Published : 05 Aug 2015 12:37 PM
Last Updated : 05 Aug 2015 12:37 PM

பொம்மைகளை நேசிக்கும் விந்தை மனிதர்

பொம்மைகள் என்றால் உங்களைப் போன்ற குட்டிப் பசங்களுக்கு மட்டுமே பிடிக்கும் என்று நினைக்கிறீர்கள். பெரியவர்களுக்கும்கூடப் பொம்மை என்றால் மிகவும் பிடிக்கும்தான். அதற்கு நல்ல உதாரணம் சிவகங்கையில் உள்ள மகாதேவனைச் சொல்லலாம்.

அவரது வீட்டுக்குப் போனால் ஆயிரக்கணக்கான பொம்மைகளையும், பழைய பொருட்களையும் பார்க்கலாம். இந்தப் பொம்மைகளைக் கொண்டு காரைக்குடியில் உள்ள தனது வீட்டின் மாடியில் ஒரு குட்டி அருங்காட்சியகத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார் இவர்.

சரி, மகாதேவன் ஏன் இப்படிப் பொம்மைகளைச் சேர்த்து வைக்கிறார்? “படிக்கிற வயசுல இட்லிக்கும் தோசைக்கும் எங்கள் வீட்டில் ஏங்கிக் கிடந்த ஏழையான குடும்பம் எங்களுடையது. அந்த நாட்களில் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு அலுமினியப் பெட்டியில் நோட்டு, புத்தகங்களை வைத்து எடுத்து வருவார்கள். அதை ஏக்கத்துடன் பார்த்து நிற்பேன். அந்த ஏக்கம் தான் இன்றைக்கு இப்படி விதவிதமான பொம்மைகளை வீட்டுக்குள் கொண்டுவரக் காரணம்” என்று பெருமையாகக் கூறுகிறார் மகாதேவன்.

சொந்தமாகச் சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு, காலத்தைக் கடந்த பழைய பொருட்களையும் தகரத்தாலான கார்கள் மற்றும் பொம்மைகளையும் விளையாட்டுப் போக்கில் வாங்கிச் சேர்த்த இவருக்கு ஒரு கட்டத்தில் அதுவே முழுநேரத் தேடலாகிவிட்டது. எந்த ஊருக்குப் போனாலும் அங்குள்ள பழைய சாமான் விற்பனைக் கடைக்குள் புகுந்து தனக்கான தேடலைத் தொடங்கிவிடுகிறார் இவர். வெளிநாடுகளுக்குப் போனாலும் இந்த வழக்கத்தை மாற்றுவதில்லை. இவரது அருங்காட்சியகத்தில் புதுபொம்மைகள் முதல் மரப்பாச்சி பொம்மை வரை பஞ்சமில்லாமல் இருக்கின்றன.

போகுமிடமெல்லாம் வித்தியாசமான பொம்மைகளையும் வாங்கிச் சேர்த்த மகாதேவன் வீட்டில், போர்சிலின் பொம்மைத் தொகுப்புகள் மட்டுமே ஆயிரத்திற்கும் அதிகமாக ஜொலிக்கின்றன.

“பழைய சினிமா படங்களில் வரும் கார்களும், பிற வாகனங்களும் ரொம்ப பிடிக்கும். மறுநாளே, அந்த கார் பொம்மைகள் எங்குக் கிடைக்கும் எனத் தேட ஆரம்பித்துவிடுவேன். தகரப் பொம்மைகளுக்காக என்னிடம் உள்ள எதைக் கேட்டாலும் நான் கொடுத்துவிடுவேன். அந்தளவுக்கு இந்தப் பொம்மைகள் மீது எனக்குப் பைத்தியம். நான் வாங்கி வரும் பொம்மைகளும், பழைய பொருட்களும் எனது படுக்கை அறையில் என் கண்ணெதிரே ஒருமாதம் இருக்கும். தினமும் அவற்றை ரசிப்பேன். அடுத்த பொருள் வந்த பிறகுதான் அது அருங்காட்சியக அறைக்குப் போகும்” என்று மகாதேவன் கூறும்போது பெருமை முகத்தில் தெரிகிறது.

1900-லிருந்து 1970-ம் ஆண்டு வரை தயாரான பல பொருட்களை இவரது அருங்காட்சியகத்தில் பார்க்கலாம். 1940-ல் வெளிவந்த விளம்பரப் பலகைகள், 1910-ல் வெளிவந்த வெளிநாட்டு செய்தித் தாள்கள், மிகப் பழமையான ஜெர்மனி ஓவியங்கள், பழைய ரூபாய் நோட்டுகள், அந்தகால பர்மா லாட்டரி சீட்டுகள், 1967-ல் தமிழக அரசால் நன்கொடைச் சீட்டு என்ற பெயரில் வெளியிடப் பட்ட லாட்டரிச் சீட்டுகள், பவுடர் டின்கள் இப்படி நீண்டுகொண்டே போகிறது மகாதேவன் சேர்த்து வைத்துள்ள பொருட்களின் பட்டியல்.

“பொதுமக்களுக்குக் கட்டணமின்றிப் பயன்படும் வகையில் இந்த அருங்காட்சி யகத்தை விரிவுபடுத்த வேண்டும். அதற்காக வீட்டுக்குப் பக்கத்திலேயே இடம் வாங்கிப் போட்டு விட்டேன். நான் கட்டவிருக்கும் அருங்காட்சியகத்திற்கு ‘பொம்மைகள் உலகம்’ என்று பெயர் சூட்ட ஆசை. அறுபது வயதுக்குள் உலகம் முழுவதும் சுற்றிமுடித்து அனைத்து நாடுகளிலும் உள்ள பொம்மைகள், பழைய பொருட்களை முடிந்தவரை வாங்கி வந்து பொம்மைகள் உலகத்தில் வைத்துவிட வேண்டும். இதுதான் எனக்குள் இருக்கிற ஒரே ஆசை’’ என்கிறார் இந்தப் பொம்மைகளின் நண்பர்.

மகாதேவன் வித்தியாசமான மனிதராக இருக்கிறார் அல்லவா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x