Published : 18 Dec 2019 10:02 AM
Last Updated : 18 Dec 2019 10:02 AM
பாரம்பரியமான நினைவுச் சின்னங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கும் பாதுகாப்பதற்கும் யுனெஸ்கோ ‘உலகப் பாரம்பரிய வாரம்’ என்ற நிகழ்ச்சியை ஒவ்வோர் ஆண்டும் நடத்துகிறது. நவம்பர் 19 முதல் 24 வரை நடைபெறும் இந்தப் பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டு தமிழ்நாடு சுற்றுலாத் துறையும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் இணைந்து, ‘நமது பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் போட்டி அறிவித்திருந்தன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் ‘தங்களுக்குப் பிடித்த’ வரலாற்றுச் சின்னங்களை எழுதி அனுப்பியிருந்தனர்.
இவற்றில் தஞ்சை பெரிய கோயிலும் மாமல்லபுரமும் அதிக மாணவர்களைக் கவர்ந்த இடங்களாக இருந்தன. செஞ்சிக் கோட்டை, கங்கை கொண்ட சோழபுரம், தரங்கம்பாடி கோட்டை, பூம்புகார் என்று பல்வேறு இடங்கள் மாணவர்களின் விருப்பத்துக்குரியனவாக இருந்தன. இவற்றிலிருந்து 20 மாணவர்கள் பாரம்பரியச் சுற்றுலாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
டிசம்பர் 10 அன்று பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் வந்துசேர்ந்தனர். தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் இயக்குநர் அமுதவல்லி மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கி, கொடி அசைத்து, சுற்றுலாவைத் தொடங்கி வைத்தார். குளிர்சாதன வசதிகொண்ட பேருந்தில் மாணவர்கள் உற்சாகத்துடன் அமர்ந்திருந்தனர். தங்களைப் பற்றிய அறிமுகத்தையும் எதைப் பற்றி எழுதியிருந்தார்கள் என்பதையும் பகிர்ந்துகொண்டார்கள். அதுவரை இருந்த தயக்கம் விலகி, எல்லோரும் நண்பர்களானார்கள்.
நீண்ட பயணத்துக்குப் பிறகு, சாளுவன்குப்பம் புலிக்குகையில் பேருந்து நின்றது. ”பல்லவ மன்னர் ராஜசிம்மன் காலத்தில் இந்தப் பாறையில் யாளிகளின் சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறது. பாறையின் நடுவே விரிசல் வந்தவுடன் தொடர்ந்து செதுக்குவதைக் கைவிட்டுவிட்டனர். இது எதற்காக அமைக்கப்பட்டது என்ற காரணம் இன்னும் சரியாகத் தெரியவில்லை. அருகிலேயே குடைவரை கோயில் ஒன்று இருக்கிறது. அதில் சிவலிங்கம் ஒன்றும் சிவன், பார்வதி, முருகன் சிற்பங்களும் இருக்கின்றன. தமிழ் எழுத்துகள் இருக்கின்றன” என்று தொல்லியல் ஆய்வாளர் விஜய் சொன்னவுடன் எல்லோரும் அதைப் படிக்க முயன்றனர்.
மாணவர்கள் கேள்வி கேட்பதும் குறித்துக் கொள்வதுமாக ஆர்வத்துடன் உரையாடினர். புலிக்குகைக்கு அருகிலேயே சுனாமியின்போது வெளிப்பட்ட செங்கற்கள் இருந்த பகுதியைத் தோண்டியபோது, பல்லவர் காலத்துக்கு முற்பட்ட பழமையானதாகக் கருதப்படும் முருகன் கோயிலின் எஞ்சிய பகுதிகளைப் பார்த்தனர்.
இனிப்புடன் கூடிய சுவையான மதிய உணவுக்குப் பிறகு, கடற்கரை கோயிலை அடைந்தனர். சென்னையைச் சேர்ந்த 6 மாணவர்கள் முதல் முறை மாமல்லபுரத்தைப் பார்த்த பிரமிப்பு அவர்களது முகத்தில் தெரிந்தது. தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட முதல் கட்டுமானக் கோயில், தென்னிந்தியாவில் கற்களால் கட்டப்பட்ட கோயில்களில் மிகவும் பழமை வாய்ந்தது இது என்பதை அறிந்து எல்லோருக்கும் ஆச்சரியம்.
அடுத்தது பஞ்சரதம் பகுதிக்குச் சென்றனர். திமிங்கிலம் போன்ற ஒரே பாறையை 5 துண்டுகளாகப் பிரித்து வடித்திருப்பதால் பஞ்சரதம் என்று அழைக்கின்றனர். பஞ்சபாண்டவர் ரதம் என்று அழைத்தாலும் பாண்டவர்களுக்கும் இந்தக் கோயில்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் ‘மகாபலிபுரம்’ என்பது சரியல்ல, ’மாமல்லபுரம்’ என்பதே சரியானது எனவும் மாணவர்கள் தெரிந்துகொண்டனர்.
சென்னை ஷெனாய் நகர் சுப்பராயன் அரசு மேல்நிலைப் பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவர் மதன்குமார், “நான் போட்டியில் வெற்றி பெற்றதை நானும் என் குடும்பமும் நம்பவில்லை. ஏனென்றால் என் கையெழுத்து நல்லா இருக்காது. நான் எழுதிய விஷயத்துக்காகத்தான் தேர்வானேன் என்பதில் மகிழ்ச்சி. மாமல்லபுரம் ஏற்கெனவே பார்த்தது தானே என்று நினைத்தேன். இவ்வளவு நாளா எவ்வளவு விஷயங்களைத் தெரிந்துகொள்ளாமல் இருந்துவிட்டேன் என்று புரிந்தது. இந்தச் சுற்றுலா மூலம் வரலாற்றுச் சின்னங்கள் மீதுள்ள மதிப்பு உயர்ந்துவிட்டது” என்றார்.
உத்திரமேரூர் அருகில் இருக்கும் மருதம் கிராமத்து நடுநிலைப் பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவி காவ்யா, “நான் போட்டிகளில் கலந்துகொண்டு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வாங்கியிருக்கிறேன். இந்தப் போடியில் தேர்வானதில் எல்லையில்லா மகிழ்ச்சி. காலை 4 மணிக்கு எழுந்து, சுற்றுலாவுக்காக வந்தேன். நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தேன்.
இந்த நாளை மறக்க மாட்டேன்” என்கிறார். கல்பாக்கம் அணு ஆற்றல் மத்தியப் பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி தர்ஷினி, “காலையில் வரும்போது யாரையும் தெரியாது. இப்போதோ ஏகப்பட்ட நண்பர்களைப் பெற்றுவிட்டேன். சதுரங்கப்பட்டினம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் கல்பாக்கம் அருகிலேயே இருக்கிறது. அதைப் பற்றி நான் அவ்வளவாக நினைத்ததில்லை. இந்தச் சுற்றுலா மாமல்லபுரத்தை மட்டுமல்ல, சதுரங்கப்பட்டினத்தின் மதிப்பையும் உயர்த்திவிட்டது. இனி என் பார்வை வித்தியாசமாக இருக்கும்” என்கிறார்.
“எனக்குச் சென்னையிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள் மீது ஆர்வம் கிடையாது. எங்கள் ஊரிலுள்ள செஞ்சிக் கோட்டை மீதுதான் அளவற்ற மதிப்பு உண்டு. அதைத்தான் எழுதினேன். இந்தச் சுற்றுலா என் எண்ணத்தை மாற்றிவிட்டது. ஒவ்வொரு வரலாற்றுச் சின்னமும் முக்கியமானது என்பதைப் புரிந்துகொண்டேன்” என்கிறார் சென்னை கிருஷ்ணசாமி மேல்நிலைப் பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி த்ரிஷா.
சென்னை நவதிஷா மாண்டிசோரி பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் சிவி நந்தன், “இப்படி ஒரு பயண அனுபவத்தை நான் எதிர்பார்க்கவில்லை. வரலாற்றில் படித்த விஷயங்களை நேரில் பார்க்கும்போது பரவசமாக இருந்தது. நண்பர்களிடமும் பள்ளியிலும் என் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வேன்” என்றார். விளக்கு ஒளியில் அர்ஜுனன் தபசு பார்த்துவிட்டு புறப்பட்டபோது, கிருஷ்ணர் வெண்ணெய் உருண்டை உட்பட இன்னும் பல இடங்களைப் பார்க்க வேண்டும் என்றார்கள் மாணவர்கள்.
அவர்களின் பெற்றோர் காத்திருக்கிறார்கள் என்பதை நினைவூட்டி, பேருந்தில் ஏற்றினோம். அனுபவப் பகிர்வு, பாட்டு, நடனம் என்று காலையில் புறப்பட்டபோது இருந்த அதே உற்சாகத்துடன் நிறைவடைந்தது இந்தப் பாரம்பரியச் சுற்றுலா. இந்த நாள் ஒவ்வொரு மாணவரின் மனதிலும் மறக்க முடியாத நாளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நிகழ்ச்சியின் மீடியா பார்ட்னர் ரேடியோ சிட்டி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT