Published : 04 Dec 2019 12:20 PM
Last Updated : 04 Dec 2019 12:20 PM

கணிதப் புதிர்கள் 12: காட்டுக்குள் தியானம்

என். சொக்கன்

அடுத்த வெள்ளிக்கிழமை, ராஜனும் வேலனும் காட்டுக்குப் போகிறார்கள். அங்கு கூடாரம் அமைத்துத் தங்கப் போகிறார்கள். இரண்டு நாட்கள் எந்தத் தொந்தரவும் இல்லாமல் இயற்கை எழிலை அனுபவிக்கப் போகிறார்கள்.

ராஜனுக்கு இது நன்றாகப் பழகிய விஷயம்தான். அவர் ஏற்கெனவே இதுபோல் பலமுறை காட்டுக்குச் சென்றிருக்கிறார். அந்தச் சுவையான அனுபவங்களை எல்லாம் அவ்வப்போது நண்பர் களிடம் விவரிப்பார்.

அவர்களும் வியப்போடு கேட்டுக்கொள்வார்கள்.இப்படி ராஜன் சொல்லும் ‘கானகக் கதை’களை எல்லாம் அடிக்கடி கேட்டு அசந்து போன வேலன், ‘‘இந்தத் தடவை என்னையும் உங்களோட அழைச்சுட்டுப் போங்க” என்று அவரோடு சேர்ந்துகொண்டார்.

வேலனுக்குள் காட்டுக்குச் செல்கி றோம் என்ற மகிழ்ச்சி ஏராளமாக இருந்தது; அதேநேரம், அங்கு என்ன மாதிரியான அனுபவங்கள் தனக்குக் கிடைக்குமோ என்கிற அச்சமும் இருந்தது. இதைப் புரிந்துகொண்ட ராஜன், கலகலப்பாகப் பேசி அவருடைய அழுத்தத்தைக் குறைக்க முயன்றார். ‘‘நீங்க நினைக்கிற மாதிரி அந்தக் காட்டுல சிங்கம், புலி எல்லாம் இருக்காது வேலன், பயப்படாதீங்க.”

‘‘அது தெரியுது ராஜன், ஆனாலும் கொஞ்சம் உதறலாதான் இருக்கு.” ‘‘வேலன், சின்ன வயசுலே இருந்தே, காடுன்னா ரொம்பப் பயங்கரமான இடம்னுதான் நாம படிச்சிருக்கோம். அதனால் காட்டின் மேல் நமக்கு அச்சம் வந்துடுது. உண்மையில காடுங்கறது ரொம்ப அமைதியான இடம். அது நமக்குப் பழகாத பகுதிங்கறதால, கொஞ்சம் எச்சரிக்கையோட இருக்கறதுல தப்பில்லை, அதேநேரம் பயந்து நடுங்கவும் வேண்டியதில்லை. அங்கிருக்கிற விலங்குகளை நாம தொந்தரவு செய்யாதவரை அதுங்க நம்மைத் தொந்தரவே செய்யாது” ” என்று விளக்கினார் ராஜன்.

உண்மைதான் என்பதுபோல் தலையசைத்தார் வேலன். அவருடைய தோளைத் தட்டிக்கொடுத்து, ‘‘நான் சொல்றதை நம்புங்க, நீங்க காட்டைப் பத்தி அச்சப்பட வேண்டாம்; திறந்த மனத்தோட வாங்க, இயற்கையை நல்லா ரசிக்கலாம்” என்றார் ராஜன். அடுத்தடுத்த நாட்களில், காட்டைப் பற்றி இன்னும் பல விஷயங்களை வேலனுக்குச் சொன்னார் ராஜன். அதன்மூலம் வேலனுடைய அச்சம் குறைந்து ஆர்வம் அதிகரித்தது. காட்டுக்குள் செல்லத் தயாராகிவிட்டார்.

வெள்ளிக்கிழமை அதிகாலை, அவர்கள் ஆளுக்கு ஒரு பையுடன் புறப்பட்டார்கள். குறிப்பிட்ட பகுதி வரை பேருந்தில் சென்றார்கள், அங்கிருந்து காட்டுக்குள் நடந்தார்கள். அடுத்த சில மணிநேரத்துக்கு அவர்கள் மெதுவாக நடந்துகொண்டே இருந்தார்கள். ஒவ்வோர் இடத்தை யும் வேலனுக்கு விரிவாக விளக்கிச் சொன்னார் ராஜன். அவர்கள் பல அரிய செடிகள், மரங்கள், பறவைகள், விலங்குகளை எல்லாம் பார்த்து ரசித்தார்கள்.

அவர்கள் தங்குவதற்காக, இயற்கை எழில் நிறைந்த ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்திருந்தார் ராஜன். மாலை நேரத்தில் அவர்கள் அங்கு சென்றடைந்தார்கள், கூடாரம் அமைத்தார்கள். அதற்கு வெளியில் அமர்ந்துகொண்டார்கள்.‘‘வேலன், நான் ஒரு மணி நேரம் தியானம் செய்யப் போறேன். நீங்க தனியா ரொம்பத் தூரம் போயிட வேண்டாம்” என்றார் ராஜன்.

‘‘நான் எங்கேயும் போகலை. இங்கேயே உட்கார்ந்து புத்தகம் படிக்கப் போறேன்”என்று சிரித்தார் வேலன். உடனே, ராஜன் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்தார். அதன்முன் அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கினார். வேலன் ஒரு புத்தகத்தைப் பிரித்துப் படிக்கலானார். அவர் சுமார் ஐம்பது பக்கங்கள் படித்திருந்தபோது, ராஜன் தியானம் கலைந்து எழுந்தார், வேலனைப் பார்த்துச் சிரித்தார்.

‘‘அவ்ளோதானா? அதுக்குள்ள ஒரு மணிநேரம் ஆயிடுச்சா?’ என்று வியந்தார் வேலன். ஆமாம் என்பது போல் தலை அசைத்தார் ராஜன். ‘‘அது எப்படி உங்களுக்குத் தெரியும்? நம்ம ரெண்டு பேர்கிட்ட யும் கடிகாரம் இல்லை, மொபைல் போனையும் அணைச்சு வெச்சிருக் கோம். மாலை நேரமாகிட்டதால, நிழலைப் பார்த்து நேரம் சொல்றதும் சாத்தியமில்லை.”

ராஜன் சிரித்தார். ‘‘அதெல்லாம் இல்லாட்டி என்ன? இந்த மெழுகு வர்த்தி இருக்கே” என்று தனக்கு முன்னால் எரிந்து அணைந்திருந்த மெழுகுவர்த்தியைக் காட்டினார். ‘‘இந்த மெழுகுவர்த்தி சரியா ஒரு மணிநேரத்துக்கு எரியும். நான் எப்பவும் இதை ஏத்திவெச்சுட்டுத் தியானத்தைத் தொடங்குவேன், அது எரிஞ்சு அணைஞ்சதும் எழுந்துடுவேன்! இதுக்காக எப்பவும் அஞ்சாறு மெழுகுவர்த்திகளைக் கைவசம் வெச்சிருப்பேன்.”

‘‘ஒரு மணிநேரம், ஒரு மெழுகுவர்த்தி, கலக்கறீங்க ராஜன். ஆனால், ஒருவேளை, என்னிக்காவது நீங்க 45 நிமிஷம் தியானம் செய்ய வேண்டியிருந்தா என்ன செய்வீங்க?” என்றார் வேலன். ராஜன் சிறிது யோசித்தார். ‘‘இதே மெழுகுவர்த்திகளை வெச்சு அதையும் கணக்கிடலாம்” என்றார். ‘‘எப்படி? மெழுகுவர்த்தியை முக்கால் அளவுக்கு வெட்டிடுவீங்களா?”

‘‘ம்ஹூம், வெட்டாமலே கண்டுபிடிக்கலாம். எப்படின்னு கொஞ்சம் யோசிங்க, அதுக்குள்ள நம்ம ரெண்டு பேருக்கும் நான் ஏதாவது சமைக்கறேன்” என்று கூடாரத்துக்குள் சென்றார். ஒரு மணி நேரம் எரிகிற மெழுகு வர்த்திகளை வெட்டாமல் முக்கால் மணி நேரத்தை அளவிடுவது எப்படி? வேலன் குழப்பத்துடன் யோசிக்கத் தொடங்கினார். நீங்கள் அவருக்கு உதவுவீர்களா?

(அடுத்த வாரம், இன்னொரு புதிர்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: nchokkan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x