Published : 18 Mar 2020 09:16 AM
Last Updated : 18 Mar 2020 09:16 AM

யாருக்கு வெற்றி?

உலகம் முழுவதும் கரோனா என்ற கோவிட்-19 வைரஸைப் பற்றிப் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள்கூட சந்தேகம் கேட்டுக் கடிதங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அனைவரின் சந்தேகங்களையும் தீர்த்து, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காமிக்ஸ் வடிவில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்.

கரோனா பற்றிக் கேள்விப்படும் குழந்தைகள், சூப்பர்மேன் வாயுவிடம் சந்தேகம் கேட்கின்றனர்.

வைரஸ் என்பது சின்னஞ்சிறு நுண்ணுயிரி. இது தானாக நகராது. ஆனால், தொடுவதன் மூலமும் காற்றின் மூலமும் எளிதாகப் பரவும். ஜலதோஷம் பிடித்தவரின் கையைத் தொடும்போது, தொட்டவரின் கைக்குப் பரவிவிடும். ஜலதோஷம் பிடித்தவர்கள் தங்கள் முகத்தை மூடிக்கொண்டால், பிறருக்குப் பரவுவதைத் தடுத்துவிட முடியும். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் ஜலதோஷம், காய்ச்சல், வறட்டு இருமல், தலைவலி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை ஏற்படும்.

கரோனாவைக் கண்டு ஏன் அச்சப்படத் தேவையில்லை?

கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் இறப்பு விகிதம் குறைவு. 100 பேர் பாதிக்கப்பட்டால் 2 பேர் உயிரிழக்கிறார்கள். சார்ஸ் வைரஸ் வந்தபோது நூற்றுக்கு 10 பேரும் எபோலாவுக்கு நூற்றுக்கு 4 பேரும் பலியானார்கள். அதனால் கரோனாவைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. அதேநேரம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

கரோனாவை எப்படி வெற்றிகொள்ளலாம்?

கரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தினால் நீங்களும் உங்கள் குடும்பமும் தப்பிக்க முடியும். அதற்குச் சில எளிய வழிகளைப் பின்பற்றினால் போதுமானது.

1. சுத்தமாக இருங்கள். வீட்டைச் சுகாதாரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

2. கைகளில் வைரஸ் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அதனால் 7 படிநிலைகளில் கைகளைக் கழுவ வேண்டும்.

3. கைகுலுக்கு வதற்குப் பதில் வணக்கம் சொல்லுங்கள்.

4. கூட்டமான இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.

5. இருமலுடன் மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பவர்கள் முகக்கவசத்தை அணிய வேண்டும்.

6. கரோனாவால் பாதிக்கப்பட்டவருக்குச் சிகிச்சை அளிப்பவர்கள் முகக்கவசத்தை அணிய வேண்டும்.

7. வீட்டில் யாருக்காவது பாதிப்பு இருந்தால் மற்றவர்கள் முகக்கவசத்தை அணிய வேண்டும்.

8. ஆரோக்கியமானவர்கள் முகக்கவசத்தை அணிய வேண்டியதில்லை.

9. தும்மல், இருமல் வருபவர் களிடமிருந்து ஒரு மீட்டர் தள்ளியிருங்கள்.

10. கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துவிடுங்கள்.

11. பயணங்களைத் தவிர்த்துவிடுங்கள்.

12. ஜலதோஷம், காய்ச்சல், இருமல், மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.

இந்த எளிய விதிகளைப் பின்பற்றினால் கரோனா வைரஸை விரைவில் வென்றுவிடலாம். நம்பிக்கையுடன் இருப்போம். கவனமாக இருப்போம். தைரியமாகக் கரோனாவை எதிர்கொள்வோம். இறுதி வெற்றி நமக்கே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x