Published : 23 Sep 2020 09:10 AM
Last Updated : 23 Sep 2020 09:10 AM

இளம் நூலகர்: யசோதாவின் நூலகம்

யசோதா

எல். மீனாம்பிகா

‘நூலகம்’ என்றால் எல்லோருக்குமே பிடிக்கும். ஆயிரக்கணக்கான புத்தகங்கள் ஒரே இடத்தில் பார்க்கும் போது பரவசமாக இருக்கும். நூலகத்திலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துவிட்டு, அதைக் குறிப்பிட்ட நாட்களுக்குள் திருப்பித் தர வேண்டும் என்ற கட்டாயத்தில் வேகமாகப் படித்து முடிப்பதும், அதைக் கொடுத்துவிட்டு வேறு புத்தகம் எடுப்பதும் நூலகத்தின் சுவாரசியங்கள்.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மட்டாஞ்சேரியில் ‘யசோதா நூலகம்’ என்று கேட்டால் தெரியாதவர்களே இருக்க முடியாது. இந்த நூலகத்தில் அப்படி என்ன சிறப்பு? இதை நடத்துபவர் 8-ம் வகுப்பு மாணவி யசோதா. நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுப்பதற்குக் கட்டணம் கிடையாது.

தன் வீட்டு மாடியை நூலகமாக மாற்றி இருக்கும் யசோதா, 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை வைத்திருக்கிறார். பள்ளி நேரம் தவிர மற்ற நேரத்தில் அவரே நூலகராகவும் செயல்படுகிறார்.

“எனக்குப் புத்தகங்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி நூலகத்துக்குச் சென்று, புத்தகங்களை எடுத்து வருவேன். ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஒரு முறை நூலகத்தில் எடுத்த புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கத் தாமதமாகிவிட்டது. உடனே அபராதத் தொகையைக் கட்டச் சொன்னார்கள். எனக்கு வருத்தமாகிவிட்டது. மாணவர்கள் நூலகக் கட்டணம் செலுத்துவதோ அபராதத் தொகை செலுத்துவதோ கஷ்டமான விஷயம் இல்லையா? என் வருத்தத்தை அப்பாவிடம் பகிர்ந்துகொண்டேன்.

அவர் ஃபேஸ்புக்கில் இந்த இந்தத் தகவலை வெளியிட்டார். உடனே எனக்காக ஏராளமான நல்ல உள்ளங்கள் புத்தகங்களை அனுப்பி வைத்தார்கள். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்தப் புத்தகங்களை நான் மட்டும் படித்தால் போதுமா? என்னைப் போன்ற பலரும் படிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஒரு நூலகம் ஆரம்பிக்க வேண்டும் என்று அப்பாவிடம் சொன்னேன். வீட்டு மாடியிலேயே நூலகத்தை அமைத்துக் கொடுத்துவிட்டார். எங்கள் நூலகத்தில் உறுப்பினர் கட்டணம் எதுவும் இல்லை. ஒரு புத்தகத்தை எடுத்தால் 15 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். தாமதமானாலும் அபராதத் தொகை செலுத்த வேண்டியதில்லை.

நான் பள்ளி செல்லும் நேரம் தவிர, பெரும்பாலும் நூலகத்தில்தான் இருப்பேன். அங்கேதான் பள்ளிப் பாடங்களையும் படிப்பேன். நூலகத்துக்கு வருகிறவர்களுக்குப் புத்தகங்களை எடுத்துக் கொடுப்பேன். நல்ல புத்தகங்களைப் பரிந்துரை செய்வேன். சிறிய அளவில் ஆரம்பித்த நூலகம் இரண்டாவது ஆண்டிலேயே 6 ஆயிரம் புத்தகங்களுடைய பெரிய நூலகமாக மாறிவிட்டது. நூலகம் வேகமாக வளர்வதைக் கண்டு எனக்கு அளவற்ற சந்தோஷம்.

மாணவர்கள் மட்டுமில்லை, ஆசிரியர்கள்கூட இந்த நூலகத்தின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். வயதானவர்கள், நூலகத்துக்கு வர முடியாதவர்கள் போன் செய்தால், வீட்டிலேயே புத்தகங்களைக் கொடுத்துவிடுவோம்” என்கிறார் யசோதா.

பெருந்தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தபோது நூலகத்தை மூட வேண்டியதாகிவிட்டது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், மீண்டும் நூலகத்தை திற்ந்திருக்கிறார் யசோதா. உறுப்பினர்கள் கொண்டு வரும் புத்தகங்களைத் தனியாக வைத்துவிட்டு, ஒரு வாரத்துக்குப் பிறகே அலமாரியில் வைக்கிறார். தேவையான புத்தகங்களைத் தகுந்த பாதுகாப்போடு யசோதாவே எடுத்துக் கொடுக்கிறார். அதனால் தைரியமாக நூலகத்தை நோக்கி மீண்டும் வர ஆரம்பித்துவிட்டார்கள், மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x