Published : 22 Jan 2020 12:04 PM
Last Updated : 22 Jan 2020 12:04 PM
மிது கார்த்தி
தண்ணீர் உள்ள பிளாஸ்டிக் பையைக் கூர்மையான பொருளால் குத்தினால் என்ன ஆகும்? ஒரு சோதனையைச் செய்து பார்த்துவிடலாமா?
என்னென்ன தேவை?
3 கூர்மையான பென்சில்கள், ஜிப் லாக் பிளாஸ்டிக் பை, தண்ணீர்
எப்படிச் செய்வது?
* பிளாஸ்டிக் பையை விரித்து முக்கால் பாகத்துக்குத் தண்ணீரை ஊற்றுங்கள். தண்ணீர் வெளியேறாத வண்ணம் மூடிவிடுங்கள்.
* பையை ஒரு கையில் அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். முதல் பென்சிலை எடுத்து பையின் நடுவே வேகமாகக் குத்துங்கள். அடுத்தடுத்து இரு பென்சில்களையும் அதேபோல வெவ்வேறு இடங்களில் குத்துங்கள்.
* பென்சில்களை குத்திய இடங்களிலிலிருந்து தண்ணீர் கசிகிறதா என்று பாருங்கள்.
* மூன்று பென்சில்களைக் குத்திய இடங்களிலிருந்தும் தண்ணீர் கசியாமல் இருப்பதைக் காண முடியும்.
பிளாஸ்டிக் பையைக் குத்திய பிறகும், அதிலிருந்து தண்ணீர் கசியாமல் இருப்பது எப்படி?
காரணம்
பிளாஸ்டிக் என்பது பாலிமர்கள் என்றழைக்கப்படும் மூலக்கூறுகளின் நீண்ட சங்கிலிகளால் ஆனது. இழுவைத் தன்மையுடன் நெகிழ்வாகவும் இருக்கும். கூர்மையான பென்சில்களை பிளாஸ்டிக் பை வழியாகத் துளைக்கும்போது, பிளாஸ்டிக்கின் நீண்ட மூலக்கூறுகளின் சங்கிலிகள் பென்சில்களைச் சுற்றி உடனே மூடிவிடுகின்றன.
அதாவது, பென்சில் குத்தப்பட்ட இடத்தில் அந்த மூலக்கூறுகள் அடைப்பானாகச் செயல்படுகின்றன. இதன் காரணமாக, பென்சில்களைக் குத்திய இடங்களிலிருந்து தண்ணீர் கசியாமல் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT