒரு ரூபாய்கூட மீதியில்ல. ஷமீனா என்னைவிட அதிகம் செலவு செய்தாள்” என்று அம்மாவைச் சமாதானப்படுத்தினாள் ப்ரீத்தா.

அடுத்த மாதம் பாட்டி வீட்டுக்குச் சென்றாள் ப்ரீத்தா. அங்கே தோட்ட வேலை நடந்துகொண்டிருந்தது. அவர்களோடு சேர்ந்து ப்ரீத்தாவும் வேலைகளை ஆர்வமாகச் செய்தாள்.

தோட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு அன்றைய ஊதியத்தைக் கொடுத்த பாட்டி, ப்ரீத்தாவை அழைத்தார். “என் செல்லம், இந்த நூறு ரூபாய் நீ வேலை பார்த்ததுக்கு”என்று அன்பாகக் கொடுத்தார்.

மறுநாள் தோட்டத்தில் வேலை செய்த ஒரு பெண்ணுக்கு காலில் அடிபட்டது. உடனே, “இந்த நூறு ரூபாயை எடுத்துட்டுப் போய் டாக்டரைப் பாருங்க” என்று ப்ரீத்தா கொடுத்தவுடன், அவளை அணைத்துக்கொண்டார் அப்பா.

வீட்டுக்கு வந்தாள் ப்ரீத்தா. அன்று இரவு மொட்டை மாடியில் குடும்பமே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது.

“நூறு ரூபாய்க்குப் பச்சை மிளகாய் வாங்கப் போன கதை நினைவிருக்கா ப்ரீத்தா? அது நானும் அப்பாவும் உனக்குப் பணத்தைப் பத்திச் சொல்லித் தர ஆரம்பிச்ச முதல் பாடம். பணத்தை எண்ணி வாங்கணும்ங்கிறது ரெண்டாவது பாடம். வீட்ல என்ன காய்கள் இருக்குன்னு பார்த்துட்டுதான் காய் வாங்கணும்ங்கிறது மூணாவது பாடம். அவசியமானதை மட்டும் வாங்கிட்டு, மீதியைச் சேமிக்கணும்ங்கிறதுக்குதான் மாலுக்கு அனுப்பினேன். இது நாலாவது பாடம்.”

“ஓ... அப்படியாம்மா?”

“நீயே உழைச்சு சம்பாதிச்சா பணத்தோட அருமை புரியும்னு தான் பாட்டி தோட்டத்தில வேலை செய்யச் சொன்னேன். நீ செஞ்ச வேலைக்குப் பாட்டி பணம் தந்தப்ப ரொம்ப சந்தோஷப்பட்டே. உழைப்போட அருமை உனக்குப் புரிஞ்சது, ஐந்தாவது பாடம். ஆனா, நாங்க யாரும் எதிர்பார்க்காத ஆறாவது பாடத்தை நீயே கத்துக்கிட்டே” என்று நிறுத்தினார் அப்பா.

“நானா? என்னப்பா?”

“அடிபட்ட பெண்ணுக்குப் பணம் கொடுத்தியே, அதைச் சொன்னேன். எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் ப்ரீத்தா. நாடு பொருளாதாரத்துல வளரணும்னா, பணம் சம்பாதிக்கவும் சேமிக்கவும் தெரிஞ்சா மட்டும் பத்தாது. அதை இல்லாதவங்களுக்குப் பகிரவும் தெரியணும். அது உனக்கு நல்லாப் புரிஞ்சிருச்சு” என்றார் அப்பா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x