Published : 22 Jan 2020 12:50 PM
Last Updated : 22 Jan 2020 12:50 PM
ஸ்நேகா
உலகின் மிகப் பெரிய பூக்களில் ஒன்று டைட்டன் ஆரம் (Titan arum). இது நீண்ட காலம் வகைத் தாவரம். இந்தோனேஷியாவின் மழைக்காடுகளில் காணப்படுகிறது.
* செடிதான் என்றாலும் மரம்போல் 20 அடி உயரத்துக்கு வளரும். 3 கிளைகளுடன் ஏராளமான இலைகளுடன் 15 அடி அகலத்துக்குக் குடைபோல் நிற்கும்.
* இந்த இலைகள் சூரியனிலிருந்து ஆற்றலைப் பெற்று, தண்டுப் பகுதியில் சேமித்து வைக்கும். இது பூப்பதற்குத் தேவையான ஆற்றலைத் தரும்.
* 12 முதல் 18 மாதங்களில் இலைகள் மடிந்துவிடும். செடி செயலற்ற நிலைக்குச் சென்றுவிடும்.
* மணியைக் கவிழ்த்து வைத்ததுபோல் பாளைத் தண்டு இருக்கும். இது சுமார் 100 கிலோ எடைவரை இருக்கும். செடி செயலற்ற காலகட்டத்தில் தண்டிலிருந்து மொட்டு உருவாகிறது. மொட்டு வளர்ச்சியின் வேகம் அபரிமிதமாக இருக்கும்.
* முழுமையாகப் பூ மலரும்போது, மடலின் மஞ்சரியிலிருந்து வெப்பம் வெளியேறும். அதிலிருந்து அழுகிய விலங்குகளின் சடலம்போல் துர்நாற்றம் வெளிவரும். இதனால்தான் இந்தப் பூவை, ‘பிண மலர்’ என்று அழைக்கிறார்கள். துர்நாற்றத்தின் மூலம் பூச்சிகள், வண்டுகளைக் கவர்ந்து மகரந்தச் சேர்க்கையை நிகழ்த்துகிறது, இந்தச் செடி.
* பூ ஒரே நாளில் வாடிவிடும். பாளைத் தண்டிலிருந்து பெர்ரி போன்ற தோற்றமுடைய கனிகள் உருவாகும். மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என நிறமாற்றம் அடையும். கனியில் உள்ள விதைகள் இருவாச்சி போன்ற பறவைகள் மூலம் பரவி, மீண்டும் புதியச் செடிகள் முளைக்கும்.
* 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை செடியிலிருந்து பூ உருவாகிறது. ஒரு செடி 4 முதல் 6 பூக்களைக் கொடுத்துவிட்டு, மடிந்துவிடுகிறது.
* செடி பூக்காத காலகட்டத்தில் கிளைகள், இலைகள் அற்ற மரம்போல் காணப்படும். பூப்பதற்கான ஆற்றலைப் பெற்ற பிறகே, பூக்கும்.
* 1878-ம் ஆண்டு தாவரவியலாளர் ஒடோர்டொ பெக்காரி மூலம் சுமத்ரா தீவில் இந்த மலர் கண்டறியப்பட்டது. மழைக்காடுகள் அழிக்கப்படுவதால் டைட்டன் ஆரமும் அழியும் ஆபத்தான சூழலில் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT