Published : 09 Sep 2015 12:00 PM
Last Updated : 09 Sep 2015 12:00 PM
ஜப்பான் நாட்டில் தலைநகர் டோக்கியோ அருகே, ஒரு சிறிய நகரம் உள்ளது. அங்கு ‘யாங்' என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் ரொம்ப ஏழை. ஆனால், அவன் நன்றாக ஓவியம் வரைவான். அதேபோல புல்லாங்குழலும் அற்புதமாக வாசிப்பான். அவனிடம் பணம் இல்லாததால், யாரும் அவனுடைய அதிசயத் திறமையை அறியவில்லை. யாங் எப்போது பார்த்தாலும் குழலில் ஏதாவது வாசித்துக்கொண்டே இருப்பான். அல்லது தரையோ, சுவரோ கிடைத்த இடத்தில் ஏதாவது ஒரு ஓவியம் வரைந்துகொண்டிருப்பான்.
ஒரு நாள் யாங்கிற்கு கடுமையான பசி. சோர்வால் நடக்கமுடியவில்லை. தள்ளாடித் தள்ளாடி கடைவீதி வரைவந்துவிட்டான். இனி ஒரு அடிகூட நடக்க முடியாது என நினைத்து, ஒரு கடைவாசலில் உட்கார்ந்துவிட்டான். அது ஒரு ஹோட்டல். அந்த ஹோட்டல் முதலாளி யாங்கைப் பார்த்துப் பரிதாபப்பட்டார். அவனை உள்ளே கூப்பிட்டு உணவு கொடுத்தார்.
மிகவும் பசியுடன் இருந்ததால் முதலாளி கொடுத்த உணவை யாங் வேகவேகமாகச் சாப்பிட்டான். சாப்பிட்டு முடித்ததும்தான், தன்னிடம் சுத்தமாகப் பணம் இல்லை என்பது நினைவுக்கு வந்தது.
“உங்களுக்குக் கொடுக்க என்னிடம் பணம் இல்லை. ஆனால், இலவசமாகச் சாப்பிடுவது எனக்குப் பிடிக்காது” என்றான். அதற்கு ஹோட்டல் முதலாளி, “ பரவாயில்லை. இலவசமாகச் சாப்பிட்டதாக நீ நினைக்க வேண்டாம். உனக்குப் பணம் கிடைக்கும்போது திருப்பிக்கொடு” என்றான். ஆனால், யாங்கின் மனம் ஏற்கவில்லை. ஒரு சுண்ணாம்புக்கட்டியை எடுத்து சுவரில் அழகான அன்னப் பறவை ஒன்றை வரைந்தான்.
“அய்யா, உங்களிடம் சாப்பிட்ட சாப்பாட்டுக்கு விலையாக இந்த அன்னப்பறவையை வரைந்துள்ளேன். இது ஓவியம் மட்டும் இல்லை. இது அதிசய அன்னப் பறவை. உங்கள் ஹோட்டலில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, நீங்கள் மூன்று முறை கையைத் தட்டி யாங் என்று கூப்பிட்டால், இந்த ஓவியத்திலுள்ள அன்னத்துக்கு உயிர் வந்து அழகாக நடனம் ஆடும். இதனால், கடையில் வியாபாரம் அதிகமாகும். ஆனால், கடையில் கூட்டமாக இருக்கும்போது மட்டுமே, இதை அழைக்க வேண்டும்” என்றான்.
இதனால் மகிழ்ச்சியடைந்த ஹோட்டல் முதலாளி, உடனே அதை பரிசோதித்துப் பார்க்க விரும்பினார். ஆனால், யாங் அதைத் தடுத்து, “கடையில் கூட்டமாக இருக்கும்போது மட்டுமே அழைக்க வேண்டும். இல்லையென்றால் அதுவே கடைசி அழைப்பாகிவிடும்” என்று மீண்டும் கூறினான்.
அன்னப் பறவை வந்த பிறகு ஹோட்டலில் எப்போதும் ‘ஜேஜே' என்று கூட்டம் அலைமோதியது. மூன்று முறை கை தட்டி அழைத்ததும் சுவரில் ஓவியத்தில் உள்ள அன்னப் பறவை தரைக்கு வந்து நடனம் ஆடுவதைக் காண, பல ஊர்களில் இருந்தும் ஆட்கள் மொய்த்தனர். இதனால் வியாபாரம் பல மடங்கு அதிகரித்தது. ஹோட்டல் முதலாளி பெரிய பணக்காரன் ஆகிவிட்டார்.
ஒரு நாள் அரண்மனையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் அந்த ஊருக்கு வந்திருந்தார். ஊரெங்கும் அன்னப் பறவை பற்றிய பேச்சாகவே இருந்தது. அதை எப்படியும் தாமும் பார்த்துவிட வேண்டும் என அவர் விரும்பினார். இதனால் ஊருக்குத் திரும்பும் முன், அந்த ஹோட்டலுக்கு வந்தார். அவர் வரும்போது இரவாகி விட்டது. ஹோட்டலில் எல்லாம் விற்றுவிட்டது, கூட்டமும் இல்லை. எனவே, கடையை அடைக்க தயாராக இருந்தார் ஹோட்டல் முதலாளி. அந்த நேரத்தில் அரண்மனை அதிகாரி அங்கு வந்தார். அன்னப் பறவையை அழைக்கும்படி ஹோட்டல் முதலாளிக்கு உத்தரவிட்டார்.
ஆனால், அன்னப் பறவையை அழைக்க முதலாளி மறுத்தார். யாங் சொன்னதை முதலாளி எப்போதும் மறப்பதே இல்லை. ஆனால், அதிகாரியோ விடுவதாயில்லை. அதிசய அன்னம் ஆடுவதை எப்படியும் பார்த்துவிட விரும்பினார். அதனால் மிரட்டினார். அரண்மனை அதிகாரி ஆயிற்றே. இருந்தாலும், முதலாளி கறாராக மறுத்தார்.
இதைப் பார்த்த அதிகாரி அந்த ஹோட்டல் முதலாளிக்கு ஏராளமாகப் பணம் தந்தார். இவ்வளவு பணத்தை அந்த முதலாளி அதற்கு முன் பார்த்ததே இல்லை. பணத்தைப் பார்த்ததும் ஆசை வந்துவிட்டது. மூன்று முறை கைதட்டி அன்னப் பறவையை அழைத்தார்.
அன்னம் வந்தது. மிகவும் சோர்வாகவும், வருத்தமாகவும் இருந்த அன்னப் பறவை மெதுவாக ஆடியது. வழக்கம்போல நடனமாடவில்லை. சீக்கிரமே சுவரில் ஓவியமாகிவிட்டது.
இதைப் பார்த்ததும் முதலாளிக்கு இடிவிழுந்தது போலாகிவிட்டது. அந்த சமயத்தில் யாங் எங்கிருந்தோ புயல்போல வந்து சேர்ந்தான். தனது புல்லாங்குழலை வாசித்தான். அது மிகவும் சோகமான இசை. அதைக் கேட்ட அனைவருமே சோகத்தில் மூழ்கினார்கள். மீண்டும் அன்னம் வந்தது. யாங் பின்னாலேயே போய் மறைந்துவிட்டது.
ஓவியங்கள்: ராஜே
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT