Last Updated : 07 Oct, 2015 11:51 AM

 

Published : 07 Oct 2015 11:51 AM
Last Updated : 07 Oct 2015 11:51 AM

வாசிப்போம்! பரிசு வெல்வோம்!

மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14-ம் தேதியிலிருந்து 20 வரை ‘தேசியப் புத்தக வாரம்’ கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தேசியப் புத்தக வாரத்தைக் கொண்டாடும் விதமாகத் தமிழ்நாட்டின் நூறு பள்ளிகளில் ‘சிறார் புத்தகத் திருவிழா’வுக்குத் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், பாரதி புத்தகாலயமும் ஏற்பாடு செய்திருக்கின்றன.

இந்தச் சிறார் புத்தகத் திருவிழாவில் மாணவர்களுக்கான ஓவியம், புத்தக வினாடி வினா, புத்தக விமர்சனம் போன்ற நிகழ்ச்சிகளும் நடக்கவிருக்கின்றன.

“கிட்டத்தட்ட அறுபது புதிய தலைப்புகளில் மாணவர்களுக்கான புத்தகங்களை இந்தப் புத்தகத் திருவிழாவில் அறிமுகம் செய்கிறோம். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக மாணவர்களுக்கான அறிவியல் புனைவு நூல்களைத் தமிழில் கொண்டுவந்திருக்கிறோம். மொத்தமாக 450 தலைப்புகளில் இந்தப் புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் இடம்பெறும். சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதைகள், உலகப் புகழ்பெற்ற கதைகள் போன்றவற்றையும் இந்தக் கண்காட்சியில் அறிமுகம் செய்கிறோம்” என்று சொல்கிறார், இந்தத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பாரதி புத்தகாலயத்தின் பதிப்பாளர் க. நாகராஜன்.

இந்தப் புத்தகத் திருவிழா பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் நடக்கவிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஐந்து பள்ளிகளில் இரண்டு நாட்களுக்கு இந்தச் சிறார் புத்தகத் திருவிழா நடைபெறும்.

மாணவர்கள் வீட்டில் நூலகம் அமைப்பதை ஊக்குவிப்பதற்காக ‘எனது நூலகம், எனது பெருமை’ என்ற திட்டத்தையும் இந்தக் கண்காட்சியில் அறிமுகம் செய்திருக்கிறார்கள். “இரண்டாயிரம் ரூபாயில் மாணவர்களுக்கு நூறு புத்தகங்கள் கிடைக்கும்படி ‘எனது நூலகம், எனது பெருமை’ திட்டத்தை வடிவமைத்திருக்கிறோம். அத்துடன், கண்காட்சியில் இடம்பெறும் புத்தகங்களைப் பற்றி சிறப்பாக விமர்சனம் செய்யும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம். இந்தப் புத்தக விமர்சனப் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு மாநில அளவில் பயிற்சி கொடுக்க இருக்கிறோம்” என்கிறார் நாகராஜன்.

அக்டோபர் 2 முதல் நவம்பர் 14 வரை ‘சிறார் புத்தகத் திருவிழா’ நடை பெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x