Published : 16 Sep 2015 12:21 PM
Last Updated : 16 Sep 2015 12:21 PM
அய்யய்யோ இந்த ஆதியும் ஆனந்தியும் படுத்தும் பாடு இருக்கிறதே!
கம்ப்யூட்டரின் முன்னால் நான் உட்கார்ந்துகொண்டால் போதும் எங்கிருந்தாலும் ஓடிவந்துவிடுவார்கள். “சித்தப்பா, சித்தப்பா ஏதாவது நல்ல நல்ல ஃபோட்டோவா காட்டு” என்று அரித்தெடுப்பார்கள்.
இதில் பெரியவனும் சின்னவளும் வேறு வேறு மாதிரி.
பெரியவன் ஆதிக்குப் பெரிய பெரிய விஷயங்களாகக் காட்ட வேண்டும். சின்னவள் ஆனந்தியோ சின்ன விஷயங்களையே காட்டச் சொல்லி அடம்பிடிப்பாள்.
ஒரு நாள் கம்ப்யூட்டர் முன் உடகார்ந்திருந்த என்னிடம் ஆதி வந்தான். “பெரிய பெரிய விலங்கா காட்டு சித்தப்பா” என்றான் ஆதி.
முதலில் ஒட்டகத்தைக் காட்டினேன்.
“இன்னும் பெருசா காட்டு சித்தப்பா” என்றான்.
ஒட்டகச்சிவிங்கியைக் காட்டினேன்.
“இன்னும் பெரிசா” என்றான்.
யானையைக் காட்டினேன்.
“அட, இன்னும் பெரிசா” என்றான்.
டைனோசரைக் காட்டினேன்.
“இதுக்கும் மேல பெரிசா” என்றான்.
நீலத் திமிங்கிலத்தைக் காட்டினேன்.
“இதைவிட பெரிசா” என்றான்.
“இதுக்கும் மேலே பெருசா, எந்த விலங்கும் இல்லடா ஆதி” என்றேன்.
“போ சித்தப்பா, பொய் சொல்லாதே. கம்ப்யூட்டர் அளவுதான் இருக்குது; அதைப் போய் பெரிய விலங்குன்னு சொல்றே. இன்னும் ஏதாவது பெரிசா இருக்கும் பாரு” என்றான்.
“எவ்வளவு பெரிய விலங்கா இருந்தாலும், கம்ப்யூட்டர்ல சின்னதாத் தான் தெரியும் ஆதி. உன்னோட படத்தைக் கம்ப்யூட்டர்ல பார்த்தாலும், நீ சின்னதாதான் தெரிவே. ஆனா, நீ கம்ப்யூட்டரவிடப் பெருசாத்தானே இருக்கே” என்று கேட்டு, அவனை மடக்கிவிட்டதாக நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டேன்.
இந்தப் பதில் அல்ல, எந்தப் பதிலாலும் அவனைத் திருப்திப்படுத்த முடியாது என்றே தோன்றியது. நான் பொய் சொல்கிறேன் என்றுதான் நினைத்தான் அவன்.
பெரிய பெரிய மனிதன். பெரிய பெரிய பொக்லைன். பெரிய பெரிய சாலை. பெரிய பெரிய கடல். பெரிய பெரிய நாடு. பெரிய பெரிய பெரிய பெரிய…
இப்படி எவ்வளவு ‘பெரிய’தெரியுமா?
சலித்துப்போய் ஒரு தடவை என்னிடம், “பெருசெல்லாம் இவ்வளவு சின்னதாத்தான் இருக்குமா?” என்று கேட்டான்.
ஒருமுறை உயரமான ஈஃபில் கோபுரத்தை கம்ப்யூட்டரில் காட்டினேன். ‘இன்னும் பெரிசா’ என்றான். 102 மாடிகளைக் கொண்ட எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைக் காட்டினாலும் ‘இன்னும் பெரிசா’என்றான். 163 மாடிகளைக் கொண்ட துபாய் புர்ஜ் காலிஃபா கோபுரத்தைக் காட்டினாலும், அப்படியே கேட்டான். மனிதர்கள் கட்டியதில் இதைவிட உயரமானது வேறு ஏதும் இல்லை என்று சொன்னால், அவன் கேட்க மாட்டானே என்பதால் எவெரெஸ்ட் சிகரத்தைக் காட்டினேன்.
அப்போதும், ‘இன்னும் பெருசா’என்றே கேட்டான். கோபத்துடன் அவனை வெளியில் இழுத்துக்கொண்டு வந்தேன். இருட்டாக இருந்தது. வானத்தில் விண்மீன்களெல்லாம் கணக்கே இல்லாமல் கொட்டிக்கிடந்தன. ‘இன்னும் பெருசான்னா, இதுதான் எல்லாத்தையும் விடப் பெருசு”
என்று ஆதியிடம் வானத்தைக் காட்டினேன்.
அப்போதும் திருப்தி அடையவில்லை அவன்.
“வானத்தைவிட பெருசு எது சித்தப்பா?” என்று வெகு சாதாரணமாகக் கேட்டான். எனக்குக் கோபம் போன இடமே தெரியவில்லை. குப்பென்று சிரிப்பு வந்தது.
அவனைத் தூக்கி முத்தமிட்டுவிட்டுச் சொன்னேன்: “எல்லாத்தையும்விடப் பெருசு உன்னோட கண்ணுதான். எவ்வளவு பெரிய விஷயமா இருந்தாலும், அதை உன்னோட கண்ணு சின்னதா மாத்திடுது இல்லையா. எவ்வளவு பெரிய கட்டிடமா, மலையா, வானமா இருந்தாலும், உன்னோட கண்ணுக்குள்ள ஒரு புள்ளியாதானே மாறுது. எவ்வளவு பெரிய விஷயத்தைக் காட்டினாலும் உன்னோட கண்ணுக்கு அது பத்த மாட்டங்குதுல்ல. அதனால, இந்த உலகத்திலேயே பெருசு உன்னோட கண்ணுதான்.”
அப்போதுதான் ஆதி முகத்தில் பெரிய வியப்பு ஏற்பட்டது.
“அப்போ, என் கண்ணுதான் எல்லாத்தையும்விடப் பெரிசா சித்தப்பா?” என்று கேட்டான்.
“ஆமாண்டா என் கண்ணு. உன் கண்ணுக்கு முன்னாடி எல்லாம் சின்னதுதான்” என்றேன்.
ஆதி இப்படியென்றால், ஆனந்தி எப்படித் தெரியுமா? அடுத்த புதன்கிழமை வரை காத்திருங்கள் வாண்டுகளே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT