Last Updated : 23 Sep, 2015 12:27 PM

 

Published : 23 Sep 2015 12:27 PM
Last Updated : 23 Sep 2015 12:27 PM

மேஜிக்... மேஜிக்...- நாணயத்தை மாயமாக்கும் கண்ணாடி

குழந்தைகளே... சின்னச் சின்ன மேஜிக் செய்து காட்டி உங்கள் நண்பர்களை அசத்துகிறீர்களா? இதோ உங்கள் நண்பர்களை இன்னும் ஆச்சரியப்படுத்த நாணயத்தை மறையச் செய்யும் டம்ளர் மேஜிக்கைச் செய்து காட்டுங்களேன்!

என்னென்ன தேவை?

கண்ணாடி டம்ளர், நாணயம், வெள்ளைக் காகிதம். கண்ணாடி டம்ளர் மீது கவிழ்த்து மறைக்க செய்தித்தாள் உருளை.

எப்படிச் செய்வது?

1. மேஜையின் எதிர்புறம் அமர்ந்து கொள்ளுங்கள். மேஜை மீது வெள்ளைக் காகிதத்தை விரியுங்கள்.

2. வெள்ளைக் காகிதத்தின் மீது நாணயத்தை வையுங்கள்.

3. இப்போது கண்ணாடி டம்ளரை எடுத்துகொள்ளுங்கள். உருளையாக சுருட்டப்பட்ட செய்தித்தாளை டம்பளரின் மீது வையுங்கள். இப்போது டம்ளர் கண்களுக்குத் தெரியாது.

4. பின்னர் கண்ணாடி டம்ளரை செய்தித்தாளோடு சேர்த்து எடுத்து நாணயத்தின் மீது வையுங்கள். மேஜிக்குக்காக சில மந்திரங்களை கூறுவது போல முணுமுணுங்கள்.

5. இப்போது செய்தித்தாளை மட்டும் வெளியே எடுங்கள். இப்போது கண்ணாடி டம்ளருக்கு அடியில் இருந்த நாணயம் காணாமல் போயிருக்கும். மீண்டும் செய்தித்தாள் உருளையை டம்ளர் மீது கவிழ்த்து, இரண்டையும் ஒன்றாக எடுக்கும்போது காகிதத்தில் மீண்டும் நாணயம் வந்துவிடும். இந்த மேஜிக்கைப் பார்த்து உங்கள் நண்பர்கள் ஆச்சரியப்படுவார்கள்.

மேஜிக் எப்படிச் சாத்தியம்?

கண்ணாடி டம்ளரின் அடிப்பக்கத்தில் முன்னதாக வெள்ளைத் தாள் ஒன்றை டம்ளர் அளவுக்கு வட்டமாக வெட்டி ஒட்டிவிட வேண்டும். அந்த தாளும், மேஜை மீது வைக்கப்பட்டுள்ள தாளும் ஒரே நிறத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தாள் ஒட்டப்பட்ட டம்ளரின் பகுதியை பேப்பர் மீது நீங்கள் கவிழ்த்து வைப்பதால், அதில் தாள் ஒட்டப்பட்டு இருப்பது யாருக்கும் தெரியாது.

செய்தித்தாள் உருளையுடன் சேர்த்து கண்ணாடி டம்ளரை நாணயத்தின் மீது வைக்கும் போது, ஒட்டப்பட்ட தாளின் அடியில் நாணயம் இருப்பதால் அது யார் கண்களுக்கும் தெரியாது. இதுவே கண்ணாடி டம்ளரை கொண்டு நாணயத்தை மறைய வைக்கும் மேஜிக். எங்கே, செய்து பார்க்க தயாராகிவிட்டீர்களா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x