Last Updated : 30 Sep, 2015 01:10 PM

 

Published : 30 Sep 2015 01:10 PM
Last Updated : 30 Sep 2015 01:10 PM

வாண்டு பாண்டு: அம்மாவுக்குத் தூது அனுப்பிய டயானா

வாண்டு: ஹலோ பாண்டு. எப்படி இருக்கே?

பாண்டு: நல்லா இருக்கேன். இப்பத்தான் ஒரே ஜாலியா இருக்கு.

வாண்டு: அப்படி என்ன ஜாலி? ஓ... குவார்ட்டர்லி எக்ஸாம் முடிஞ்சி லீவு விட்டாச்சா, அதான் ஜாலியோ.

பாண்டு: ஆமா வாண்டு, நேத்துதான் எக்ஸாம் முடிஞ்சது. ஒரு வாரத்துக்கு ஸ்கூல் லீவு. ஒரு வாரத்துக்கு ஜாலிதான்.

வாண்டு: பாண்டு, ஊருக்கு ஏதும் போறியா?

பாண்டு: ஆமா, சென்னையில் அங்கிள் வீட்டுக்குப் போலாம்னு அம்மா சொன்னாங்க. நாளைக்குக் கிளம்பிடுவேன்.

வாண்டு: நீயும் இருக்க மாட்டியா? என்கூட விளையாட ஆளே இருக்க மாட்டாங்க. சென்னையில எங்கேயாவது வெளியே போக பிளான் இருக்கா?

பாண்டு: ஆமா வாண்டு. வண்டலூர் விலங்குக் காட்சிப் பூங்காவுக்குக் கூட்டிட்டுப் போறேன்னு அம்மா சொன்னாங்க.

வாண்டு: ஓ, வண்டலூர் பூங்காவா? நான் கூட ஒரு முறை போயிருக்கேன். ரொம்ப நல்லா இருக்கும். அப்புறம், ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு செய்தியை பேப்பர்ல பார்த்தேன். வண்டலூர் பூங்காவுல 3 வயசு காட்டு மாடு கன்றுக்குட்டி போட்டிருக்காம். அந்தக் கன்றுகுட்டிய மறக்காம பார்த்துட்டு வா.

பாண்டு: காட்டு மாடுன்னு சொல்றியே. காட்டெருமையைத்தானே அப்படிச் சொல்ற?

வாண்டு: ஆமா பாண்டு, பொதுவா ‘காட்டெருமை’ன்னுதான் சொல்லுவாங்க. ஆனா, ‘காட்டு மாடு’, ‘காட்டெருது’ன்னு சொல்றதுதான் சரியான வார்த்தையாம். அப்புறம் இதை நம்ம ஊர்ல ‘இன்டியன் பைசன்’ன்னு கூப்பிடுவாங்க.

பாண்டு: வண்டலூர் போறப்ப கண்டிப்பா இந்தக் காட்டு மாட்டைப் பார்த்துட்டு வரேன்.

வாண்டு: பாண்டு, ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். சென்னையில் எங்காவது பட்டம் பறந்தா பார்த்து ஜாக்கிரதையா போ.

பாண்டு: நீ எதை மனசுல வைச்சி இதை சொல்றேன்னு தெரியுது வாண்டு. மூணு நாளைக்கு முன்னால பட்டம் நூல் நம்மள மாதிரி ஒரு குட்டிப் பையனைக் கொன்னுடிச்சின்னு எங்கப்பா சொன்னாரு. அந்தக் குட்டி பையனை நினைச்சா எனக்கு ரொம்ப பாவமா இருக்கு.

வாண்டு: ஆமா பாண்டு, எனக்கும்தான். பாவம் அந்தக் குட்டிப் பையன், எவ்வளவு துடிச்சிருப்பான். மாஞ்சா நூல்ல ஜாலியா பட்டம் விடுறவுங்களுக்கு மத்தவங்க உயிரைப் பத்தி கொஞ்சமாவது கவலை இருக்கா?

பாண்டு: மாஞ்சா நூல்ல பட்டம் விடுறவங்க, இந்தக் குட்டி பையன் செத்துப்போனதைப் பார்த்தாவது கொஞ்சம் திருந்துனா சரி.

வாண்டு: உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு நினைச்சேன். மறந்தே போய்ட்டேன்.

பாண்டு: அப்படி என்ன விஷயத்தை சொல்ல மறந்துட்ட?

வாண்டு: எங்கப்பா நேத்து கம்ப்யூட்டர்ல ஒரு வீடியோ பார்த்துட்டு எங்க அம்மாகிட்டா பேசிக்கிட்டு இருந்தாரு.

பாண்டு: அட, விஷயத்தை நேரா சொல்லேன்.

வாண்டு: இருடா பாண்டு அவசரப்படாதே. கனடாவுல இருக்குற டயனாங்குற குட்டிப்பொண்ணுக்கு ஆறு வயசு ஆகுதாம். அந்தப் பொண்ணோட அம்மா - அப்பா சண்டைப் போட்டு பிரிஞ்சுட்டாங்களாம். அவுங்க ரெண்டு பேரும் ஒண்ணுசேரணும்னு அந்தக் குட்டிப் பொண்ணு வீடியோ எடுத்து அதை அவுங்க அம்மாவுக்கு அனுப்பியிருக்கா.

பாண்டு: அப்படியா, ரொம்ப சமத்தான பொண்ணா இருக்கும் போல. வீடியோவுல அப்படி என்ன சொல்லியிருக்கா டயானா?

வாண்டு: நீயும் அப்பாவும் எப்பவும் நண்பர்களா இருங்க. நீங்க பிரிஞ்சு இருக்குறதைப் பார்க்க கஷ்டமா இருக்கு. இப்படிப் பிரிஞ்சு இருக்குறதுல எனக்கு விருப்பம் இல்லை. எனக்காக நீங்க அனுசரிச்சுப் போங்கண்னு அவுங்க அம்மாவுக்குச் சொல்லியிருக்கா.

பாண்டு: இந்த வீடியோவை டயானாவோட அம்மா பார்த்துட்டாங்களா?

வாண்டு: அவுங்க அம்மா பார்த்தாங்களான்னு தெரியலை. ஆனா, உலகம் பூரா ஒரு கோடி பேரு இந்த வீடியோவை கம்ப்யூட்டர்ல பார்த்திருக்காங்களாம்.

பாண்டு: டயானா பாவமில்ல. இந்த வீடியோவைப் பார்த்து அவுங்க ரெண்டு பேரும் ஒண்ணுசேர்ந்திடுவாங்கண்ணு எனக்குத் தோணுது.

வாண்டு: ஆமா பாண்டு, நானும் அப்படித்தான் நினைக்கிறேன். நம்ம அஜய் வீட்டுலகூட அவுங்க அம்மா, அப்பா அடிக்கடி சண்டைப் போட்டு பிரிஞ்சுடுறாங்க. அவுங்களையும் இந்த வீடியோவைப் பார்க்க வைக்கணும்.

பாண்டு: ம்… நல்ல ஐடியாதான் வாண்டு. சரி வாண்டு, அம்மா பஜாருக்குக் கூட்டிட்டிப் போறேன்னு சொன்னாங்க. நான் கிளம்புணும்.

வாண்டு: சரி பாண்டு. டாட்டா.. திரும்பவும் அடுத்த புதன்கிழமை பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x