Published : 17 Jun 2020 09:07 AM
Last Updated : 17 Jun 2020 09:07 AM

கதை சொல்ல வீட்டுக்கு வரும் பிரபல நடிகர்கள்

ஆதி

தமிழகத்தில் ஊரடங்கு இன்னும் முழுமையாகத் தளர்த்தப் படவில்லை. நீங்கள் எல்லாம் உடனடியாகப் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பும் குறைவு. வீட்டுக்குள்ளேயே எத்தனை நாள்தான் இருப்பது? புதிது புதிதாகக் கதை கேட்க வேண்டும், கதை பேச வேண்டும் என்றெல்லாம் உங்களுக்கு ஆசையாக இருக்கலாம். வெளியே சாதாரணமாகப் போக முடியாத இந்தக் காலத்தில், எப்படிப் புதுப் புதுக் கதைகளைக் கேட்பது?

உங்களுக்குக் கதை சொல்வதற்காக நடிகர்கள் ரேவதி, சுஹாசினி மணிரத்னம், 'தலைவாசல்' விஜய் ஆகியோர் உங்கள் வீட்டுக்கே வந்தால் எப்படியிருக்கும்?அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த தூலிகா சிறார் புத்தக நிறுவனம், பல்வேறு கதைகள், பாடல்களை இணையம் வழியாக இலவசமாக வழங்குகிறது.

திவ்யா தாமஸ் எழுதிய 'Go Away Corona Virus' என்ற பாடல் குறும்புத்தகத்தை அந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல், 'ஒழிந்து போ கொரோனா'என்ற பெயரில் டாக்டர் எஸ். முருகுசுந்தரத்தால் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இரண்டுமே தூலிகா நிறுவனத்தின் இணையதளத்தில் www.tulikabooks.com இலவசமாகக் கிடைக்கின்றன. அதேநேரம், இந்தப் பாடலை திரைப் பிரபலமும் நடிகையுமான சுஹாசினி மணிரத்னம் பாடியுள்ள காணொலி வடிவத்தையும் கேட்டு மகிழலாம். ஆங்கிலத்தில் பாலிவுட் நடிகை கல்கி கேக்லன் பாடியுள்ளார்.

இதே வகையில் 'சேவலும் சூரியனும்'என்ற கதையை நடிகை ரேவதி;'குட்டி அன்பு'என்ற கதையை நடிகர் தலைவாசல் விஜய்;'கஜபதி குலபதி', 'கடகட குடுகுடு', 'மல்லி வரப்போறா'ஆகிய கதைகளைக் கதைசொல்லும் கலைஞர் ஜீவா ரகுநாத், 'மிகத் தித்திப்பான மாம்பழம்'கதையை நான்சி ராஜ் ஆகியோர் சுவாரசியமாக வாசித்துள்ளனர்.

கதை கேட்பது மட்டுமில்லாமல் குழந்தைகள் வீட்டிலேயே செயல்பாடுகளைச் செய்வதற்கும் இந்த நிறுவனத்தின் இணையதளம் உதவுகிறது. ஓவியர் அசோக் ராஜகோபாலனின் வழிகாட்டுதலுடன் அசையும் படங்களை உருவாக்கலாம், ஓவியர் ஸ்ரேயா சென்னின் வழிகாட்டுதலுடன் பறக்கும் ராக்கெட்டை செய்துபார்த்து மகிழலாம்.

ரெட் கர்டெய்ன் திட்டம் மூலம் ‘The Story of Ganga', 'Munna and Maharaja' ஆகிய கதைகளை நடனக் கலைஞர் பிரியா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடனமாக நடித்தும் காட்டியுள்ளனர். இந்தக் கதைகள், செயல்பாடுகள், நடனங்கள் மூலம் அடுத்து வரும் நாட்களில் சில மணி நேரத்தை ஜாலியாகக் கழிக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x