Published : 19 Jan 2020 11:14 AM
Last Updated : 19 Jan 2020 11:14 AM
தொகுப்பு: க்ருஷ்ணி
நாம் எவ்வளவு புத்தகங்களை வாங்குகிறோம், வாசிக்கிறோம் என்பதல்ல வாசிப்பின் நோக்கம். புத்தகத்துக்கு நம்மை எந்த அளவுக்கு ஒப்புக்கொடுக்கிறோம் என்பதில்தான் வாசிப்பின் மகத்துவம் அடங்கியிருக்கிறது. நாம் வாழும் நிலத்தின் வரலாற்றையும் மூத்தோர் பயணப்பட்ட பாதையையும் அறிந்துகொள்வது நம் கடமைகளில் முக்கியமானது. பல புத்தகங்கள் அவற்றுக்கு வழிகாட்டியாக இருந்து உதவுகின்றன. எழுத்துலகில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துவரும் இந்நாளில் சென்னை புத்தகக் காட்சியில் கவனம் ஈர்த்த பெண் படைப்பாளிகளின் புத்தகங்கள் சில இவை.
குறுக்கு வெட்டு - சிவகாமி
திருமண உறவு கடந்த காதல், சாகசமா துரோகமா அல்லது ஏமாற்றங்கள், புறக்கணிப்புகள், போதாமைகள், சலிப்புகள், திருப்தியின்மை, பழித்தீர்ப்பு, சவால்கள் போன்றவற்றின் புறவிளைவா? அது வாழ்வின் தென்றலா, புயலா? மரண விழைவா, உயிர்த்தல் விழைவா? உணர்வுக்கும் அறிவுக்குமான போராட்டத்தை உடலரசியல், பாலரசியல் ஆகிய இரு கத்திகளின் மீது மொழியை நடக்க விட்டிருக்கிறார் சிவகாமி. தீக்குச்சிக்கும் மருந்துப்பட்டைக்குமிடையில் உறைந்திருக்கும் அமைதியான நடிப்பை உரையாடல்களால் உரசி மூட்டுகிறது இந்நாவல். பேசப்படாத கதைக்களத்தைப் பெண் மொழியில் பேசுகிறது. விலை: ரூ. 170, வெளியீடு: அணங்கு பெண்ணியப் பதிப்பகம், தொடர்புக்கு: 9599329181
கடல் ஒரு நீலச்சொல் - மாலதி மைத்ரி
முதுநீரை மூக்குத்தியாய் அணிந்த தென்முனைக் குமரி மன ஆழங்களை அகழ்ந்து சொற்களைத் துடுப்பாகி, பெண்ணாழியின் அரசியலை கரை சேர்க்கும் மொழிவெளிக்குள் கொந்தளிக்கும் நீர்மைக் கவிதைகளின் தொகுப்பு.
விலை: ரூ.100, வெளியீடு: அணங்கு பெண்ணியப் பதிப்பகம்
முதல் பெண்கள் - நிவேதிதா லூயிஸ்
பெண்களின் வரலாறு பெரும்பாலும் மறைக்கப்படுகிறது அல்லது புறக்கணிக்கப்படுகிறது. ஆணாதிக்கம் கோலோச்சிய காலத்தில் அடிமைத்தளையை அறுத்துக்கொண்டு வெளியேறுவதே பெண்களுக்கு மாபெரும் சாதனையாக இருந்தது. அதிலும் தனித் திறமையால் தேர்ந்தெடுத்த துறைகளில் சாதித்த 45 பெண்கள் குறித்த தொகுப்பு இந்நூல். அரசியல், சமூகம், பொருளாதாரம் என நாட்டைக் கட்டமைக்கும் அனைத்திலும் பெண்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. முதல் அடியை எடுத்துவைக்கிறவர்களுக்குச் சமூகம் மலர்ப்பாதையை அமைத்துக்கொடுப்பதில்லை. சோதனைகள் பலவற்றைக் கடந்துதான் அவர்கள் சாதிக்க வேண்டியிருக்கிறது. இந்நூலில் இடம்பெற்ற கட்டுரைகளும் அதைத்தான் உணர்த்துகின்றன.
விலை:ரூ.200, மைத்ரி புக்ஸ், தொடர்புக்கு: 9445575740
பெண்ணுக்கு ஒரு நீதி: மகளிர் ஆணையத்தில் மூன்று ஆண்டுகள்- வே. வசந்தி தேவி
மகளிர் ஆணையம் என்னும் நிறுவனத்தின்வழி நீதி தேடிய அனுபவங்களின் தொகுப்பு இந்நூல். 2002 முதல் 2005 வரை மாநில மகளிர் ஆணையத் தலைவியாகத் தான் செயல்பட்டபோது ஆணையம் சந்தித்த வழக்குகள் குறித்து எழுதியிருக்கிறார் வசந்தி தேவி. வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டிய நீதி குறித்துப் பேசும் இந்நூல், அந்த நீதி கிடைக்கப் போராடிய தருணங்களையும் பதிவுசெய்கிறது. பாதிக்கப்படும் பெண்களை, குறிப்பாகத் தலித் பெண்களை இந்தச் சமூகமும் காவல் துறையும் கையாளும் விதம் குறித்துப் படிக்கும்போது பண்பட்ட சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. விலை:ரூ.130, மைத்ரி புக்ஸ்
கதவு திறந்ததும் கடல் - பிருந்தா சேது
கவிஞர், எழுத்தாளர் சே. பிருந்தாவின் தன் அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு இது. கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனிக் குடித்தனமாகி, தனிக் குடும்பங்கள் உதிரி மனிதர்களாக வாழத் தொடங்கியுள்ள காலகட்டம் இது. நம் நாட்டில், ஒற்றைப் பெற்றோர் பெருகி வருவது தவிர்க்க முடியாத காலமாற்றம். அதன் சிக்கல்களை ஆராயவோ, எளிதாகக் கையாளவோ, மன அழுத்தம், மனச்சிதைவு போன்ற நிலைகளுக்குச் சென்றுவிடாமல் தடுக்கவோ, யாரையும் குறை கூறாமல் தீர்வுகளைக் கண்டடையவோ பலர் முயல்வதில்லை. அப்படியான தீர்வை நோக்கி நாம் நகர்வதற்கான கையேடு இந்நூல். விலை: ரூ.130, தமிழினி பதிப்பகம்
கொச்சிக்கட VS கும்மிடிபூண்டி - ஈழவாணி
அதிகாரத்துக்காகவும் நிலத்துக்காகவும் இனத்துக்காகவும் எங்கே போர்கள் நடந்தாலும் அவை பெண்களின் உடல் மீதும் உள்ளத்தின் மீதுமே நடத்தப்படுகின்றன. எல்லாச் சபைகளிலும் பெண்ணே பகடைக்காயாக உருட்டப்படுகிறாள். அவிழ்த்து விடப்பட்ட கூந்தலை அள்ளி முடிக்க நம் பாஞ்சாலிகளுக்கு இன்னும் வாய்க்கவில்லை. விரித்த கூந்தலோடு விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழும் பெண்ணாக கானவி என்பவள் இருந்தாலும் அதை அவள் எப்படி அணுகுகிறாள் என்பதை நாவல் வழியே உணர்த்துகிறார் ஈழவாணி.
விலை: ரூ.250, பூவரசி வெளியீடு, தொடர்புக்கு: 9789010026
ஐந்து எழுத்தாளர்களின் 11 கதைகளின் மொழிபெயர்ப்பான ‘அயல் பெண்களின் கதைகள்’ நூலும் (சிங்களத்திலிருந்து தமிழில்: எம். ரிஷான் ஷெரீப், விலை: ரூ.160, வம்சி புக்ஸ், தொடர்புக்கு: 9443222997) காலித் ஹுசைனியின் ‘ஆயிரம் சூரியப் பேரொளி’
(தமிழில்: ஷஹிதா, விலை.ரூ.400, எதிர் வெளியீடு, தொடர்புக்கு: 9942511302/03259-226012) நூலும் கவனிக்கத்தக்கவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT