Published : 30 Sep 2015 12:36 PM
Last Updated : 30 Sep 2015 12:36 PM
ஹலோ குழந்தைகளே.. இங்கே செய்து காட்டும் குட்டிக் குட்டி மேஜிக் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? மேஜிக்கை செய்து காட்டி உங்கள் நண்பர்களை அசத்துகிறீர்களா? சரி, இந்த வாரம் விரலை வில்லாக வளைக்கும் மேஜிக்கைச் செய்து பார்ப்போமா?
என்னென்ன தேவை?
சீட்டுகட்டில் ஒன்று, கத்தரிக்கோல்.
மேஜிக் செய்வதற்கு முன்பு ஒரு சிறு தயாரிப்பு
* சீட்டு அட்டையைப் பாதியாக வெட்டிக்கொள்ளுங்கள்.
* அதை இரண்டாக வெட்டிக்கொள்ளுங்கள். வெட்டப்பட்ட இரண்டு சீட்டுகளின் இரு ஓரத்திலும் நான்கு மில்லிமீட்டர் அளவுக்கு வெட்டிக்கொள்ளுங்கள்.
* ஒரு பாதியை மேல்புறமாகவும், இன்னொரு பாதியை கீழ்புறமாகவும் வைத்து, வெட்டப்பட்டப் பகுதிகளை ஒன்றாகப் பொருத்திக்கொள்ளுங்கள்.
* படத்தில் இருப்பது போல, ஒரு பாதி மலை உச்சிப் போலவும், இன்னொரு பாதி பள்ளமாகவும் இருக்க வேண்டும்.
இந்த அட்டை வடிவத்தைச் செய்தவுடன், அதைப் பசை அல்லது டேப் கொண்டு ஒட்டி வைத்துகொள்ளுங்கள்.
மேஜிக்:
* தயார் செய்த அட்டை வடிவத்தை இடது கையில் வைத்துக் கொண்டு, வடது கையின் ஆள்காட்டி விரலை அட்டையினுள் நுழையுங்கள்.
* இப்போது உங்கள் விரலின் நுனிப்பகுதியை அழுத்தி வைத்துக்கொண்டு, விரலை ஒரு பக்கமாக வளையுங்கள். உங்களுடைய மாய சக்தியால், விரலின் நுனிப் பகுதி மட்டும் நகராமல் மற்ற பகுதி அப்படியே வளையும். இதைப் பார்த்து உங்கள் நண்பர்கள் மலைத்துப் போவார்கள்.
மேஜிக் எப்படிச் சாத்தியம்?
1. இடது கையில் அட்டை மடிப்பை வைத்துகொண்டு, அதை ஆள்காட்டி விரலால் பிடித்துக்கொள்ளுங்கள்.
2. அட்டை வடிவத்தின் பள்ளமான பகுதி இடது கைப்பக்கம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
3. இப்போது, வலது கையின் ஆள்காட்டி விரலை அட்டையினுள் நுழைக்கும்போது, யாருக்கும் தெரியாமல் தந்திரமாக உங்கள் இடது கையின் மோதிர விரலின் நுனியை அட்டையினுள் நுழைத்துக்கொள்ளுங்கள்.
4. வலது ஆள்காட்டி விரலை நுழைக்கும்போது இடது கையின் மோதிர விரலின் நுனியை அழுத்தியபடி உள்ளே நுழைக்க வேண்டும்.
5. இப்போது மோதிர விரலை அப்படியே அழுத்தி வைத்து கொள்ளுங்கள், ஆள்காட்டி விரலை மட்டும் ஒரு பக்கமாக வளைக்கும்போது விரல் ரப்பர் வளைவது போல ஆச்சரியமாக இருக்கும். விரலை வெளியே எடுக்கும்போது வலது ஆள்காட்டி விரலை, இடது மோதிர விரலால் அழுத்தி யாருக்கும் தெரியாமல் எடுத்துவிட வேண்டும்.
இதுதான் விரலை மடக்கும் மாயாஜாலம். சில முறை பயிற்சி செய்த பின், உங்கள் நண்பர்களிடம் இந்த வித்தையைச் செய்து காட்டி நீங்கள் அசத்தலாம்.
ஓவியம்: வெங்கி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT