Published : 05 Feb 2020 11:19 AM
Last Updated : 05 Feb 2020 11:19 AM

புதியதோர் உலகம்: சொற்களை எரிக்க முடியுமா?

ஆதி

வணக்கம். நான்தான் புழு... புத்தகப் புழு பேசறேன். "உங்களுக்குப் புத்தகங்கள் பிடிக்குமா?

அதுதான் ஆசிரியர்கள், பெற்றோர்கள் எல்லோரும் படி படி என்கிறார்களே? நீயும் அதே கேள்வியைக் கேட்டா எப்படி?" என்று தானே மனதுக்குள் நினைக்கிறீர்கள்.

புத்தகங்கள் என்றால் பாடப்புத்தகங்கள் மட்டுமல்ல, உலகில் அறிவைப் பரப்பியவை, பரப்பிவருபவை புத்தகங்களே. உங்க பாடப்புத்தகங்களை எல்லாம் எப்படி எழுதுறாங்கன்னு நினைக்கிறீங்க? ஏற்கெனவே பலர் ஆராய்ச்சி செய்து புது வெளிச்சம் பாய்ச்சிய புத்தகங்களைப் பார்த்துத்தான். பள்ளிப் பாடப்புத்தகங்களும் இன்றைக்கு சுவாரசியமா மாறிட்டு வருது. அதுக்குக் காரணமும் புகழ்பெற்ற பல புத்தகங்கள்தாம். புத்தகங்களின் பெருமையைப் பத்தி பேசத் தொடங்கிட்டா, அதுக்கு முற்றுப்புள்ளியே வைக்க முடியாது.

கேள்வி கேட்கும் புத்தகங்கள்

வரலாறு முழுக்கக் கவிதைகள், எழுத்து, புத்தகங்களைக் கண்டு அரசர்களும் அதிகார வர்க்கத்தினரும் வெறுப்பையும் எரிச்சலையும் வெளிப்படுத்தி வந்திருக்காங்க. அதற்குக் காரணம் அதிகாரத்தை எதிர்த்து அவை கேள்வி கேட்டதுதான். நாட்டை ஆளும் மன்னனே ஆனாலும் அவன் தவறு செய்தால், நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்கலாம் என்பதை அன்று முதல் இன்றுவரை கூறிவருகிறது கண்ணகியை மையமாகக் கொண்ட சிலப்பதிகாரக் காப்பியம். எந்தவொரு எழுத்தும் புத்தகங்களும் அது எழுதப்பட்ட காலத்துடன் முடிந்து போய்விடுவதில்லை. அது மக்களுடைய நினைவில் பிரதியெடுக்கப்பட்டும் அச்சடிக்கப்பட்டும் எதிர்காலத்திலும் வாழ்கிறது.

அதேநேரம் நூல்கள், நூலகங்கள், நூலாசிரியர்களுக்கு எதிராக அதிகார ஒடுக்குமுறை எல்லா காலத்திலும் தொடர்ந்து நடந்துக்கிட்டு இருக்கு. பண்டைய எகிப்தில் இருந்த அலெக்சாண்டிரியா நகரத்தில் உலகின் மிகப் பெரிய நூலகம் இருந்தது. பொ.ஆ.மு. (கி.மு.) 246-க்கு முன் நிறுவப்பட்ட இந்த நூலகம் இருநூறு ஆண்டுகளுக்கு அறிவைப் பரப்பி வந்தது. அதற்குப் பிறகு ரோமானியப் பேரரசர் ஜூலியஸ் சீசரின் படை வைத்த தீயில் அந்த நூலகம் அழிந்தது.

வரலாற்றில் இதுபோல் எரிக்கப்பட்ட நூலகங்கள் பல. பண்டைய நாளந்தா பல்கலைக்கழகம் என்பது ஒரு பெரிய பௌத்த மடாலயம். இந்தப் பல்கலைக்கழகம் பொ.ஆ. 5-ம் நூற்றாண்டிலிருந்து 12-ம் நூற்றாண்டு வரை உலகின் சிறந்த உயர்கல்வி நிறுவனமாகத் திகழ்ந்தது. புகழ்பெற்ற சீனப் பயணி சுவான் சாங் (யுவான் சுவாங்) அங்கே பயின்றிருக்கிறார். அவருடைய காலத்துக்குப் பிறகு நாளந்தா நோக்கிப் படையெடுத்து வந்தவர்களால் நாளந்தா நூலகம் எரிக்கப்பட்டது.

1980களில் தமிழர்களின் அறிவு மையமாகத் திகழ்ந்த ஈழத்தின் யாழ்ப்பான நூலகம் எரிக்கப்பட்டது. ஈராக்கில் அமெரிக்கா தொடுத்த ஆக்கிரமிப்புப் போரில் பஸ்ராவின் நூலகம் உட்பட பல நூலகங்கள் எரிக்கப்பட்டன.

இப்படி எத்தனையோ நூலகங்கள், நூல்கள், நூலாசிரியர்கள் அழிக்கப்பட்டாலும் எழுத்தும் நூல்களும் முற்றிலும் அழிந்து போவதில்லை. அறிவை, சிந்தனையை, கேள்வியை எந்த அதிகாரத்தாலும் முற்றிலும் எரித்துவிட முடியாது.

28,000 வரிகளும் தெரியும்

இன்றைய இஸ்ரேல் பகுதியைச் சேர்ந்த யூத அறிஞர் அகிவா பென் யோசப், ரோமானியர்களுக்கு எதிராகக் கலகம் செய்ததால் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டபோது "காகிதத்தை எரிக்கலாம். சொற்கள் பறந்து சென்றுவிடும்" என்று அவர் சொன்னாராம்.

ஓலை, காகிதம் போன்றவற்றில் நூல்கள் எழுதப்படாத காலத்தில் பாடல்களை மக்கள் மனப்பாடம் செய்திருந்தார்கள். அந்தக் காலத்தில் பள்ளிப் படிப்பு என்பதே பாடல்களை மனப்பாடம் செய்வதாகவே இருந்தது.

கிரேக்கப் பண்டைய காவியங்களான இலியத்தும் ஒடிசியும் 2700 ஆண்டுகளுக்கு முன் ஹோமரால் இயற்றப்பட்டவை. இந்த இரு காவியங்களின் 28,000 வரிகளைச் சிலர் முழுமையாக மனப்பாடம் செய்து திரும்பக்கூறும் திறமை பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். இதேபோன்று பண்டைத் தமிழ் செய்யுள்களையும் பக்திப் பாடல்களையும் மனப்பாடம்செய்து, மீண்டும் மீண்டும் பாடக்கூடிய பழக்கம் நம் நாட்டிலும் உண்டு.

மேற்கண்ட சம்பவங்களும் நூல்களை மக்கள் மனப்பாடம்செய்து திரும்பக்கூறியதும் உணர்த்துவது ஒன்றைத்தான். மக்களுடைய சிந்தனையை, கேள்வி கேட்கும் பண்பை, அறிவின் விரிவை யாராலும் தடுக்க முடியாது. எழுத்து, நூல்கள், படிப்பு மூலம் அவை காலங்களைத் தாண்டிப் பயணிக்கும். மனிதகுல மாண்பை உயர்த்தும். அடுத்த வாரத்திலிருந்து நாம் அவசியம் படிக்க வேண்டிய சில சிறார் புத்தகங்களைப் பற்றி ஒவ்வொரு வாரமும் பார்ப்போம்.

இந்த வாரம் பேசப்பட்டுள்ள விஷயங்களை இன்னும் விரிவாக வாசிக்க கீழ்க்கண்ட இரண்டு புத்தகங்களும் உதவும்.

காலந்தோறும் புத்தகங்களின் முக்கியத்துவம் குறித்து அறிய... என்றும் வாழும் புத்தகங்கள், மனோஜ் தாஸ் (தமிழில்:ஈ.கோ. பாஸ்கரதாஸ்), நேஷனல் புக் டிரஸ்ட்
(என்.பி.டி. வெளியீடு).

புத்தகங்கள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன என்பதை அறிய...How Books are made, Samuel Israel, National Book Trust (NBT), என்.பி.டி. தொடர்புக்கு: 044-28252663

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x