Published : 01 Jan 2020 10:38 AM
Last Updated : 01 Jan 2020 10:38 AM
செல்போனைக் கண்டுபிடித்தவர் யார், டிங்கு?
- ஆர். ஹரிணிஸ்ரீ, 4-ம் வகுப்பு, நகராட்சி ஆரம்பப் பள்ளி, சின்னமனூர், தேனி.
அமெரிக்காவில் மோட்டோரோலா நிறுவனத்தில் கம்பியில்லாத் தொலைத் தொடர்பு துறையில் பணிபுரிந்தார் மார்டின் கூப்பர். 1973-ம் ஆண்டு முதல் கையடக்க செல் போனை உருவாக்கினார். இவரே ‘கையடக்க போனின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். மேலும் 10 ஆண்டுகள் இவரும் இவரது குழுவினரும் சேர்ந்து பல முன்னேற்றங்களைக் கொண்டு வந்தனர். 1983-ம் ஆண்டு முதல் செல் போன்கள் விற்பனைக்கு வந்தன. இந்தியாவில் 1995-ம் ஆண்டு செல்போன்கள் அறிமுகமாயின ஹரிணிஸ்ரீ.
வண்டிகளை இழுக்கும் குதிரைகளின் கண்களை ஏன் மறைத்து வைத்திருக்கிறார்கள், டிங்கு?
- பிரவீன், 12-ம் வகுப்பு, மகாத்மா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, மதுரை.
குதிரைகளின் கண்களை முழுவதுமாக மறைத்திருக்க மாட்டார்கள். பக்கவாட்டில்தான் திரை போட்டு மறைத்திருப்பார்கள். குதிரையின் கவனம் சிதறாமல், இலக்கு நோக்கி ஓட வேண்டும் என்பதற்காகத்தான் பக்கவாட்டில் கண்களை மறைத்திருக்கிறார்கள். இப்படி மறைப்பதால் பக்கவாட்டு காட்சிகள் குதிரைக்குப் புலப்படாது, பிரவீன்.
வீட்டில் தனியாக இருக்கும்போது பேய் பற்றிய பயம் வந்துவிடுகிறது. உண்மையிலேயே பேய் இருக்கிறதா, டிங்கு?
- ச. காயத்ரி, 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அருங்குளம், திருவள்ளூர்.
உங்களைப் போன்ற வயதில் பேய் பற்றிய பயம் வருவது இயல்புதான். அந்தப் பயத்தைப் போக்கிக்கொள்வதுதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு. பேய் என்ற ஒன்று உலகத்தில் கிடையாது. அதை யாரும் இதுவரை பார்த்ததில்லை. அதனால்தான் பேய்களைப் பற்றிய கற்பனைக் கதைகள் ஒரே மாதிரியாக இல்லாமல் பலவிதங்களில் உலா வருகின்றன. எனக்கும் உங்கள் வயதில் பயம் இருந்தது. என் நண்பர் சொன்ன யோசனையை ஏற்றுக்கொண்ட பிறகு, பேய் குறித்த பயம் போய்விட்டது. பேய் என்றால் ஏன் விநோத உருவமாகக் கற்பனை செய்துகொள்ள வேண்டும்? கதைகளில் படிக்கும் அழகான தேவதைகளாக நினைத்துக்கொள்ளுங்கள். தேவதை வந்தால் பயப்பட மாட்டீர்கள்தானே? நான் தனியாகத்தான் இருக்கிறேன், நல்லவேளை பொழுதுபோக்க நீ வந்தாய்! பிஸ்கெட், பழம் ஏதாவது சாப்பிடுகிறாயா? என்னோடு விளையாடுகிறாயா என்றெல்லாம் ஒரு நண்பரிடம் கேட்பதுபோல் கேட்கலாம் என்று நினைத்துக்கொள்ளுங்கள். இப்போது பேய் பற்றிய பயம் போயிருக்கும் இல்லையா? பேய் கிடையாது, அப்படியே வந்தாலும் அந்தத் தேவதையை நண்பராக்கிக்கொள்வேன் என்று சொல்லிக்கொள்ளுங்கள். இன்றோடு பேய் பயம் உங்களை விட்டு ஓடிவிடும், காயத்ரி.
அல்ஜிப்ரா, குரோமோசோம் போன்றவற்றில் x, y எழுத்துகளை ஏன் பயன்படுத்துகிறோம், டிங்கு?
- பா. மேஹசூரஜ், 12-ம் வகுப்பு, நியூ க்ரெசன்ட் மெட்ரிக். பள்ளி, புளியங்குடி.
கணிதத்தில் பொதுவாக ‘தெரியாத’ விஷயத்தை x என்று பயன்படுத்தி வருகிறோம். அரபி, ஜெர்மன் மொழியில் இருந்து உருவானதாகச் சொன்னாலும் கணிதத்தில் x பயன்பாட்டுக்கு இதுதான் காரணம் என்று சரியான விளக்கத்தைச் சொல்ல முடியவில்லை. அறிவியலில் குரோமோசோம்களின் உருவம் x போன்று இருந்ததால் x என்று குறிப்பிட்டார்கள், பிறகு ஆண் பண்பை நிர்ணயிக்கும் குரோமோசோம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதுக்கு x-க்கு அடுத்த y எழுத்தைப் பயன்படுத்தியதாகச் சொல்கிறார்கள். அறிவியலிலும் x, y பயன்பாட்டுக்கான காரணத்தை உறுதியாகச் சொல்ல முடியவில்லை, மேஹசூரஜ்.
பூமியில் நீர்ப் பரப்பு ஒரே சமதளமாக இருக்கும்போது, நிலப்பகுதி மட்டும் பள்ளமும் மேடுமாக இருப்பது ஏன், டிங்கு?
- பா. குணசுந்தரி, 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அருங்குளம், திருவள்ளூர்.
கடலுக்கு அடியில் உள்ள நிலப்பரப்பிலும் ஆழமான பகுதிகள், உயரமான மலைகள், எரிமலைகள் போன்ற பலவும் இருக்கின்றன குணசுந்தரி. இவற்றை எல்லாம் நீர் மறைத்திருப்பதால் நமக்குச் சமதளமாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
உன் பெயரையும் படத்தையும் வெளியிடுவதில் உனக்கு என்ன பிரச்சினை, டிங்கு?
- மா. சாய் குமரன், 7-ம் வகுப்பு, ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, வெண்ணந்தூர், நாமக்கல்.
டிங்கு என்று பெயரைக் குறிப்பிட்டுவிட்டு, பெயர் என்ன என்று கேட்டால் என்ன சொல்வது, சாய் குமரன்? இந்தப் பகுதியில் கேள்வி கேட்பவருக்குதான் முன்னுரிமை. நீங்கள் எல்லாம் சுவாரசியமான கேள்விகளைக் கேட்டால்தான், பதிலும் சுவாரசியமாக அமையும். அப்படிப்பட்ட உங்களின் படங்களையே இந்தப் பகுதியில் வெளியிடுவதில்லை. என் படம் மட்டும் எதுக்கு? நீங்கள் இந்தக் கேள்விக்குப் பதில் சுவாரசியமான, எல்லோருக்கும் பயன்படக்கூடிய கேள்விகளைக் கேட்டால், மகிழ்ச்சியடைவேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT