Published : 02 Sep 2015 11:54 AM
Last Updated : 02 Sep 2015 11:54 AM
ஒரு குச்சி உடைந்தால், அதைத் திரும்பவும் ஒட்ட வைக்க முடியுமா? முடியாது அல்லவா? பல் குத்த உதவும் குச்சியை உடைத்துவிட்டு அதைத் திரும்பவும் சரி செய்யும் மேஜிக்கை இந்த வாரம் பார்ப்போமா?
என்னென்ன தேவை? :
கர்ச்சீப், பல் குத்தும் குச்சி.
எப்படிச் செய்வது?:
1. மேஜையின் முன்னால் அமர்ந்துகொண்டு, ஒரு கர்ச்சீப்பை விரித்து வையுங்கள்.
2. அருகில் உட்கார்ந்திருக்கும் உங்கள் நண்பரிடம் பல் குத்தும் குச்சியைக் காட்டிவிட்டு, அதை கர்ச்சீப்பின் நடுவில் வையுங்கள்.
3. பின்னர் கர்ச்சீப்பின் நான்கு புறத்தையும் மடித்துவிடுங்கள். அதை கையில் எடுத்து நடுவே உள்ள குச்சியை உடைக்குமாறு உங்கள் நண்பரிடம் கூறுங்கள்.
4. அவர் ஒருமுறை உடைத்தபின்னர், திரும்பவும் குச்சியை உடைக்கச் சொல்லுங்கள். இப்போது கர்சீப்பைத் திறக்கவா என்று ஓம்..கிரீம்... என மேஜிக் தந்திரத்தைச் செய்து, கர்ச்சீப்பைப் பிரியுங்கள். கர்சீப்பின் நடுவே வைக்கப்பட்ட் குச்சி உடையாமல் அப்படியே இருக்கும். இந்த மேஜிக்கைப் பார்த்து உங்கள் நண்பர்கள் வியந்துபோவார்கள்.
மேஜிக் எப்படிச் சாத்தியம்?:
5. கர்ச்சீப்பில் நான்கு புறமும் சிறிதளவு மடிக்கப்பட்டு தைக்கப்பட்டிருக்கும் அல்லவா? மேஜை மீது கர்ச்சீப்பை விரித்துவைக்கும் முன்பே, தைக்கப்பட்ட ஒரு முனைக்குள் பல் குத்தும் குச்சி ஒன்றைத் தந்திரமாகச் செருகி வைத்துவிட வேண்டும்.
6. பின்னர் அந்தப் பக்கத்தை உங்கள் கைகளால் பிடித்துக்கொண்டு, கர்ச்சீப்பை மேஜை மீது விரித்தால் யாருக்கும் சந்தேகம் வராது. நடுவில் வைக்கப்படும் குச்சி கர்ச்சீப்புக்குள் பத்திரமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மடிப்புக்குள் வைக்கப்பட்டுள்ள குச்சியை அருகில் இருப்பவரிடம் சாமார்த்தியமாகக் காட்டி, அதை உடைக்குமாறு கூற வேண்டும். பின்னர் கர்ச்சீப்பைப் பிரிக்கும் போது நடுவில் உள்ள குச்சி உடைபடாமல் முழுமையாக இருக்கும். உடைபட்ட பல் குத்தும் குச்சியோ, முனையின் மடிப்பில் யாருக்கும் தெரியாமல் மறைந்து கிடக்கும்.
இதுதான் உடைந்துபோன பல் குத்தும் குச்சியை ஒன்று சேர்க்கும் மேஜிக்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT