Published : 07 Oct 2015 11:48 AM
Last Updated : 07 Oct 2015 11:48 AM
கார்காலம்.
மஞ்சுக் கூட்டம் வானில் கருமையாய் திரண்டன. ஈரக்காற்றின் தாலாட்டில் குழந்தைகள் பாடிக்கொண்டிருந்தார்கள். நம் பசுமைப் பள்ளியின் குழந்தைகள்தான் பாடுகிறார்கள்.
முட்டைக் கொண்டு மேலே
திட்டை ஏறினாலே
மட்டிலாத மழையும்
திட்டமாகப் பொழியும்
எதற்காக இப்பாட்டை பாடுகிறார்கள்? ஓ… எறும்புகள் வரிசையாக தங்கள் முட்டைகளை சுமந்துகொண்டு போகின்றன. அதைப் பார்த்துத்தானா இந்தப் பாடல்? மழை வரப்போவதை நமக்கு முதலில் அறிவிப்பது இந்த எறும்புகள்தான்.
வரிசையாகச் செல்லும் எறும்புகளிடம், நிலவன் என்கிற சிறுவன் கேட்கிறான்.
“வணக்கம் எறும்புகளே! இப்படி முட்டைகளைத் தூக்கிச் செல்வது உங்களுக்குச் சிரமமாக இல்லையா?”
வரிசையில் நகர்ந்து கொண்டிருந்த ஓர் எறும்பு பதில் சொன்னது. “எங்களுக்கு எந்தச் சிரமமும் இல்லை. மனிதர்களால் தங்கள் எடையைவிட இரு மடங்கு எடையைத்தான் சுமக்க முடியும். ஆனால், நாங்கள் எங்கள் எடையைவிட 50 மடங்கு எடைவரை சுமப்போம்”.
எறும்பின் பதிலைக் கேட்ட குழந்தைகள் ஆர்வத்தோடு ஒன்று கூடினர். எறும்பு தொடர்ந்து சொன்னது.
“அது மட்டுமல்ல. உங்கள் உயரத்தோடு எங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், நாங்கள் கட்டும் எறும்புப் புற்று உங்கள் கட்டிடங்களைவிட உயரமானவை”.
“நம்பவே முடியவில்லை”, வியந்தான் நிலவன்.
“இதையே நம்ப முடியவில்லை என்றால் இன்னொன்றும் சொல்கிறேன். உங்களைவிட நாங்கள்தான் விவசாயத்தில் முன்னோடிகள் என்பது தெரியுமா?”
“அப்படியா?” குழந்தைகள் திகைத்தனர்.
“இலைவெட்டி எறும்புகள் எனும் ஓர் எறும்பு வகைதான், முதல் உழவர்கள். அந்த எறும்புகள் தாம் கடித்து எடுத்துச் செல்லும் இலைகளை மக்கச்செய்து, அதில் காளான்களை முளைக்க வைக்கின்றன. பின்னர், அக்காளான்களை உணவாக்கிக் கொள்ளும். அதைப் பார்த்தே நீங்கள் காளான் வளர்க்கக் கற்றுகொண்டீர்கள். இதைப் போலவே தையல் தொழிலிலும் நாங்கள்தான் உங்களுக்கு முன்னோடி”.
குழந்தைகளுக்குத் திகைப்பு கூடிக்கொண்டே போனது.
“முசுறு என்கிற ஒரு வகை எறும்பு உள்ளது. அது மரங்களிலுள்ள இலைகளைத் தைத்துத்தான் தம் கூடுகளைக் கட்டும். அதனால்தான் சொல்கிறேன்”.
“இன்னும் என்னென்ன வகை யில் நீங்கள் எமக்கு முன்னோடி, அவற்றையும் சொல்லிவிடு எறும்பே” என்றான் நிலவன்.
சிரித்துக்கொண்ட எறும்பு சொன்னது, “தூய்மையிலும் நாங்களே முன்னோடி. உங்கள் வீடுகளைப் போலவே, எங்கள் புற்றில் கழிப்பிடத்துக்கென்று தனியே ஓரிடம் இருக்கும்”.
“நீங்களும் எங்களைப் போலவே தூய்மையாக வாழ்கிறீர்கள்”
நீங்கள் எங்கே தூய்மையாக வாழ்கிறீர்கள்? உங்கள் இடத்தைத் தூய்மையாக வைத்திருந்தால், நாங்கள் ஏன் சிந்திக் கிடக்கும் உணவுத் துணுக்குகளைப் பொறுக்க வருகிறோம்? ஆனால், உங்கள் வீட்டை துப்புரவாக்க வரும் எங்களை ‘எறும்பு கொல்லி மருந்து’ வைத்து நீங்கள் கொல்கிறீர்கள். இது என்ன நியாயம்?”
பதில் சொல்லத் தெரியாமல் குழந்தைகள் விழிக்க, எறும்பு புறப்பட்டுச் சென்றது.
நிலவனும் குழந்தைகளும் யோசித்தனர். மனித இனத்துக்கு என்னென்னவெல்லாம் கற்றுத் தந்திருக்கிறார்கள் இந்த எறும்பாசிரியர்கள்! இந்த எறும்புகளையா நாம் மூன்றறிவு இனம் என்கிறோம்?
மூன்றறிவு மனிதருக்கா? இல்லை, முன்னோடி எறும்புகளுக்கா?
(அடுத்த புதன்கிழமை: தேனீக்களே துணை)
கட்டுரையாளர், குழந்தை எழுத்தாளர் மற்றும் சூழலியலாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT