Published : 02 Sep 2015 12:26 PM
Last Updated : 02 Sep 2015 12:26 PM
ஸாகா என்ற சிறிய, அழகியப் பறவை பற்றி உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவுதான். ஏனெனில், அது வசிப்பது தொலைதூரத்தில் உள்ள கார் நிகோபார் தீவில். அடர்நீல வண்ண வங்காள விரிகுடாக் கடலால் சூழப்பட்டுள்ள அழகிய சிறிய தீவுதான் கார் நிகோபார். கரையெங்கும் வரிசைகட்டி நிற்கும் தென்னை மரங்கள் காற்றில் சலசலக்கும் அழகே தனி.
இப்படிப்பட்ட அழகிய சிறிய தீவு ஒன்று உங்களுக்கே உங்களுக்கென இருந்தால் எப்படி இருக்கும்? யாருக்குத்தான் இந்த ஆசை இருக்காது? அப்படித்தான் அந்தச் சிறிய ஸாகா பறவையும் கனவு கண்டது. அப்படிப்பட்ட கனவுத் தீவின் சிங்காரத் தோட்டத்தில் ஆடிப்பாடி, சாப்பிட்டு, தூங்கிக் களித்திட வேண்டும் என்று ஸாகாவிற்கு ரொம்ப நாள் கனவு. அந்த சின்னஞ்சிறிய வண்ணப் பறவைக்கு சின்ன, சின்ன ஆசை எதுவும் இல்லை; பெரிய, மிகப் பெரிய, ஒரே ஒரு ஆசை இதுமட்டும்தான்.
ஆசை பெரியது என்றால் அதை அடைய முயற்சியும் இருக்க வேண்டுமே? ஸாகா அதற்கும் தயாராகத்தான் இருந்தது. தனது அதிசயக் கனவை நனவாக்க அதனிடம் ரகசியத் திட்டம் ஒன்றும் கைவசம் இருந்தது. அதனை நிறைவேற்றத் தகுந்த நேரம் பார்த்துக் காத்துக்கிடந்தது.
அந்த நாளும் ஒரு நாள் வந்தது; இல்லை, இல்லை, அந்த இரவும் வந்தது. அதுவும் சாதாரண இரவு அல்ல; நல்ல நிறைந்த அமாவாசை இரவு. எங்கும் கும்மிருட்டு. நள்ளிரவு ஆயிற்றே; தீவு வாசிகள் அடித்துப் போட்டதுபோல தூங்குகிறார்கள். அமாவாசை இரவு என்பதால் கடலில் அலை அதிகம். அவை கரை மீது ஆக்ரோஷத்துடன் மோதி பேரிரச்சலை எழுப்பிக்கொண்டு இருந்தது. இதுதான் தகுந்த சமயம் என முடிவு செய்த ஸாகா, தனது ரகசியத் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியது.
கார் நிகோபார் தீவின் ஒரு கோடிக்குச் சென்று தனது சிறிய அலகால் மண்ணைக் கொத்த ஆரம்பித்தது. இரவு முழுவதும் கண்கூட சிமிட்டாமல் ஏதோ ஒரு திட்டத்துடன், கோடு போட்டதுபோல மண்ணைக் கொத்திக் கொத்திச் சென்று கொண்டே இருந்தது.
பொழுது விடிவதற்குள், தீவு மக்கள் யாரும் எழுந்திருக்கும் முன், கொத்திக் கொத்தித் துண்டாக்கியப் பகுதியை எவருக்கும் தெரியாமல் தூக்கிச் சென்றுவிட வேண்டும் - இதுதான் ஸாகாவின் அற்புதத் திட்டம்!
பொழுது விடியும்முன் ஒருவழியாகத் தனக்கு வேண்டிய நிலப் பகுதியை ஸாகா பறவை தனியே வெட்டி முடித்து விட்டது. ஆனால் அதே போன்ற கடினமான வேறு ஒரு வேலையும் அதற்கு மிச்சமிருந்தது. வெட்டி எடுத்தப் பகுதியை, கடலில் அப்பறவை தேர்ந்தெடுத்தப் பகுதியில் கொண்டுபோய்ப் போடவேண்டும். அதற்கும் அசரவில்லை அந்த தில்லாலங்கடி ஸாகா.
அவ்வாறு அந்தத் துண்டுப் பகுதியைக் கடலுக்குள் தூக்கிச் செல்லும்போது அடிவானத்தில் உதயசூரியன் மெதுவே எழத் தொடங்கியது. நிலப்குதியை தான் தூக்கிச் செல்வதை மக்கள் பார்த்துவிட்டால், அதைவிட அவமானம் வேறு எதுவுமில்லை என்று எண்ணியது ஸாகா. அவ்வளவுதான், தொபக்கடீர் என்று பெருஞ்சத்தம் கேட்டது. அமைதியான அந்த விடியற்காலைப் பொழுதில் பெருஞ்சத்தத்தைக் கேட்ட தீவுவாசிகள், என்னவோ ஏதோ என்று அலறியடித்துக்கொண்டு எழுந்து வெளியே ஓடிவந்தார்கள்.
அங்கே கண்ட காட்சி அவர்களை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைய வைத்தது! ஒரு இரவுக்குள் கடலில் புதிதாகக் குட்டியூண்டு தீவு ஒன்று முளைத்திருந்தால் யாருக்குத்தான் ஆச்சரியமாக இருக்காது? அது மட்டுமல்ல, தமது தீவின் ஒரு பகுதியையும் காணவில்லை என்றால் யாருக்குத்தான் அதிர்ச்சியாக இருக்காது?
அந்த பிரமையிலிருந்து விடுபட்ட தீவுவாசியினர், அந்தக் குட்டியூண்டுத் தீவிற்கு ‘குவோநா’ (Kunono) என்று பெயர் சூட்டினர். நிக்கோபாரி மொழியில் ‘குவோநா’ என்றால், ‘குட்டியூண்டு’ என்று பொருள்! அந்தக் குட்டியூண்டு தீவை இன்றும் நீங்கள் காணலாம். கார் நிக்கோபார் தீவின் காகனா கிராமத்தின் கடற்கரையிலிருந்து 18 மைல் கல் தொலைவில், அலைகடல் சூழ, ஸாகா உருவாக்கிய அந்தக் கனவுத் தீவு இன்றும் உள்ளது. வானம் தெளிவாக இருக்கும் நேரத்தில், கார் நிகோபார் தீவின் தென் முனையிலிருந்தே ஸாகாவின் கனவுத் தீவைப் பார்க்க முடியும்.
குவோநா தீவு, காகனா கிராமத்தாருக்குச் சொந்தமானது. மிகச் சிறிய தீவு என்பதால் அங்கு யாரும் வசிப்பதில்லை. ஆனால் அங்கு நிறைய புறாக்கள் வசிக்கின்றன. அந்தத் தீவில் அவர்களுக்குச் சொந்தமான தென்னந்தோப்புகள் உள்ளன. குவோநாவில் உள்ள புறாக்களை வேட்டையாடவும், அந்தத் தீவையொட்டி கடலில் மீன் பிடிக்கவும் தீவுவாசிகள் அங்கு போவதுண்டு. தொலதூரத் தீவுகளுக்கு ‘ஓடி’ எனும் நாட்டுப் படகில் பயணம் செய்யும்போதும் திரும்பும்போதும், குவோநா தீவில் தங்கி, இளநீர் குடித்து, பயணக்களைப்பை சிறிதே போக்கிக் கொண்டு பயணத்தைத் தொடருவார்கள் தீவுவாசிகள்.
ஆனால், நீங்கள் குவோநா தீவு என்று கூகுள் வரைபடத்தில் தேடினால் கிடைக்காது. பாட்டி மால்வ் (Batti Malv) என்று கூகுள் செய்தால்தான் கிடைக்கும். இரண்டே இரண்டு சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட குட்டித் தீவுதான் ஸாகாவின் கனவுத் தீவான பாட்டி மால்வ். அங்கு ஒரு குட்டி கலங்கரை விளக்கமும் உண்டு.
ஆனால், ஸாகாதான் பாவம் தனது கனவுத் தீவில் வசிக்க அதற்குக் கொடுத்து வைக்கவில்லை. அதன் தன்மானம் அதற்கு இடம் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. தனது திட்டம் அம்பலமாகியதால் தனக்கு திருட்டுப் பட்டம் கட்டி விடுவார்கள் என்ற தன்மான உணர்ச்சியில், தனது கனவுத் தீவில் வசிப்பதற்கு ஸாகா ஒத்துக்கொள்ளவில்லை. ஐயோ பாவமில்லையா ஸாகா!?
ஓவியங்கள்: ராஜே
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT