Published : 19 Aug 2015 12:47 PM
Last Updated : 19 Aug 2015 12:47 PM
இந்தியாவின் மிகவும் பழமையான நாணயச் சாலையாக நாசிக் அறியப்படுகிறது. ஆனால், இந்தியாவில் முதன்முதலில் 1640-களிலேயே மின்ட் எனப்படும் நாணயச் சாலை சென்னையில்தான் நிறுவப்பட்டது. முதலில் தங்கம், பிறகு வெள்ளி, செம்பு நாணயங்கள் தயாரிக்கப்பட்டன. 1869-ல்தான் இந்த நாணயச்சாலை மூடப்பட்டது. இன்றைக்கும் ஜார்ஜ் டவுனில் நாணயச் சாலை இருந்த இடம், தங்கச் சாலை என்றே அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் முதல் மாகாணமாக மதராஸ் மாகாணத்தை (சென்னையை மையமாகக் கொண்ட பகுதி) பிரிட்டிஷ் அரசு 1684-ல் அறிவித்தது. அதன் முதல் மாகாணத் தலைவராக இருந்தவர் எலிஹு யேல். இவரது பெயரில்தான் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகம் அழைக்கப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தை 1701-ல் அமைப்பதற்கு, மதராஸ் மாகாணத்தில் அவர் சேர்த்த பணமும் பெருமளவு உதவியதாகக் கூறப்படுகிறது. யேல் பல்கலைக்கழகம் அமைந்துள்ள கனெக்டிகட் பகுதி, அந்தக் காலத்தில் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்தது.
ஆசியாவிலேயே ஆங்கில வழியில் கற்பிக்கும் பள்ளிகளில் மிகவும் பழமையான, இன்றளவும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பள்ளி அமைந்தகரை ஷெனாய் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி. இது 1715-ல் இப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இன்றைக்கும் 1,500 மாணவர்கள் இப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.
இன்றைக்குச் சென்னையில் குறுகலாகவும் அமைதியாகவும் ஓடிக்கொண்டிருக்கும் அடையாற்றின் கரையில், நவீன இந்திய வரலாற்றில் முக்கியமான போர் ஒன்று நிகழ்ந்தது. 1746-ல் புனித ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர்களிடம் இருந்து பிரெஞ்சு படை கைப்பற்றி வைத்திருந்தது. பிரெஞ்சுப் படையிடம் இருந்து புனித ஜார்ஜ் கோட்டையை மீட்பதற்காக, ஆர்க்காடு நவாப் தன் மகன் மஃபூஸ் கானைப் போர் தொடுக்க அனுப்பினார். ஆனால், அந்தப் போர் ஒரே நாளில் முடிந்தது. ஆர்க்காடு நவாப் படையைத் தோற்கடித்த பிரெஞ்சு படை, கோட்டையைத் தன் வசமே வைத்துக்கொண்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் பிரிட்டன் நிர்வாகம், மெட்ராஸ் ரெஜிமென்ட் என்ற ராணுவப் பிரிவைத் தொடங்கியது. இதுவே இந்தியாவின் முதல் ராணுவ ரெஜிமென்ட்.
அடையாறு போர் நடந்த காலத்தில் சென்னை நகரத்தைப் பிரான்ஸ் நாடு நான்கு ஆண்டுகளுக்குக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதை ஆங்கிலேயர்கள் மீட்டிருந்தாலும்கூட, மற்றொருபுறம் மைசூரிலிருந்து ஹைதர் அலி தாக்குவதற்கான ஆபத்தும் இருந்தது. இதன் காரணமாகப் புனித ஜார்ஜ் கோட்டை, சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பாதுகாக்க 1772-ல் ஆங்கிலேய அரசு ஒரு சுவரைக் கட்டியது. ஐந்து கி.மீ. நீளம் கொண்ட இந்தச் சுவர் பக்கிங்ஹாம் கால்வாயில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்புவரை நீண்டிருந்தது. இந்தச் சுவருக்குப் பக்கத்தில் உருவான சாலைதான் வால்டாக்ஸ் சாலை. இந்தச் சாலை கட்டியதற்கு ஆன செலவை மக்களிடம் வரியாக வசூலிக்க ஆங்கிலேய அரசு முடிவு செய்தது. ஆனால், மக்கள் வரி கட்டவில்லை. இன்றைக்கு அந்தச் சுவரின் இடிந்த சில பகுதிகளே இருக்கின்றன என்றாலும், வரி கொடுக்காத சாலைக்கான பெயர் மட்டும் (வால் + டாக்ஸ்) அப்படியே நிலைத்துவிட்டது.
சென்னை பிராட்வே அருகேயிருந்த கொத்தவால் சாவடி காய்கறிச் சந்தைதான் ஆசியாவிலேயே மிகப் பெரிய காய், கனி சந்தையாக இருந்தது. ஜார்ஜ் டவுனில் 1803-ல் உருவாக்கப்பட்ட இந்தக் காய்கறிச் சந்தை தலைச்சுமைக்காரர்கள், மாட்டுவண்டிகள், கைவண்டிகள் என எப்போதும் பரபரப்பாவே இருக்கும். 1996-ல் இந்தப் பெரிய காய்கறிச் சந்தை கோயம்பேடுக்கு மாற்றப்பட்டது.
இந்தியாவில் உள்ள இரண்டாவது பழமையான அருங்காட்சியகம், எழும்பூரில் உள்ள சென்னை அருங்காட்சியகம்தான். 1851-ல் தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் தொல்லியல், நாணயவியல் சேகரிப்புகள் குறிப்பிடத்தக்கவை. ஐரோப்பாவுக்கு வெளியே ரோமானியப் பழஞ்சின்னங்கள் அதிகம் பாதுகாக்கப்படும் இடமும் இதுதான்.
சென்னையில் உள்ள மிகவும் பழமையான பூங்கா, விக்டோரியா பப்ளிக் ஹாலுக்குப் பின்புறம் உள்ள 'மக்கள் பூங்கா'. 1859-ல் உருவாக்கப்பட்ட இந்தப் பூங்கா மரங்கள், குளங்கள், பூச்செடிகள் நிறைந்திருந்தாலும் பல்வேறு விஷயங்களால் கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கிவிட்டது. 1855-ல் உருவாக்கப்பட்ட 'மெட்ராஸ் ஸூ' எனப்பட்ட விலங்கு காட்சி சாலை 1863-ல் இங்கே வந்தது. இந்த விலங்குக் காட்சியகம், 1985-ல் வண்டலூருக்கு மாற்றப்பட்டது. மக்கள் பூங்காவின் ஒரு பகுதியில்தான் விக்டோரியா பப்ளிக் ஹால் (1887), மூர் மார்கெட் (1898), தென்னிந்திய தடகளச் சங்கம் (1902), ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், லில்லி பாண்ட் சந்தை வளாகம் போன்றவை வந்தன. இந்தப் பூங்காவின் காரணமாகவே, இதற்கு அருகே இருந்த பகுதி பார்க் டவுன் என்றழைக்கப்பட்டது. இன்றைக்கு இந்தப் பூங்கா இருக்குமிடமே தெரியவில்லை.
அந்தக் காலச் சென்னையில் ரயில் போக்குவரத்து பரவலாவதற்கு முன், மிகப் பெரிய பொதுப் போக்குவரத்து வசதியாகப் பயன்பட்டது ரயிலைப் போலிருக்கும் டிராம் வண்டிதான். ஆனால், இந்த வண்டி ரயிலைப் போல வேகமாக ஓடாது, அதிகபட்ச வேகம் மணிக்கு 7 கி.மீ.தான். இந்தியாவில் முதன்முதலில் மின்சார டிராம் வண்டி செயல்பட ஆரம்பித்தது சென்னையில்தான், ஆண்டு 1895. டிராம் சேவை 1953 ஏப்ரல் மாதத்துடன் நிறுத்தப்பட்டது.
முதல் உலகப் போரில் தாக்குதலுக்கு உள்ளான ஒரே இந்திய நகரம் சென்னை. 1914 செப்டம்பர் 22-ம் தேதி ஜெர்மன் போர்க்கப்பலான எம்டன் சென்னை துறைமுகத்தின் மீது குண்டு வீசியது. இதில் பெருமளவு சேதம் ஏற்படவில்லை என்றாலும், பிரிட்டன் அரசின் மனவுறுதி பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் ஊரைவிட்டு வெளியேறினார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT