Published : 20 May 2020 09:11 AM
Last Updated : 20 May 2020 09:11 AM

டிங்குவிடம் கேளுங்கள்: விலங்குகளுக்கும் காய்ச்சல் வருமா?

மனிதர்களைப் போல் விலங்குகளுக்கும் ஜலதோஷம், காய்ச்சல் வருமா, டிங்கு?

- பி. பிரசித்குமார், 6-ம் வகுப்பு, கல்யாண சுந்தரனார் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்.

வைரஸ் கிருமியால் பாலூட்டி களுக்கு ஜலதோஷமும் காய்ச்சலும் ஏற்படுகின்றன. வீட்டில் வளர்க்கும் நாய், பூனையிலிருந்து அனைத்துப் பாலூட்டிகளும் காய்ச்சலுக்கு உள்ளாகின்றன. தாவரங்களைச் சாப்பிடும் விலங்குகள் மூலிகைத் தாவரங்களைத் தின்று குணப்படுத்திக்கொள்கின்றன. பிற விலங்குகள் சில நாட்கள் ஓய்வெடுத்து, குணம் பெறுகின்றன. தண்ணீரில் வசிக்கும் மீன்களுக்கும் ஊர்வனப் பிராணிகளுக்கும்கூட தொற்றின் காரணமாக உடல் வெப்பநிலை உயர்கிறது.

மீன்களின் உடல் வெப்பம் உயரும்போது, குளிர்ச்சியான பகுதியிலிருந்து வெப்பமான பகுதியை நோக்கிச் சென்றுவிடுகின்றன. ஊர்வனப் பிராணிகளுக்குச் சூழலுக்கு ஏற்ப உடல் வெப்பநிலையை மாற்றிக்கொள்ள இயலும் என்பதால், காய்ச்சலின்போது வெப்பத்தைக் குறைத்துக்கொள்கின்றன. மனிதர்களின் மூலம் விலங்குகளுக்கு ஜலதோஷமோ காய்ச்சலோ தொற்றுவதில்லை, பிரசித்குமார்.

காற்றை சுவாசிக்கும் மனிதர்களுக்குக் காற்று கண்களுக்குத் தெரியாது. தண்ணீரில் சுவாசிக்கும் மீன்களுக்குத் தண்ணீர் கண்களுக்குத் தெரியாதா, டிங்கு?

- ம. சுதர்ஷினி, 8-ம் வகுப்பு, நேஷனல் பப்ளிக் பள்ளி, நாமக்கல்.

காற்றும் நீரும் வெவ்வேறு தன்மையுடையவை. மீன்களும் நீரில் இருக்கும் ஆக்சிஜனைத்தானே சுவாசிக்கின்றன. மீன்களுக்கு நீரும் நீரில் இருக்கும் உயிரினங்களும் பிறப் பொருட்களும் தெரியும், சுதர்ஷினி.

நம் நாட்டில் வேகமாகப் பரவும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாது என்கிறார்களே உண்மையா, டிங்கு?

- அ. பிரியதர்சினி, 9-ம் வகுப்பு, சேது லட்குமிபாய் பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளி, ராசாக்க மங்கலம், குமரி.

நம் நாட்டில் மக்கள் தொகை அதிகம். குறைந்த பரப்பில் அதிகம் பேர் வாழ்கிறோம். அதனால் வைரஸ் பரவுதலின் வேகம் அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் உயிர் இழப்பு ஏற்படும் விகிதம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவாக இருப்பது நமக்கு ஆறுதலான விஷயம். உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கான மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது கரோனாவிலிருந்து காத்துக்கொள்வதற்கான தடுப்பு மருந்துகள் இல்லை.

வைரஸ் வேகமாகப் பரவுவதால் நம்மைப் பாதுகாத்துக்கொள்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஒரு வேளை தொற்று ஏற்பட்டால் உடனடியாக மருத்துவம் செய்துகொள்ள வேண்டும். மருத்துவ அறிவியல் வளராத காலக்கட்டத்தில் ஏற்பட்ட எத்தனையோ பெரும் தொற்றுகளைச் சமாளித்து, இவ்வளவு தூரம் மனித குலம் வந்திருக்கிறது. இப்போதோ மருத்துவ அறிவியல் எவ்வளவோ முன்னேறிவிட்டது. விரைவில் கரோனாவை மனிதர்கள் வென்றுவிடுவார்கள். நம்பிக்கையுடன் காத்திருப்போம், பிரியதர்ஷினி.

நான் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதும் நிலையில் இருக்கிறேன். இந்தக் கரோனாவால் படிக்கும் மனநிலை இல்லாவிட்டாலும்கூடத் தேர்வை எழுதிவிட்டால் நல்லது என்றே நினைக்கிறேன். ஆனால், தேர்வுக்குச் சென்று வரும்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவிடுவேனோ என்று அச்சமாக இருக்கிறது. என்ன செய்வது, டிங்கு?

- கே. திரிபுரசுந்தரி, 10-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம்.

உங்களின் மனநிலை எனக்குப் புரிகிறது. அரசாங்கம் பாதுகாப்பாகத் தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகளை வகுத்திருப்பதாகச் சொல்கிறது. நாமும் நம்மால் முடிந்த வரை ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். சமூக இடைவெளியைக் கடைபிடித்து, முகக் கவசம் அணிந்து, கைகளை அடிக்கடி சுத்தம் செய்து, நம் வரை பாதுகாப்பை உறுதி செய்துகொண்டால், பயப்படத் தேவையில்லை. பயத்தைக் கைவிட்டு, உங்களோடு சேர்ந்து பல லட்சக் கணக்கானவர்கள் தேர்வு எழுதுகிறார்கள் என்பதை நினைவில் கொண்டு, தைரியமாகத் தேர்வுக்குத் தயாராகுங்கள். தேர்வையும் கரோனாவையும் வெற்றிகொள்வீர்கள், திரிபுரசுந்தரி. வாழ்த்துகள்!

செய்திகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வெயிலில் நடந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதைப் பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அவர்களுக்கு ஏன் இந்த நிலை என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன். நம்மால் எதுவும் செய்ய இயலாதா, டிங்கு?

- ஆர். சர்வேஷ், 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்பூர்.

அவர்கள் வேலை தேடி வேறு மாநிலங்களுக்கு வந்த தொழிலாளர்கள். ஊரடங்கு காரணமாக அவர்களுக்கு வேலையும் இல்லை, வருமானமும் இல்லை. அதனால் வாழ வழியில்லாமல் சொந்த ஊர்களுக்கு இப்படிப் பயணிக்கிறார்கள். ஆங்காங்கு நல்ல உள்ளங்கள் இவர்களுக்கு உதவுகிறார்கள். தனிப்பட்ட மனிதர்களால் இதைத் தாண்டி எதுவும் செய்துவிட முடியாது. இவர்களின் பிரச்சினையை அரசாங்கத்தால்தான் தீர்க்க முடியும். நம்மால் ஒரு விஷயம் நிச்சயம் செய்ய முடியும்.

நமக்கு அருகில் வருமானம் இன்றிக் கஷ்டப்படும் மனிதர்கள் இருந்தால், நம்மால் இயன்றதை அவர்களுக்குக் கொடுக்கலாம். உணவுப் பொருட்களைப் பகிர்ந்துகொள்ளலாம். அவர்களுக்கு உதவி செய்ய நாம் இருக்கிறோம் என்ற எண்ணத்தை உருவாக்கி, அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கலாம். இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் தனி மனிதர்கள் இதைச் செய்தாலே மிகப் பெரிய விஷயம். உங்கள் வயதுக்கு எளிய மனிதர்கள் மீது நீங்கள் காட்டும் அக்கறை மகிழ்ச்சியளிக்கிறது, சர்வேஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x