Published : 22 Jan 2020 12:58 PM
Last Updated : 22 Jan 2020 12:58 PM

மாய உலகம்: உங்களிடம் நீலக்குடை இருக்கிறதா?

மருதன்

என் பெயர் பின்யா என்று சொன்னால், அடுத்து ‘உன் வயது என்ன?’ என்று கேட்கிறார்கள். இந்த இரண்டு கேள்விகளையும் கேட்காத புதிய மனிதர்களை நான் இதுவரை கண்டதில்லை. ‘‘என் வயது மட்டுமல்ல, என் மலை, என் மரம், என் நீலு, என் ஓடை, என் கிராமம் என்று யார் வயதும் எனக்குத் தெரியாது’’ என்று சொன்னால் அதெப்படித் தெரியாமல் போகும் என்பார்கள். ‘‘ஒன்பது, பத்து, பதினொன்று. இந்த மூன்றில் ஏதோவொன்று’’ என்று சொன்னால் சிரிப்பார்கள்.

என் மலையை வேடிக்கை பார்க்க எங்கிருந்தெல்லாமோ திரண்டு வரும் சுற்றுலாப் பயணிகளைத்தான் புதிய மனிதர்கள் என்று அழைக்கிறேன். அவர்களுக்கு என் மலை புதிதாக இருக்கும் என்றால், எனக்கு அவர்கள் புதிதாக இருப்பார்கள். அவர்கள் என்னை ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள் என்றால் நான் அவர்களை அதைவிட ஆச்சரியத்துடன் கவனிப்பேன்.

ஒரு நாள் புல்தரையில் சாய்ந்துகொண்டு என் பார்வையைச் சுழலவிட்டுக்கொண்டிருந்தபோது, தற்செயலாக ஒரு நீலக்குடையைப் பார்த்தேன். உடல் முழுக்கச் சிலிர்த்துவிட்டது. கண்களைக் கசக்கிக்கொண்டு இன்னொரு முறை பார்த்தேன். நீலக்குடையேதான்! என்னை அறியாமல் என் கால்கள் குடையை நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டன! ஓஹோ, எங்கோ மலையில் வசிப்பதால் இந்தச் சிறுமி குடையைப் பார்த்திருக்கமாட்டாள் போலும் என்று நீங்களாகவே நினைத்துக்கொண்டால், தவறு. என்னிடம் இல்லையே தவிர, சிறியதும் பெரியதுமாகப் பல குடைகளை நான் பார்த்திருக்கிறேன். அத்தனையும் கறுப்பு வண்ணம் என்பதால் குடை என்றால் கறுப்புக் குடை என்று எனக்கு நானே முடிவு செய்துகொண்டுவிட்டேன். எங்கிருந்து வந்தது இந்த நீல அதிசயம்?

ஒரு சிறுமி வாய் பிளந்து நிற்பதைத் தவறாகப் புரிந்துகொண்டு பாவம் பசிக்கிறது போலிருக்கிறது, இந்தா சாப்பிடு என்று என்னை நோக்கி எதையோ நீட்டினார் குடையை வைத்திருந்த பெண். நான் கடகடவென்று சிரித்துவிட்டேன். வா இங்கே என்று அழைத்து வழக்கமான அதே இரண்டு கேள்விகளைக் கேட்டுவிட்டு, என் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த புலி நகத்தைப் பார்த்து வியந்தார். ‘‘எனக்கு இதைக் கொடுப்பாயா பின்யா? உனக்கு எவ்வளவு பணம் வேண்டும்?’’

‘‘இது என்னைப் பாதுகாக்கும் தாயத்து, கொடுக்க மாட்டேன்” என்று எவ்வளவு சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. சட்டென்று எனக்குள் ஒரு மின்னல். உங்கள் குடையைத் தருகிறீர்களா? இதை இப்போதே கழற்றி கொடுத்துவிடுகிறேன். அவரும் நிறைய யோசித்துவிட்டு இறுதியில் அளித்துவிட்டார்.

எடுத்துக்கொண்டு குடுகுடுவென்று மலை எங்கும் ஓடினேன். நீலக்குடை என்னை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டது. நீலுவை அழைத்துச் செல்லும்போது, சாப்பிடும்போது, வேடிக்கை பார்க்கும்போது, உறங்கும்போது என்று ஒரு விநாடியும் என் நீலக்குடையைவிட்டுப் பிரியவில்லை நான். எனக்குத் தருகிறாயா பின்யா, எனக்காவது கொடேன் என்று எனக்குத் தெரிந்த, தெரியாத எல்லோரும் கேட்டுவிட்டார்கள். குழந்தைகள் என்னைச் சுற்றிச் சுற்றி வர ஆரம்பித்தார்கள். உனக்கு என்ன கொடுத்தால் நீலக்குடையைத் தருவாய் என்று அதட்டலாகக் கேட்டார் மலையின் ஒரே கடைக்காரர். உலகையே கொடுத்தாலும் தரமாட்டேன் என்றேன், அதே அதட்டல் தொனியில்.

ஒரு மதிய நேரம், புல்தரையில் படுத்தபடி என்னை அறியாமல் உறங்கிவிட்டேன். எழுந்து பார்த்தால் நீலக்குடையைக் காணோம். கண்களில் நீர் வழிய ஆரம்பித்துவிட்டது. பரபரப்போடு ஓட ஆரம்பித்தேன். அதோ! மலையடிவாரத்தில் என் நீலக்குடையை யாரோ எடுத்துக்கொண்டு ஓடுவதுபோல் இல்லை? சிறுத்தை போல் பாய்ந்து குதித்து ஓட ஆரம்பித்தேன். திருடனை எட்டிப் பிடித்து, அவன் கையிலிருந்து குடையைப் பிடுங்கிக்கொண்ட பிறகுதான் கவனித்தேன். என் நண்பன்! நீயா? என்னிடமிருந்து ஏன் இதை எடுத்தாய் என்று அதிர்ச்சியோடு கேட்டபோது, கடைக்காரர்தான் காசு கொடுத்து எடுத்து வரச் சொன்னார் என்றான் அவன்.

இது கிராமத்துக்குத் தெரிய வர, ஒரு திருடனின் கையிலிருந்து எதையும் வாங்க மாட்டோம் என்று சொல்லி எல்லோரும் மலையைவிட்டு கீழே இறங்கிவந்து வேறு கடையில் பொருட்கள் வாங்க ஆரம்பித்தனர். கடை மூடப்பட்டது. கடைக்காரர் வீட்டுக்குள் அடைந்து போனார். நான் உறக்கத்தை இழந்தேன்.

எப்போதும் மனம்விட்டு உரையாடும் என் நண்பனின் இதயத்தில் இருள் வந்து விழுந்திருக்கிறது. கொடுக்கும் காசுக்கு என்ன வருமோ அதைவிடச் சற்றேனும் அதிகமாக மிட்டாயும் பொரிகடலையும் அள்ளிக்கொடுக்கும் என் கடைக்காரர் அவப்பெயரைத் தாங்கிக்கொண்டு நிற்கிறார். ஒரு துளி உப்பு வேண்டுமானாலும் என் மக்கள் நீண்ட நேரம் நடக்க வேண்டியிருக்கிறது. என்னை நெருங்கும் ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் மகிழ்ச்சியைவிட ஏக்கத்தையே அதிகம் காண்கிறேன். என் நீலக்குடையே, என்ன செய்து வைத்திருக்கிறாய் என் கிராமத்தை?

விடிவதற்குள் வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டேன். ஓடிச் சென்று கடைக்காரரின் வீட்டுக்கு முன்பாக என் நீலக்குடையை விரித்து வைத்துவிட்டுத் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். இனி இது இங்கிருக்கட்டும். மழையோ, வெயிலோ யாருக்குத் தேவை என்றாலும் நீலக்குடையை அவர் பயன்படுத்திக்கொண்டு மீண்டும் இங்கேயே வைத்துவிடட்டும். இங்குள்ள ஒவ்வொருவரின் கரத்தையும் என் நீலக்குடை தீண்டட்டும். ஒவ்வொருவரின் வாழ்விலும் நீலக்குடை கொஞ்சம் வண்ணத்தைக் கொண்டுவரட்டும். ஒவ்வொருவரின் ஏக்கத்தையும், ஒவ்வொருவரின் வருத்தத்தையும் நீலக்குடை போக்கட்டும்.

குடையிலுள்ள நீலம், ஆகாயம் போல் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் நிறையட்டும். ஒவ்வொருவரின் மனமும் குடை போல் அகலமாகவும் அழகாகவும் விரியட்டும். ஓடையைப் போல், மரங்களைப் போல், நிலவைப் போல், மழையைப் போல் இது இனி அனைவரின் நீலக்குடை. என் மலையைப் போல் இனி நீலக்குடை எங்கள் எல்லோரையும்விட உயர்ந்து நிற்கும். என் கிராமத்து மனிதர்கள், நீலு போன்ற மாடுகள், ஆடுகள், பறவைகள், புறாக்கள், தவளைகள், வண்டுகள் என்று நீலக்குடை அனைவருக்கும் அனைத்துக்கும் அடைக்கலம் அளிக்கும்.

அது சரி பின்யா ஆனால், நீ குடையோடு சேர்த்து உன் புலி நகத்தையும் அல்லவா இழந்து நிற்கிறாயே என்று என் நண்பன் கேட்டபோது நான் புன்னகை செய்தேன். ‘‘இனி என் கிராமம்தான் என் புலிநகம். அவர்கள் கழுத்தில்தான் நான் தொங்கிக்கொண்டிருக்கிறேன். அவர்கள் என்னைப் பார்த்துக்கொள்வார்கள். நீலக்குடையையும் நான் இழக்கவில்லை. நீல வண்ண மலர்போல் அது எனக்குள் மலர்ந்திருக்கிறது.”

எனக்குள்ளும்தான் என்பதுபோல் நீலு தன் கழுத்தை அசைக்க, சலங்கை மணியோசை மலை எங்கும் பரவ ஆரம்பித்தது.
(ரஸ்கின் பாண்ட் எழுதிய ‘The Blue Umbrella’ கதையில் இருந்து ஒரு காட்சி.)

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x