Last Updated : 05 Aug, 2015 12:05 PM

 

Published : 05 Aug 2015 12:05 PM
Last Updated : 05 Aug 2015 12:05 PM

கனவுகளுக்குச் சிறகு கொடுத்த பள்ளி

டெட்சுகோ குரோயாநாகி பிறந்தநாள்: ஆக. 9

ஓரிடத்தில் உட்காரப் பிடிக்காமல் எப்போதும் துருதுருவென ஓடிக்கொண்டும், ஏதாவது ஒரு வேலையைச் செய்துகொண்டும் இருக்கும் சிறுமி டோட்டோசான்.

ஆனால், இந்தத் துருதுருப்பையும், குழந்தைகளுக்கே உரிய புதியதை அறியும் ஆர்வத்தையும் அவளுடைய ஆசிரியைகளால் புரிந்துகொள்ள முடியவில்லை. வகுப்பறையைத் தொந்தரவு செய்பவளாக இருக்கிறாள் என்று புகார் கூறி, ஒன்றாம் வகுப்பிலேயே பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாள்.

புதிய பள்ளி

பள்ளியிலிருந்து அவள் நீக்கப் பட்டதை அவளுடைய அம்மா தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை. அந்தப் பள்ளி தனது மகளைப் புரிந்துகொள்ளவில்லை என்பதை உணர்ந்துகொண்டு, வேறொரு பள்ளியைத் தேடிக் கண்டுபிடித்துச் சேர்த்தார். புதிய பள்ளியின் முதல்வர் டோட்டோசானிடம் பேசினார். ‘அவள் ஒரு நல்ல சிறுமி' என்று பாராட்டிய அந்த முதல்வர் சோசகு கோபயாஷி. பள்ளிக் கல்வியைப் புதிய பார்வையுடன் அணுகிய அவர், டோமாயி பள்ளியை டோக்கியோவில் நடத்திவந்தார்.

இப்படியெல்லாம் ஒரு பள்ளியை நடத்த முடியுமா என்று ஆச்சரியப்பட வைக்கும் வகையில், அற்புதமாக இருந்தது அந்தப் பள்ளி. கனவில் மட்டுமே சாத்தியப்படும் என்று நம்பப்பட்ட விஷயங்கள் அங்கே நடந்தன.

ரயில்பெட்டி வகுப்பறை

எல்லாக் குழந்தைகளுக்கும் பிடித்த ரயில் பெட்டிகள்தான், அங்கே பள்ளி வகுப்பறைகள். ஒரு பாடப்பிரிவுக்கான நேரத்தில், அதை மட்டும்தான் படிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. அவரவர்களுக்குப் பிடித்த பாடத்தைப் படிக்கலாம். அதன் பிறகு, குழந்தைகள் எல்லாம் கொஞ்ச தூரம் நடந்து செல்வார்கள். ஓடைக் கரையில் பிற்பகல் நேரத்தைக் கழிப்பார்கள். சில நாட்களில் இரவிலும்கூட, பள்ளியில் முகாம் அமைத்துத் தங்குவது உண்டு.

இப்படிப்பட்ட ஒரு பள்ளியை விட்டு எந்தக் குழந்தை வீட்டுக்குப் போக விரும்பும்? அடுத்த நாள் காலையில் பள்ளிக்குப் போக ஆவலுடன் எழுந்து ஓடிவரும் குழந்தைகளே, டோமாயி பள்ளி, அதை நடத்திய கோபயாஷியின் புதுமைக் கல்வி முறையின் வெற்றிக்குச் சாட்சி.

டிவி தொகுப்பாளர்

தங்களுக்கான எதிர்காலம் குறித்த கற்பனைகளுடன் வளர்ந்த அந்தக் குழந்தைகள், தங்களுடைய இயல்பான திறனைக் கண்டெடுத்து, வளர்ந்த பின்னர் தாங்கள் விரும்பிய துறைகளில் ஜொலித்தார்கள். ஒரு காலத்தில் முதல் வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட டோட்டோசான், பிற்காலத்தில் மூன்று வெற்றிகரமான டிவி நிகழ்ச்சிகளை நடத்தும் பிரபலத் தொகுப்பாளராக மாறினார்.

இரண்டாம் உலகப் போரால் ஜப்பான் கடுமையாகப் பாதிக்கப்படுவதற்குச் சில வருடங்களுக்கு முன்னர்தான் அந்தப் பள்ளியில் டோட்டோசான் படித்தாள். அற்புதமான அம்சங்கள் நிரம்பிய டோமாயி பள்ளி, இரண்டாம் உலகப் போருக்குத் தாக்குப்பிடிக்கவில்லை. 1945-ம் ஆண்டில் அமெரிக்கப் போர் விமானங்கள் வீசிய குண்டுகளால் அந்தப் பள்ளி நிர்மூலமாக்கப்பட்டது.

நீங்காத நினைவு

அதேநேரம், இந்தப் பள்ளி மக்களின் நினைவுகளில் நீங்கா இடம்பிடித்திருக்கும் வகையில் எழுதப்பட்ட புத்தகம்தான் ‘டோட்டோசான் - ஜன்னலில் ஒரு சிறுமி' (Totto-chan, the Little Girl at the Window). இதை எழுதியவர் டெட்சுகோ குரோயாநாகி. டோட்டோசான் என்பது டெட்சுகோவின் சின்ன வயது செல்லப் பெயர். அவருடைய டோமாயி பள்ளி அனுபவங்களை அந்தப் புத்தகம் விவரிக்கிறது.

“எனது குழந்தைப் பருவ நினைவுகள், எவ்வளவு மகிழ்ச்சி கரமானதாக இருந்திருக்கின்றன” என்று இந்தப் புத்தகத்தை எழுதியபோது நினைவுகூர்ந்து, மனதுக்குள் சிரித்துக்கொண்டேன் என்று டெட்சுகோ கூறியுள்ளார்.

மகிழ்ச்சிகரமான கல்வி

‘கல்வி' என்றால் என்ன என்பதை ஒரு சுவாரசியமான கதை போல, அதுவும் சட்டென்று புரிவதுபோலச் சொல்லியிருக்கிறார் டெட்சுகோ. ஒரு குழந்தையிடம் இயல்பாக இருக்கும் தனித்திறமையைக் கல்வி வெளியே கொண்டுவந்து, பட்டை தீட்ட வேண்டும். ஆனால் குழந்தையின் இயல்பான கற்பனைத் திறன், படைப்பாற்றலை வழக்கமான கல்வி முறை ஒடுக்குகிறது. அதற்கு மாறாகக் கோபயாஷியின் முறை அவற்றை எப்படி ஊக்குவிக்கிறது என்று டெட்சுகோ சொல்லியிருக்கிறார்.

கட்டுப்பாடுகள் மிகுந்த, பரீட்சை மதிப்பெண்களை முன்வைக்கிற கல்விக்கு எதிராக மிகப் பெரிய ஆயுதமாக மாறிய டோட்டோசான் புத்தகம், ஜப்பானியக் கல்வி முறையில் பெரிய விவாதத்தை உருவாக்கியது. தமிழ், ஆங்கிலம் உட்படப் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம், 50 லட்சம் பிரதிகள் விற்றுள்ளது.

இந்தப் புத்தக விற்பனையில் கிடைத்த கோடிக்கணக்கான உரிமத் தொகையை, குழந்தை நலத்திட்ட அமைப்புகளுக்கு டெட்சுகோ கொடுத்துவிட்டார். இதைப் பாராட்டி யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

எல்லாக் குழந்தையும்

வழக்கமான நடைமுறையை மீறிச் செயல்பட விரும்பிய டெட்சுகோவைப் புறக்கணிக்காமல், அவருடைய அம்மாவும் பள்ளி முதல்வர் கோபயாஷியும் தன்னம்பிக்கையுடனும், இயல்பான ஆர்வத்தை வளர்க்கும் வகையிலும் ஊக்குவித்ததுதான் மாற்றத்துக்குக் காரணம்.

டோட்டோசானின் துருதுருப்பும் புதியதை அறியும் ஆர்வமும் உலகிலுள்ள எல்லாக் குழந்தை களிடமும் இருப்பதுதான். அதைச் சிதைக்காமல் எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்று புத்தகம் மூலம் ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறாள் டோட்டோசான்.

டோட்டாசான் புத்தக வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட் (என்.பி.டி.), பள்ளி கல்வித் துறை வளாகம் (டி.பி.ஐ.), நுங்கம்பாக்கம், சென்னை - 600 006 / தொலைபேசி: 044-28252663

வெங்காயப் பாட்டி

டோக்கியோவில் 1933-ம் ஆண்டு பிறந்த டெட்சுகோ குரோயாநாகி, ஒபரா பாடகராக விரும்பி டோக்கியோ இசைக் கல்லூரியில் படித்தார். படித்து முடித்த பிறகு டிவி நிகழ்ச்சிகளில் தோன்ற ஆரம்பித்தார்.

‘டெட்சுகோ வரவேற்பறை' என்ற பிரபலங்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை 1975-ல் நடத்தத் தொடங்கினார். இயல்பும் நட்பும் கலந்திருந்த டெட்சுகோவின் கேள்விகளுக்குப் பிரபலங்கள் தயங்காமல் பதில் சொன்னார்கள். அந்த நிகழ்ச்சி ஜப்பான் மக்களின் மனதைக் கவர்ந்து, நாடு முழுவதும் பிரபலமடைந்தது.

ஜப்பானிய மொழியில் ‘டோட்டோசான்' புத்தகத்தை 1981-ல் எழுதி வெளியிட்டார். தன்வரலாற்று நினைவுக் குறிப்புகளாக அமைந்திருந்த அந்தப் புத்தகம் 1984-ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

அவருடைய தற்போதைய சிகையலங்காரம் காரணமாக, உள்ளூர் ஊடகங்கள் டெட்சுகோவை ‘வெங்காயப் பாட்டி' என்று வர்ணிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x