Last Updated : 30 Sep, 2015 12:32 PM

 

Published : 30 Sep 2015 12:32 PM
Last Updated : 30 Sep 2015 12:32 PM

பசுமைப் பள்ளி- 3: பொறியாளர் மண்புழு

முதுவேனிற் காலம்.

மருதநிலத்தின் சேற்று வயலை டிராக்டர் ஒன்று உழுதுக் கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் பூச்சிகளைப் பிடித்துத் தின்ன நிறைய உண்ணிக் கொக்குகள் திரிகின்றன. அருகே நீரோடும் வாய்க்கால். அதன் கரையில் நின்று அக்கொக்குகளை வேடிக்கைப் பார்க்கின்றனர் குழந்தைகள்.

ஓரிடத்தில் சிறியதாய் கரைச் சரிந்து மண் கட்டியொன்று தனியே ஒரமாக விழுகிறது. அக்கட்டியின் உள்ளே செந்நிறத்தில் நெளிகிறது ஒரு மண்புழு.

“மண்புழு… மண்புழு” என்று கத்தினாள் ஏழிசை.

மண்புழு குழந்தைகளைப் பார்த்து வியப்போடு கேட்டது. “இப்போது எந்தக் குழந்தையும் வயலுக்கு வருவதில்லை. அதிசயமாக நீங்கள் வந்திருக்கிறீர்களே?”

“நாங்கள் பசுமைப் பள்ளியின் குழந்தைகள், அதனால்தான் வந்திருக்கிறோம்” என்ற ஏழிசை “இப்போதெல்லாம் மண்புழுவைதான் வயலில் பார்க்க முடியவில்லை, ஏன்?” எனக் கேட்டாள்.

“தற்காலத்தில் உழவர்களுக்கு நாங்கள் தேவைப்படுவது இல்லையே?” என சலித்துக் கொண்டது மண்புழு. “இருந்தாலும் நிலத்தை நாங்களும் மண்ணுக்குள் உழுதுக் கொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் வெறும் உழவர்கள் மட்டும் அல்ல. பொறியாளரும் கூட.”

“பொறியாளரா, எப்படி?” என்று ஆர்வமானாள் ஏழிசை.

“நிலத்தில் நாங்கள் செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் நிறைய துளைகளைப் போடுவோம். இத்துளைகள் வழியாகத்தான் காற்றும் நீரும் தாராளமாக உள்ளேப் போகும். இது தாவரங்களுக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும். அவ்வகையில் நாங்கள் பொறியாளர்கள் தானே? அதாவது சுரங்கப் பொறியாளர்கள்.”

“சூழல் பொறியாளர்கள் என்றும் சொல்லலாமே” என்றனர் குழந்தைகள்.”

சிரித்துக் கொண்டது மண்புழு.

“துளையிடும் போது நாள் ஒன்றுக்கு எம் எடையளவுக்கு மக்கையும் மண்ணையும் தின்று கழிவுகளை வெளியாக்குகிறோம். இதற்கு ‘நாங்கூழ்’ எனப் பெயர். எங்களில் ஒரேயொரு மண்புழு மட்டுமே ஆண்டுக்கு நாலரைக் கிலோ நாங்கூழ் உரத்தை நிலத்துக்கு அளிக்கிறது. சதுர அடிக்கு 25 மண்புழுக்கள் இருந்தோம் என்றால் ஏக்கர் நிலத்தில் பத்து லட்சம் மண் புழுக்கள் இருப்போம்”.

“அம்மாடி… அந்தளவுக்கா நிலத்துக்கு சத்துக்களைக் கொடுக்கிறீர்கள்?”

“ஆனாலும் என்னப் பயன்?” என்று சொல்லிவிட்டு சோகமானது மண்புழு. சற்றுநேர அமைதிக்குப் பிறகு பேச்சைத் தொடர்ந்தது.

“இன்றைக்கு வேதி உரம் போட்டு எங்களை கொன்று விடுகிறார்களே. உண்மையில் நாங்கள் இல்லாத நிலங்களைவிட நாங்கள் இருக்கும் நிலங்களில் 5 மடங்கு நைட்ரஜன் சத்தும், 7 மடங்கு பாஸ்பரஸ் சத்தும், 11 மடங்கு பொட்டாசியம் சத்தும் இருக்கும். ஆனால், இன்று இச்சத்துக்காக செயற்கை உரங்களைப் போட்டு எங்கள் இனத்தையே ஒட்டுமொத்தமாக அழித்து வருகிறார்கள்”.

மண்புழுவின் சோகம் குழந்தைகளுக்கும் ரொம்ப வருத்தமாக இருந்தது.

“சரி, வெளிச்சத்தில் வெகுநேரம் என்னால் இருக்க முடியாது. நான் வருகிறேன்” என்ற மண்புழு மீண்டும் மண்ணுக்குள் புகுந்துக் கொண்டது. குழந்தைகள் யோசித்தபடியே நின்றிருந்தனர்.

மனிதர்களாகிய நாம், சம்பளம் வாங்காமல் ஒருநாள்கூட உழைப்பதில்லை. ஆனால், நம் காலுக்கு கீழே எத்தனைக் கோடி கோடி மண்புழுக்கள் ஒரு பைசாக்கூட வாங்காமல் மனிதர்களுக்காகவும் மற்ற உயிர்களுக்காகவும் உழைத்துக் கொண்டிருக்கின்றன. மண்புழுவுக்கு ஈரறிவுதான் என்கிறார்கள்.

ஈரறிவு மனிதருக்கா? இல்லை மண்புழுவுக்கா?

(அடுத்த புதன்: எறும்பாசிரியர்கள்)

கட்டுரையாளர், குழந்தை எழுத்தாளர் மற்றும் சூழலியலாளர்

தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x