Published : 01 Jan 2020 09:59 AM
Last Updated : 01 Jan 2020 09:59 AM

மாய உலகம்: பசி என்றால் என்ன?

மருதன்

நான் கடைசியாக எப்போது சாப்பிட்டேன் என்று நினைவில்லை. வாரங்களா, மாதங்களா? ஆண்டுகளா, சில பல நூற்றாண்டுகளா? நினைவில்லை. வயிறு காலியாக இருக்கும்போது, எல்லாமே மறந்து போகிறது; கடும் கோபம் வருகிறது. எல்லோர் மீதும். எல்லாவற்றின் மீதும்.

இந்தக் கோபம் வளர்ந்து, வளர்ந்து, வளர்ந்து ஒருநாள் நான் பனை மரத்தைவிடப் பெரியவன் ஆகிவிட்டேன். கோபம் அதிகரிக்க, அதிகரிக்க, அதிகரிக்க என் உடலும் திமிங்கிலம் போல் பெருத்துவிட்டது. ஆனால், என் கிராமத்தில் உள்ளவர்களோ பசியால் வாடி, வாடி மிளகு போல் சுருங்கிவிட்டார்கள்.

என் அப்பாவும் அம்மாவும் நேற்று பிறந்த குழந்தையைப் போல் இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, என் கிராமத்திலிருக்கும் எல்லோரும் சுருங்கிவிட்டார்கள். நான் நின்றால் என் பாதம் உயரம்கூட அவர்கள் வரமாட்டார்கள். ‘‘நீ மட்டும் எப்படியடா இவ்வளவு உயரமாக, பருமனாக வளர்ந்தாய்?” என்று அவர்கள் கேட்டபோது, ‘‘பசி உங்களை எல்லாம் கரைத்துவிட்டது. எனக்குப் பசியைவிடக் கோபம் அதிகமாக இருப்பதால் நான் பெரிதாகிவிட்டேன்” என்றேன்.

கொஞ்சம் நிறுத்து, முதலில் நீ யார்? என்று நீங்கள் கேட்கலாம். கோர்கூ, கோலி, வாசவா, தாட்வி, நாயக்டா போன்ற பெயர்களை நீங்கள் கேள்விப்பட்டது உண்டா? இல்லை என்னும்போது என் பெயரைச் சொன்னாலும் உங்களுக்குப் புரியப் போவதில்லை. என் நிலம், என் வாழ்க்கை முறை, என் மொழி, என் பசி எதுவும் உங்களைப் போன்ற படித்த, பண்பான, ‘நாகரிக’ மக்களுக்குப் மக்களுக்குப் புரியப் போவதில்லை. இருந்தாலும் முயன்று பார்க்கிறேன். நான் ஒரு பழங்குடி சிறுவன். இது என் கதை.

ஒருநாள் கால் போன போக்கில், நாள் கணக்கில், மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் நடந்துகொண்டே இருந்தபோது உங்களைப் போன்ற படித்த, பண்பான, ‘நாகரிக’ மக்கள் வாழும் ஓர் ஊரை வந்தடைந்தேன். ‘பாம்பே’ என்று பலகையில் எழுதியிருந்தது. நுழைந்தேன். அதிர்ந்துபோனேன்.

ஊதிப் பெரிதானவர்களோ சுருங்கிச் சிறுத்தவர்களோ ஒருவர்கூட இல்லை அங்கே. எல்லோரும் இயல்பான மனிதர்களாக இருந்தார்கள். நடந்துகொண்டும் வண்டி ஓட்டிக்கொண்டும் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் பாடிக்கொண்டும் தூங்கிக்கொண்டும் வேலை செய்துகொண்டும் இருந்தார்கள். அவர்களில் பலர் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை என் இரு கண்களால் கண்டேன்.

எனில், நான் நினைத்ததைப் போல் பூமியிலிருந்து உணவு அழிந்து போய்விடவில்லையா? எனக்கும் என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என் கிராம மக்களுக்கும் மட்டும்தான் அது மறைந்து போனதா? நாங்கள் எல்லாம் பசியால், மறதியால், சோர்வால், நோயால் துவண்டு கிடக்கும்போது இங்குள்ளவர்கள் எல்லாம் விதவிதமாக, வண்ண வண்ணமாக, வாசனை வாசனையாகச் சமைத்து ஆளுக்கொரு தட்டு எடுத்து வைத்துக்கொண்டு கடித்து, மென்று, சப்புக்கொட்டி, சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்களா?

அலைபோல் எழுந்த கோபத்தில் நான் மேலும் சில அடிகள் வளர்ந்தேன். மேலும் சில சுற்றுகள் பெருத்தேன். கைக்கு எட்டும் தூரத்தில் உணவகம் என்று எழுதியிருந்தது. தலையை மட்டும் உள்ளே நுழைத்து சமையலறையில் இருந்த எல்லாவற்றையும் ஒரே சுருட்டாகச் சுருட்டி எடுத்து வாயில் போட்டுக்கொண்டேன். பக்கத்தில் சரக்கு அறை இருந்தது. என் தலை உள்ளே போகாது என்பதால் கையை மட்டும் உள்ளே விட்டு, தானிய மூட்டைகளைத் ‘தரதர’வென்று இழுத்து வெளியில் போட்டேன். கோணியைக்கூடப் பிரிக்காமல் அப்படியே விழுங்கினேன்.

என் அளவுக்கு உயர்ந்திருந்த ஒரு கட்டிடத்தை இரு கைகளாலும் நிலத்திலிருந்து பிடுங்கி வாயில் போட்டு மென்றேன். அது செரித்தவுடன் என்னைவிடவும் உயரமான இன்னொரு கட்டிடத்தைப் பிடுங்கி முறுக்குபோல் மெல்ல மெல்லக் கடித்து விழுங்கினேன். விடாமல் பத்து, இருபது அடுக்குமாடி வீடுகளை உண்டு முடித்த பின்பும் பசியும் அடங்கவில்லை, கோபமும் அடங்கியபாடில்லை. ஒருவேளை இரண்டும் ஒன்றுதானா என்றும் புரியவில்லை.

தாவிக் குதித்து ரயில் நிலையத்தை வந்தடைந்தேன். மண் புழு போல் அசைந்து சென்றுகொண்டிருந்த ஒரு ரயிலைக் குனிந்து எடுத்து விழுங்கினேன். முட்டிக்கால் போட்டு அமர்ந்து தண்டவாளத்தைப் பிய்த்து உருவினேன். விழுங்கினேன். ரயில் நிலையத்தின் கூரையைப் பிடுங்கி உள்ளங்கையில் போட்டுக்கொண்டு பொடித்துப் பொடியாக்கி வாயில் சரித்துக்கொண்டேன்.

என் தாத்தாவும் தாத்தாவின் தாத்தாவும் அவர் அப்பாவும் பஞ்சம் பிழைக்க குடிபெயர்ந்த இடம் இந்த பாம்பே. என் மூதாதையர் விதைத்த நெல்லிலிருந்துதான் இங்குள்ள கட்டிடங்களும் குடியிருப்புகளும் வாகனங்களும் உணவகங்களும் ரயில் நிலையமும் ரயிலும் முளைத்திருக்கின்றன. என் மூதாதையரின் உழைப்பைதான் பாம்பே அள்ளி எடுத்து உண்டுகொண்டிருக்கிறது. அதிலிருந்து ஒரு பகுதியைத்தான் நானும் இப்போது உண்டிருக்கிறேன்.

நகரத்துக்கு ஏன் பசியே எடுப்பதில்லை என்பது புரிந்தது. அது தொடர்ந்து காட்டைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது. பெரும் மலையைக்கூடப் பெயர்த்து எடுத்து விழுங்கிவிடுகிறது. பாலைவனம், பள்ளத்தாக்கு, நிலம், நிலத்துக்குக் கீழே புதையுண்டு கிடக்கும் கனிமம் அனைத்தும் நகரத்தின் பசிக்கு இரையாகின்றன. கடலை, நதியை, அருவியை நகரம் அருந்தி தன் தாகத்தைத் தணித்துக்கொள்கிறது. அப்படியும் பசித்தால் கிராமத்தை எடுத்து உண்கிறது.

நகரின் பசிதான் எல்லாவற்றுக்கும் காரணம். நான் என் கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். கோபமாக மாறியிருந்த என் பசியும் பசியாக மாறியிருந்த என் கோபமும் மறைய ஆரம்பித்தன. நடக்க, நடக்க, நடக்க நான் மீண்டும் பழையபடி சிறுவனாக மாறிப் போனேன்.

நகரம் அளவோடு உண்டிருந்தால் கிராமம் பிழைத்திருக்கும். கிராமம் பிழைத்திருந்தால் எங்களுக்கு உணவு இருந்திருக்கும். எங்களுக்கு உணவு இருந்திருந்தால் ஒருவரும் சுருங்கியிருக்க மாட்டார்கள். ஒருவரும் சுருங்காமல் இருந்திருந்தால் எனக்குக் கோபம் வந்திருக்காது. எனக்குக் கோபம் வராமல் இருந்திருந்தால் நான் அளவில் பெரியதாக வளர்ந்திருக்க மாட்டேன். உங்கள் நகரத்துக்குள் நுழைந்திருக்க மாட்டேன். உங்கள் கட்டிடத்தை, ரயில் நிலையத்தை, ரயிலைச் சாப்பிட்டிருக்க மாட்டேன்.

நான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. உங்கள் பசியை உங்களால் கட்டுப்படுத்த முடியும் என்றால் என்னாலும் என் பசியைக் கட்டுப்படுத்த முடியும். உங்களால் அளவோடு உண்ண முடியும் என்றால் என்னாலும் என் கிராமத்தில் நிம்மதியாக வாழமுடியும். அது உங்களுக்குச் சாத்தியமில்லை என்றால் என் பசி கோபமாக மாறுவதைத் தடுப்பதும் சாத்தியமில்லை. சுருங்கியிருக்கும் என் மக்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு உங்கள் நகரங்களுக்குதான் நான் வர வேண்டியிருக்கும். அங்குள்ளதை எடுத்து அவர்களுக்குச் சாப்பிடக் கொடுக்க வேண்டியிருக்கும்.

பிறகு வீட்டைக் காணவில்லை ரயிலைக் காணவில்லை என்று என்னிடம் சண்டைக்கு வராதீர்கள், ஆமாம்.

(மஹாஸ்வேதா தேவி எழுதிய ஒரு வங்க மொழிக் கதையிலிருந்து வளர்ந்த கதை இது.)

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x